2025இல் 1,318 வெறுப்புப் பேச்சு நிகழ்வுகள் அரங்கேறின. அவற்றில் 98% முஸ்லிம்களைக் குறிவைத்தவை.
ஷர்மிதா கர்
புதிய ‘இந்தியா ஹேட் லேப்’ (India Hate Lab) அறிக்கையின்படி, 2025ஆம் ஆண்டில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் முழுவதும் மதச் சிறுபான்மையினரை, குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களை இலக்கு வைத்து குறைந்தது 1,318 வெறுப்புப் பேச்சு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. சராசரியாக, ஒரு நாளைக்கு நான்கு வெறுப்புப் பேச்சு நிகழ்வுகள் நடந்துள்ளன.
இது 2024ஆம் ஆண்டை விட 13%அதிகம். 2023ஆம் ஆண்டு 668 சம்பவங்கள் பதிவாயின. அதைக் காட்டிலும் இது 97% அதிகமாகும்.
100 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில், மொத்தம் 1,289 பேச்சுகள் (அதாவது 98%) முஸ்லிம்களை இலக்கு வைத்துள்ளதாக இந்தியா ஹேட் லேப் விவரித்துள்ளது. இதில் 1,156 நிகழ்வுகளில் முஸ்லிம்கள் நேரடியாக இலக்கு வைக்கப்பட்டனர்; மற்ற 133 நிகழ்வுகளில் முஸ்லிம்களுடன் சேர்த்து கிறிஸ்தவர்களும் இலக்கு வைக்கப்பட்டனர். இது 2024இல் பதிவான 1,147 நிகழ்வுகளை விட சுமார் 12% அதிகமாகும்.
162 நிகழ்வுகளில் வெறுப்புப் பேச்சுகள் கிறிஸ்தவர்களை இலக்கு வைத்திருந்தன. இது மொத்த வெறுப்புப் பேச்சு நிகழ்வுகளில் 12% ஆகும். இதில் 29 நிகழ்வுகளில் நேரடியாகவும், 133 நிகழ்வுகளில் முஸ்லிம்களுடன் சேர்த்தும் அவர்கள் இலக்கு வைக்கப்பட்டனர்.
2024ஆம் ஆண்டில் ஆவணப்படுத்தப்பட்ட 115 கிறிஸ்தவ எதிர்ப்பு வெறுப்புப் பேச்சு சம்பவங்களுடன் ஒப்பிடும்போது, இது சுமார் 41% அதிகரிப்பாகும். இது கவலையளிக்கும் மாற்றத்தைக் காட்டுகிறது.
சமீபத்தில், அமெரிக்க ஹோலோகாஸ்ட் அருங்காட்சியகம் வெளியிட்ட வருடாந்திர உலகளாவிய ஆய்வு, உள்நாட்டுப் படுகொலைகள் (intrastate mass killings) நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ள 168 நாடுகளில் இந்தியாவை நான்காவது இடத்தில் வைத்துள்ளது. மிக முக்கியமாக, பெரிய அளவிலான வன்முறைகளை இன்னும் சந்திக்காத, ஆனால் அத்தகைய அபாயத்தை எதிர்நோக்கியுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
பாஜக ஆளும் மாநிலங்களில் அதிக வெறுப்புப் பேச்சுகள் பதிவு
2025இல் உத்தரப் பிரதேசம் 266 நிகழ்வுகளுடன் முதலிடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரம் (193), மத்தியப் பிரதேசம் (172), உத்தரகண்ட் (155), தில்லி (76) ஆகியவை உள்ளன.
உத்தரப் பிரதேசத்தில் ஹோலி பண்டிகைக்கு முன்னதாக, மாநில பாஜக தலைவர் ரகுராஜ் சிங் பேசுகையில், ஹோலி கொண்டாட்டங்களின்போது அசௌகரியத்தைத் தவிர்க்க முஸ்லிம் ஆண்கள் “தங்களுக்குத் தாங்களே தார்ப்பாய் கொண்டு ஹிஜாப் செய்துகொள்ள வேண்டும்” என்று கூறினார்.
ஆய்வு செய்யப்பட்ட 23 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில், 1,164 வெறுப்புப் பேச்சு சம்பவங்கள் (88%) பாரதிய ஜனதா கட்சி (பாஜக) நேரடியாகவோ அல்லது கூட்டணியாகவோ ஆட்சி செய்யும் மாநிலங்களிலும், பாஜக நிர்வகிக்கும் யூனியன் பிரதேசங்களிலும் நடந்துள்ளன என்று அறிக்கை கூறுகிறது.

இது 2024ஆம் ஆண்டில் பதிவான 931 சம்பவங்களை விட 25% அதிகரிப்பாகும்.
அறிக்கையின்படி, உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி 71 பேச்சுகளுடன் 2025ஆம் ஆண்டில் அதிக வெறுப்புப் பேச்சுகளைப் பேசியவராக உருவெடுத்துள்ளார். அவரைத் தொடர்ந்து சர்வதேச இந்து பரிஷத் தலைவர் பிரவின் தொகாடியா (46), பாஜக தலைவர் அஸ்வினி உபாத்யாய (35) ஆகியோர் உள்ளனர்.

“லவ் ஜிகாத்”, “லேண்ட் ஜிகாத்”, “துக் (உமிழ்நீர்) ஜிகாத்” போன்ற சதிக் கோட்பாடுகளைப் பொதுமக்களிடையே கொண்டுசென்றதற்காக தாமி செய்திகளில் இடம்பிடித்தார். அவரது ஆட்சியின் கீழ், உத்தராகண்டில் “சட்டவிரோத ஆக்கிரமிப்பு” அகற்றுதல் என்ற பெயரில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் இடிக்கப்படுவதும், அரசு வன்முறைகளும், பாரபட்சமான நிர்வாகமும் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.
மகாராஷ்டிர அமைச்சரும் பாஜக தலைவருமான நிதேஷ் ரானேவும் வன்முறையைத் தூண்டும் முதல் ஐந்து நபர்களில் ஒருவராக இடம்பெற்றுள்ளார். ஒரு நிகழ்வில், தான் இந்துக்களின் “கப்பர்” என்று கூறிக்கொண்ட அவர் முஸ்லிம்களுக்கு எதிராக அவதூறான சொற்களைப் பயன்படுத்தினார். மற்றொரு நிகழ்வில், முஸ்லிம்களை “ஜிகாதிகள்”, “பச்சைப் பாம்புகள்” என்று குறிப்பிட்ட அவர், “இந்து ராஷ்டிரத்தில்” அனைத்து மதங்களும் சமமானவை அல்ல, ஏனெனில் “இந்துக்களுக்கே முதலிடம்” என்று அறிவித்தார்.

எதிர்க்கட்சிகள் ஆளும் ஏழு மாநிலங்களில் 2025இல் 154 வெறுப்புப் பேச்சு நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவும் 40 நிகழ்வுகளுடன் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளது.
மேற்கு வங்கத்தில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர்களை ஈர்க்க எதிர்க்கட்சியான பாஜக வெறுப்புப் பேச்சை ஒரு வழிமுறையாகப் பயன்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம், மாநில எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி பேசுகையில், தனது கட்சி அடுத்த ஆட்சியை அமைத்த பிறகு “முஸ்லிம் எம்.எல்.ஏக்களை சட்டப்பேரவையில் இருந்து வெளியே தூக்கி எறிவேன்” என்று கூறினார்.

இருப்பினும், ஒட்டுமொத்தமாக, 2024இல் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் பதிவான 234 சம்பவங்களுடன் ஒப்பிடும்போது இது 34% குறைவுதான்.
சுமார் 656 வெறுப்புப் பேச்சுகள் (சுமார் 50%) “லவ் ஜிகாத்”, “லேண்ட் ஜிகாத்”, “மக்கள் தொகை ஜிகாத்”, “துக் (உமிழ்நீர்) ஜிகாத்”, “கல்வி ஜிகாத்”, “போதைப்பொருள் ஜிகாத்” மற்றும் “ஓட்டு ஜிகாத்” உள்ளிட்ட சதிக் கோட்பாடுகளைக் குறிப்பிட்டுள்ளன. இது முந்தைய ஆண்டை விட 13% அதிகரிப்பாகும்.
மொத்தம் 308 பேச்சுகள் (23%) வெளிப்படையான வன்முறைக்கு அழைப்பு விடுத்தன. 136 பேச்சுகள் ஆயுதம் ஏந்த நேரடியாக அழைப்பு விடுத்தன. வன்முறைக்கான அழைப்புகள் 19% அதிகரித்த அதே வேளையில், சமூக அல்லது பொருளாதாரப் புறக்கணிப்புக்கான அழைப்புகள் 2024 முதல் 8% அதிகரித்துள்ளன.
கவலையளிக்கும் போக்கு
“2024இல் வெறுப்புப் பேச்சு அதிகரித்ததைத் தொடர்ந்து, 2025இல் அது மேலும் உயர்ந்தது. இது இந்தியாவின் அரசியல், சமூக நிலப்பரப்பில் மதவாத பேச்சு வழக்கமான அம்சமாக ஆழமாக வேரூன்றியிருப்பதைக் காட்டுகிறது” என்று இந்தியா ஹேட் லேப் அறிக்கை குறிப்பிடுகிறது.
“இந்த அதிகரிப்பு இந்தியாவின் அரசியல் நிலப்பரப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது. இதில் ஆவேசமான பேச்சுகள் தேர்தல் சார்ந்த தந்திரத்திலிருந்து மாறி, அரசியல் நிர்வாகத்தின் ஒரு சாதாரணமான, தொடர்ச்சியான செயல்பாடாகப் பரிணமித்துள்ளது. இத்தகைய பேச்சுகள் இப்போது தீவிர வலதுசாரி இந்துத்துவ அணிதிரட்டலுக்கான முழுநேரக் கருவியாகச் செயல்படுகின்றன” என்று அது மேலும் கூறுகிறது.
2023, 2024ஆம் ஆண்டுகளில் வெறுப்புப் பேச்சுகளை முன்னெடுப்பதில் முக்கியப் பங்காற்றிய விஸ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி), அதன் இளைஞர் பிரிவான பஜ்ரங் தளம் ஆகிய இரு அமைப்புகளும் 2025இல் அதிகப்படியான வெறுப்புப் பேச்சு நிகழ்வுகளை ஒருங்கிணைத்துள்ளன. அவை இத்தகைய 289 கூட்டங்களை நேரடியாக நடத்தின அல்லது ஏற்பாடு செய்துகொடுத்தன. இது மொத்த நிகழ்வுகளில் 22% ஆகும்.
ஏப்ரல் மாதம் 158 வெறுப்புப் பேச்சு நிகழ்வுகள் நடைபெற்றன. மாதாந்தர அளவில் இதுவே அதிகம். இது ராம் நவமி ஊர்வலங்களின்போது நடைபெற்றது. கடந்த சில ஆண்டுகளாக, ராம் நவமி சமயத்தில் முஸ்லிம் பகுதிகள் வழியாக இந்து ஊர்வலங்களைத் திட்டமிட்டு நடத்துவதால் மதக்கலவரங்கள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது.

2025, ஏப்ரலில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக வெறுப்புப் பேரணிகள் ஒருங்கிணைக்கப்பட்டன. ஏப்ரல் 22 முதல் மே 7 வரையிலான 16 நாட்களில், பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவியபோது, 98 நேரடி வெறுப்புப் பேச்சு நிகழ்வுகள் ஆவணப்படுத்தப்பட்டன.
ஆண்டு முழுவதும், சிறுபான்மையினர் “கறையான்கள்”, “ஒட்டுண்ணிகள்”, “பூச்சிகள்”, “பன்றிகள்”, “வெறிநாய்கள்”, “பாம்புக் குட்டிகள்”, “பச்சைப் பாம்புகள்”, “இரத்தவெறி பிடித்த ஜோம்பிகள்” போன்ற சொற்களால் விவரிக்கப்பட்டனர் – இவற்றில் பெரும்பாலானவை முஸ்லிம்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டன.
மேற்குவங்க முஸ்லிம்களை, குறிப்பாக புலம் பெயர்ந்த தொழிலாளர்களை “வங்காள தேசிகள்” என்று கூறி இலக்கு வைப்பது குறித்து ‘தி வயர்’ (The Wire) விரிவாகச் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியா ஹேட் லேப் அறிக்கை “வங்காளதேச ஊடுருவல்காரர்கள்” என்ற பதத்தைப் பயன்படுத்திய 192 பேச்சுகளைப் பதிவு செய்துள்ளது. மேலும், 69 வெறுப்புப் பேச்சு நிகழ்வுகள் ரோஹிங்கியா அகதிகளை இலக்கு வைத்தன.
மொத்தம் 120 வெறுப்புப் பேச்சுகள் சிறுபான்மைச் சமூகங்களை, குறிப்பாக முஸ்லிம்களை சமூக அல்லது பொருளாதார ரீதியாகப் புறக்கணிக்க அழைப்பு விடுத்தன. 276 பேச்சுகள் மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களை அகற்றவோ அல்லது அழிக்கவோ அழைப்பு விடுத்தன.
2025இல் உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஞானவாபி மசூதி மற்றும் ஷாஹி இத்கா மசூதி ஆகியவை அடிக்கடி இலக்கு வைக்கப்பட்டன. கிறிஸ்துமஸ் காலத்திலும் வன்முறை அதிகரித்தது; கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுவதும் பிரார்த்தனைக் கூட்டங்கள் சீர்குலைக்கப்படுவதும் அதிகரித்துள்ளன.

பாஜக தலைமையிலான மத்திய அரசு, அதிகரித்து வரும் மதப் பிரிவினை அல்லது வெறுப்புப் பேச்சுகள் குறித்து மௌனம் காத்துவருகிறது. நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தரவுகளை வழங்க மறுத்துவிட்டார். ‘பொது ஒழுங்கு’, ‘காவல்துறை’ ஆகியவை மாநில விவகாரங்கள் என்பதால், அனைத்துப் பொறுப்பையும் மாநில அரசுகளிடமே அவர் ஒப்படைத்தார்.
உச்ச நீதிமன்றமும் 2025ஆம் ஆண்டில் ஒருவிதக் கட்டுப்பாட்டை வெளிப்படுத்தியது. நவம்பர் மாதம், உச்ச நீதிமன்ற அமர்வு ஒன்று, நாடு முழுவதும் நடக்கும் ஒவ்வொரு வெறுப்புப் பேச்சு சம்பவத்தையும் கண்காணிக்கத் தாங்கள் விரும்பவில்லை என்று கூறி, மனுதாரர்களை உயர் நீதிமன்றங்களையும் உள்ளூர் காவல்துறையையும் அணுகுமாறு அறிவுறுத்தியது.
சிறிய நம்பிக்கைக் கீற்று
வரவேற்கத்தக்க மாற்றமாக, கர்நாடக அரசு “கர்நாடக வெறுப்புப் பேச்சு, வெறுப்புக் குற்றங்கள் (தடுப்பு) மசோதா, 2025″-வை இயற்றியது. இது வெறுப்புப் பேச்சை முறையாக வரையறுத்து தண்டிக்க இந்தியாவில் மாநில அளவில் எடுக்கப்பட்ட முதல் விரிவான முயற்சியாகும்.
இந்த மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் வெறுப்புக் குற்றங்களுக்கு 50,000 ரூபாய் அபராதத்துடன் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கிறது.
இந்தியா ஹேட் லேப் அறிக்கையின்படி, இத்தகைய நடவடிக்கை “முக்கியமான சட்டமன்றத் தருணம்” ஆகும். தேசிய அளவில் வெறுப்புப் பேச்சுகள் தடையின்றித் தொடரும் வேளையில், மாநில அளவில் இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை அங்கீகரிக்கும் ஒரு முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
