அரிசிக்கு ஜிஎஸ்டி : ஆலைகள், கடைகள் வேலைநிறுத்தம்!

Published On:

| By Kavi

அரிசிக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதை கண்டித்து தமிழகம் முழுவதும் அரிசி ஆலைகள் மற்றும் அரிசிக் கடைகள் இன்று( ஜூலை 16 ) அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

சண்டிகரில் அண்மையில் கூடிய 47ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்ட தானியங்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்க முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவே நாட்டில் விலைவாசி அதிகமாக இருக்கும் நிலையில், சாமானிய மக்களின் அடிப்படை உணவுப்பொருளான அரிசிக்கு வரி விதிப்பதன் மூலம் அதன் விலை கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அரிசி மற்றும் கோதுமைக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டியை திரும்பப் பெறவும் மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும் தமிழகம் முழுவதும் அரிசி ஆலைகள் மற்றும் அரிசி கடைகள் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

ADVERTISEMENT

இதுபற்றி அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த அன்பழகன் கூறுகையில், “5 சதவீத வரி விதிப்பினால் சாமானிய மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். இதனைக் கருத்தில் கொண்டு ஒருநாள் மட்டும் அடையாள நிறுத்தம் செய்து கடைகளை அடைத்து எங்களது கண்டனத்தை மத்திய அரசுக்குத் தெரிவிக்கிறோம். ஏழை மக்கள் அதிகம் பயன்படுத்தும் அரிசிக்கு மத்திய அரசு வரி விதித்திருப்பது வேதனை அளிக்கிறது” என்று தெரிவித்தார்.

அரிசிக்கு விதிக்கப்பட்டிருக்கும் வரிவிதிப்பை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் இல்லை எனில் உற்பத்தியை அடியோடு நிறுத்துவது உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம் என்று ஆலை உரிமையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ADVERTISEMENT

இந்தநிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி இந்த கடையடைப்பு போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், “அரிசிக்கான குரல் அல்ல… அனைவருக்குமான குரல். அரிசி, கோதுமை, உணவுப் பொருள் மீது 5 % ஜி.எஸ்.டி. என்பது மக்கள் வயிற்றில் அடிக்கும் செயல். வரிவிதிப்பைத் திரும்பப் பெறக்கோரி அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வணிகர்கள் நடத்தும் வேலை நிறுத்தம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் சுமார் 8 ஆயிரம் அரிசி ஆலைகள், கடைகள் ஈடுபட்டுள்ளன. இதனால் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.

ADVERTISEMENT

மு.வா.ஜெகதீஸ் குமார்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share