கோவையில் கல்லூரி மாணவியின் நிர்வாண வீடியோவை காட்டி மிரட்டல்: சேலத்தைச் சேர்ந்த இருவர் கைது!

Published On:

| By Pandeeswari Gurusamy

கோவையில் கல்லூரி மாணவி ஒருவரின் தனிப்பட்ட வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில், சேலத்தைச் சேர்ந்த இரு இளைஞர்களை கோவில்பாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் உள்ள ஒரு பெண்கள் விடுதியில் தங்கி கல்லூரி மாணவி ஒருவர் படித்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் மூலம் சேலம் அருகே உள்ள மேச்சேரியைச் சேர்ந்த அருணாச்சலம் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பொறியியல் படிப்பைப் பாதியில் நிறுத்திய அருணாச்சலம், மாணவியிடம் உதவி செய்வது போல நடித்து அவரது நம்பிக்கையைப் பெற்றுள்ளார். நாளடைவில் இந்த பழக்கம் நெருக்கமாக மாறவே, இருவரும் அடிக்கடி வீடியோ காலில் பேசி வந்துள்ளனர்.

ADVERTISEMENT

இதற்கிடையே, மாணவி தனது நகையை அடகு வைத்துப் பணம் பெற்றுத் தருமாறு அருணாச்சலத்திடம் கேட்டுள்ளார். அதன்படி, 60 ஆயிரம் ரூபாய்க்கு நகையை அடகு வைத்த அருணாச்சலம், அதில் 30 ஆயிரம் ரூபாயை மட்டுமே மாணவியிடம் கொடுத்துவிட்டு ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. இந்த பண விவகாரத்தில் மாணவிக்குச் சந்தேகம் வராமல் இருக்க, கட்டிட வேலை செய்து வந்த தனது நண்பன் சந்தோஷின் செல்போன் எண்ணை, “பைனான்ஸ் மேனேஜர் எண்” என்று கூறி மாணவியிடம் கொடுத்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் தொடங்கிய இந்தத் தொடர்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனைப் பயன்படுத்திக் கொண்ட அருணாச்சலமும், சந்தோஷும் மாணவியுடன் அடிக்கடி வாட்ஸ்அப் வீடியோ காலில் பேசியுள்ளனர். அப்போது, தங்களுக்குள் நடந்த உரையாடல்களை மாணவிக்குத் தெரியாமல் வீடியோ பதிவு செய்து வைத்துள்ளனர்.

ADVERTISEMENT

தொடர்ந்து, அந்தத் தனிப்பட்ட வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாகக் கூறி, மாணவியைக் மிரட்டி இருவரும் பணம் கேட்டுப் பணம் பறிக்க முயன்றுள்ளனர். இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான மாணவி விடுதியிலேயே முடங்கியுள்ளார்.

மாணவியின் மாற்றத்தைக் கண்டு சந்தேகமடைந்த அவருடன் விடுதியில் தங்கியிருந்த மற்றொரு பெண், இதுகுறித்து விபரம் கேட்டுள்ளார். பின்னர், பாதிக்கப்பட்ட மாணவியை அழைத்துக்கொண்டு கோவில்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ADVERTISEMENT

புகாரின் பேரில் உடனடியாகக் களமிறங்கிய தனிப்படை போலீசார், சேலம் மாவட்டம் மேச்சேரிக்கு விரைந்து சென்று அருணாச்சலம் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரையும் அதிரடியாகக் கைது செய்தனர். அவர்கள் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share