வைஃபை ஆன் செய்ததும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் ஏப்ரல் 10 காலை அளித்த செய்தியாளர் சந்திப்பு வீடியோவும் அதுகுறித்து பாமகவினர் சமூக தளங்களில் வெளியிட்ட கருத்துக்களும் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துக் கொண்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்த நிலையில்… அன்று காலை தைலாபுரம் தோட்டத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு மூலம் பாட்டாளி மக்கள் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெறுமா என்ற விவாதங்களையும் ராமதாஸ் வெளியிட்ட அறிவிப்பு ஏற்படுத்தியது. rift between Ramadoss-Anbumani full backround
இனி பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும் நானே தலைவரும் நானே. தலைவராக இப்போது இருக்கிற அன்புமணி இனி செயல் தலைவர் என நியமிக்கப்படுகிறார்.
இப்போதுதான் நான் தலைவராகி இருக்கிறேன். யாருடன் கூட்டணி என்பது பற்றி நிர்வாக குழு மாவட்ட செயலாளர்களுடன் பேசி முடிவு செய்வோம் என்று ராமதாஸ் அறிவித்தார்.

டாக்டர் ராமதாசுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையிலே சில வருடங்களாகவே நீறுபூத்த நெருப்பாக நெருடல்கள் இருந்த போதும்… கடந்த 2024 டிசம்பர் இறுதியில் நடந்த புத்தாண்டு பொதுக்குழு கூட்டத்தில் மேடையிலேயே மோதல் வெடித்தது. ராமதாஸின் பேரன் முகுந்தனை இளைஞர் அணி தலைவராக அவர் நியமிக்க, இதற்கு டாக்டர் அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். இந்த நியமனத்துக்கும் எதிர்ப்புக்கும் குடும்ப ரீதியான காரணங்கள் இருப்பதாக தைலாபுரம் வட்டாரத்தில் பேசப்பட்டது.
முகுந்தன் எப்போது கட்சிக்கு வந்தார் என அன்புமணி கேள்வி கேட்க, ‘இது என் கட்சி நான் எடுப்பதுதான் முடிவு இஷ்டம் இருந்தால் இரு இல்லைன்னா போ’என டாக்டர் ராமதாஸ் தனது மகன் அன்புமணியை மேடையிலேயே வைத்துக் கொண்டு எச்சரித்தார்.
இது நடந்து 3 மாதங்களான நிலையில் இப்போது திடீரென அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து விடுவித்து செயல் தலைவராக நியமித்துள்ளார்.
டாக்டர் ராமதாஸ் இந்த அறிவிப்பை வெளியிடும்போது அவரோடு பாமகவின் தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், விழுப்புரம் வடக்கு மாவட்ட பாமக செயலாளர் ஜெயராஜ் ஆகியோர் இருந்திருக்கிறார்கள். ஒவ்வொரு வியாழக்கிழமையும் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் பத்திரிக்கையாளர்களை சந்திப்பது வழக்கம். அப்படித்தான் ஏப்ரல் 10ஆம் தேதி வியாழக்கிழமை காலையும் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

இந்த சந்திப்பில் தன்னை தலைவர் பதவியில் இருந்து நீக்கி செயல் தலைவராக நியமிப்பார் என அன்புமணி உண்மையிலேயே எதிர்பார்க்கவில்லை. சென்னை கிழக்கு கடற்கரை சாலை அக்கரையில் இருக்கும் தன்னுடைய வீட்டில் இருந்த அன்புமணி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் பத்திரிக்கையாளர் சந்திப்பை பற்றி அறிந்து அதிர்ந்தார்.
உடனடியாக அவருக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் சில நிர்வாகிகள் போன் செய்தார்கள். அவர்களை நேரில் வரச் சொன்னார். நேரில் சென்ற அந்த நிர்வாகிகள், ‘பாட்டாளி மக்கள் கட்சியின் சட்ட விதிகளின்படி தலைவருக்கு தான் அதிகாரம் உண்டு. ஆனால் அந்த தலைவர் பதவியை மாற்றுவதற்கு நிர்வாக குழு பொதுக்குழு முடிவெடுக்க வேண்டும். ஆனால் திடீரென பத்திரிக்கையாளர்களை சந்தித்து இப்படி ஒரு முடிவை அறிவிப்பது கட்சிக்கு நல்லதல்ல, விதிப்படி சரியும் அல்ல. இதை எதிர்த்து நாம் கருத்து தெரிவிக்க வேண்டும். கட்சியின் எதிர்காலம்தான் இனி முக்கியம். பாமகவின் பொதுக்குழு கூட்டத்தை நீங்க கூட்டுவதாக அறிவியுங்கள்’ என்று சில நிர்வாகிகள் அன்புமணியிடம் கூற… இப்போது எதுவும் தெரிவிக்க வேண்டாம் என்று அவர்களிடம் வற்புறுத்தியுள்ளார்.
இதற்கிடையே பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளராக இருக்கக்கூடிய திண்டுக்கல் திலகபாமா தன்னுடைய சமூக தளப் பதிவில், ‘பாட்டாளி மக்கள் கட்சியில் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஐயா எடுத்த எல்லா முடிவுகளும் சரியே. அய்யாவின் அன்பினை ருசித்தவள் நான். ஆனால் இந்த முடிவு தவறு. அன்பு தானே எல்லாம்’என பதிவிட்டார். ஆனால் அவரைத் தொடர்ந்து முக்கியமான நிர்வாகிகள் யாரும் அன்புமணிக்கு ஆதரவாக பதிவிடவில்லை.
இப்படி திடீரென ராமதாஸ் குண்டை தூக்கி போட்டதற்கான காரணம் என்ன என விசாரித்த போது…
‘இன்று (ஏப்ரல்11 ) பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.
இதுகுறித்து ஏப்ரல் 9 இரவு டாக்டர் ராமதாஸ் அன்புமணியும் அலைபேசியில் உரையாடி இருக்கிறார்கள். rift between Ramadoss-Anbumani full backround
டிசம்பரில் நடந்த பொதுக்குழு கூட்டத்திலேயே நாம் ஒரு தவறு செய்து விட்டோம் என்று பாஜக கூட்டணியை தான் நான் மறைமுகமாக சொன்னேன். மீண்டும் நான் சொல்கிறேன், இப்போதைக்கு அமித்ஷாவை சென்று சந்திக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார் ராமதாஸ்.
ஆனால் அன்புமணியோ எப்படி தவிர்க்க முடியும் எனக் கேட்டுள்ளார்.
அதற்கு ராமதாஸ், ‘2021 இல் நாம் அதிமுகவோடு கூட்டணி வைத்து சில சட்டமன்ற உறுப்பினர்களை வெற்றி பெற்றோம். 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுக நம்மோடு கூட்டணி வைக்க விரும்பினார்கள். சி.வி சண்முகம் டெல்லியில் இருந்து அவசர அவசரமாக என்னை பார்க்க தைலாபுரம் தோட்டத்துக்கே வந்தார். எல்லாம் கனிந்து வந்த நேரத்திலே நீ (அன்புமணி) பாஜகவோடு பேசி முடித்து விட்டாய். 2024 நாடாளுமன்ற தேர்தலில் நமக்கு எதுவும் இல்லை. ஆனால் வட மாவட்டங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மிகப்பெரியதாய் வளர்ந்து நிற்கிறது. அவர்கள் மாநில கட்சி அங்கீகாரத்தை பெற்று விட்டார்கள். நாமோ படிப்படியாக தேய்ந்து கொண்டிருக்கிறோம்.
தமிழ்நாட்டில் திமுக அல்லது அதிமுகவோடு கூட்டணி வைத்து தான் அரசியல் செய்ய முடியும். அரசியல் வெற்றிகளை பார்க்க முடியும். நமது முதன்மைக் கூட்டணி அதிமுகவோடு தான் இருக்க வேண்டும். ஒருவேளை அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணியில் இருந்தால் கூட, நமது முதன்மை கூட்டணியாளராக அதிமுக தான் இருக்க வேண்டும். பாஜகவை முன்னிறுத்தி பயனில்லை.

இதுவரை நம்மோடு கூட்டணி பேசியவர்கள் எல்லாம் தைலாபுரம் தோட்டத்திற்கு வந்து தான் பேசியிருக்கிறார்கள். அவர்களுக்கு கூட்டணி வேண்டுமென்றால் தைலாபுரம் தோட்டத்திற்கு வரட்டும். அவர்களை ஏன் நாம் தேடிச் செல்ல வேண்டும்? நாம் அதிமுகவோடு கூட்டணி அமைப்போம். இதில் பாஜக சேர்ந்து கொண்டால் சேர்ந்து கொள்ளட்டும்’ என்று அன்புமணியிடம் அழுத்தம் திருத்தமாக பேசியிருக்கிறார் ராமதாஸ்.
ஆனால் அன்பு மணியோ… அமித் ஷாவை சென்று சந்திப்பதில் மாற்றமில்லை என்ற தொனியில் டாக்டர் ராமதாஸிடம் தெரிவித்திருக்கிறார். rift between Ramadoss-Anbumani full backround
இந்த உரையாடல் ஏப்ரல் ஒன்பதாம் தேதி புதன்கிழமை இரவு நடந்து முடிந்த நிலையில்… அடுத்த நாள் ஏப்ரல் 10 காலை தைலாபுரம் செய்தியாளர் சந்திப்பில் அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கி செயல் தலைவராக நியமிக்கிறார் ராமதாஸ்.
அதாவது பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரை தானே அவர்கள் சந்திக்க வேண்டும்? அப்படி என்றால், என்னை வந்து சந்திக்கட்டும் என்பதுதான் இந்த அறிவிப்பின் மூலம் ராமதாஸ் வெளியிட்ட செய்தி.
அதற்காகத்தான் கூட்டணி பற்றி பேசும் போது நிர்வாக குழு மாவட்ட செயலாளர்களோடு கலந்து பேசி தான் முடிவு செய்வோம் என்றும் நேற்றே அறிவித்தார் ராமதாஸ்.
ராமதாஸின் இந்த அதிரடி அறிவிப்புக்கு டாக்டர் அன்புமணி பகிரங்கமாக எந்த பதிலையும் கூறவில்லை. மாறாக தனது அக்காவுக்கு போன் செய்து தன்னுடைய வருத்தத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் ஏப்ரல் 10 மாலை ராமதாஸின் மகள்களான காந்தி, கவிதா ஆகியோர் தைலாபுரம் தோட்டத்திற்கு சென்று டாக்டர் ராமதாசை சமாதானப்படுத்தினார்கள்.
அப்போது ராமதாசை கட்சிக்குள் விமர்சித்த திலகபாமாவும் தைலாபுரம் தோட்டத்திற்கு சென்று தன்னை மன்னித்து விடுமாறு வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
ஏப்ரல் 10 மாலை முதல் இரவு வரை டாக்டர் ராமதாஸின் மகள்கள் அவரிடம் விரிவாக பேசியிருக்கிறார்கள். ஏற்கனவே அன்புமணி தனது குடும்பத்தை கட்சியில் முன்னிறுத்த பார்க்கிறார். அதனால்தான் முகுந்தனை அவர் இளைஞரணி தலைவராக செயல்பட விட மறுக்கிறார். சௌமியா அன்புமணியை தொடர்ந்து முன்னிறுத்தி அவரை மத்திய அமைச்சர் ஆக்க வேண்டும் என்பதுதான் அன்புமணியின் நோக்கம் என ஏற்கனவே டாக்டர் ராமதாஸிடம் புகார் கூறிய மகள்கள்… நேற்று டாக்டர் ராமதாஸிடம், ‘என்ன பிரச்சினை இருந்தாலும் கட்சியை வீக் ஆக்க வேண்டாம். அன்புமணியை கூப்பிட்டு பேசுங்கள்’ என்று சமாதானப்படுத்தியுள்ளனர். rift between Ramadoss-Anbumani full backround

மேலும், மே 11 ஆம் தேதி சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கான ஏற்பாடுகள் அனைத்து மாவட்டங்களிலும் நடக்கும் நிலையில்… டாக்டர் ராமதாஸ் தனது நேற்றைய அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என சில மூத்த நிர்வாகிகள் டாக்டரிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 11) அன்புமணி சென்னையில் அமித் ஷாவை சந்திப்பாரா? அல்லது தைலாபுரம் தோட்டத்திற்கு சென்று தன் தந்தை டாக்டர் ராமதாசை சந்திப்பாரா என்ற கேள்வி பாட்டாளி மக்கள் கட்சி வட்டாரத்தில் நேற்று இரவு வரை நீடித்துக் கொண்டே இருந்தது” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆப்லைன் போனது வாட்ஸ் அப்.