விமர்சனம் : ‘மதராஸ் மாஃபியா கம்பெனி’?

Published On:

| By Minnambalam Desk

லாபம் பார்க்குமா

1999 ஆம் ஆண்டு சென்னையில் கொலை ,கொள்ளை, கடத்தல் வேலைகளை முறைப்படி செய்வதற்காக உருவாக்கப்பட்ட கம்பெனி மதராஸ் மாபியா கம்பெனி . அதன் தலைவர் பூங்காவனம் (ஆனந்தராஜ்)

ADVERTISEMENT

சமூக விரோத செயல்களைச் செய்ய விரும்பி வருபவர்களுக்காக தேர்வு நடத்தி ஆள் எடுத்து அவர்களில் ரொம்ப தைரியமான ஆட்களுக்கு கொலை ,கடத்தல் செய்ய அனுப்புகிறார்கள் தைரியம் குறைவானவர்களையும் வேலைக்கு எடுக்கிறார்கள். தைரியமானவர்கள் குற்றம் செய்து விட்டு வந்த உடன், அதற்காக போலீசுக்கு போய் சரண்டர் ஆவது, தைரியம் இல்லாத ஆட்களின் வேலை .

உண்மையான குற்றவாளிகள் அடுத்த குற்றச் செயலுக்கு வழக்கம் போலப் போவார்கள். அவர்களுக்காக கைதாகி ஜெயிலுக்குப் போன நபர்களின் குடும்பங்களை மதராஸ் மாஃபியா கம்பெனி பார்த்துக் கொள்ளும். தவிர காவல் துறையில் தங்களுக்கு இருக்கும் செல்வாக்கு மூலம் ஜெயிலில் இருப்பவர்களையும் கம்பெனி வெளியே கொண்டு வந்து விடும் .

ADVERTISEMENT

திறமையை வைத்து ஜெயிலுக்குப் போகும் ஆட்களுக்கு அசைன்மென்ட் கொடுக்கப்படும் . சரியாக செயல்படாத ஆட்கள் ஜெயிலுக்குப் போகும் பணிக்கு மாற்றப்படுவதும் உண்டு .

இந்த கட்டமைப்பால் கம்பெனி தலைவர் பூங்காவனம் மீது ஒரு புகார் கூடப் பதிவாகவில்லை.

ADVERTISEMENT

பூங்காவனத்தின் மனைவி (தீபா). அவர்களுக்கு ஒரு மாற்றுத்திறனாளி மகன் உண்டு.

பூங்காவனத்துக்கு ரகசியமாக ஓர் ஆங்கிலோ இந்திய மனைவியும் ( சசி லயா) அந்த வழியில் ஒரு மகளும் (ஆராத்யா) உண்டு.

அந்த மகள் வேறு சாதிப் பையனைக் காதலித்தாள் என்று அவனை கொன்று விடுவார் பூங்காவனம். , மகளுக்கு அப்பா மேல் கோபம்.

பூங்காவனத்துக்கு எதிரிகள் மட்டுமின்றி தன் உடன் இருப்பவர்கள் (ராம்ஸ் உள்ளிட்ட சிலர்) கூட, தன்னை எப்போது வேண்டுமானாலும் போட்டுத் தள்ளுவார்கள் என்ற பயமும் உண்டு.

பூங்காவனம் மேல் F I R போடுவதோடு அவனை ஜெயிலில் போடுவேன்’ என்று சபதம் போட்டு விட்டுக் களம் இறங்குகிறார் ஒரு பெண் போலீஸ் அதிகாரி (சம்யுக்தா).

யார் ஜெயித்தார் யாருக்கு என்ன நடந்தது? என்ன புரிந்தது ? என்பதே படம் .

.தயாரிப்பாளர் சுகந்தியின் அப்பாவான வழக்கறிஞர் அண்ணாதுரை, வேலூர் பகுதியில் இப்படி ஒரு கம்பெனியை நேரில் பார்த்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அதை வைத்தே அந்த மதராஸ் மாஃபியா கம்பெனியின் அட்டகாசமாக பிளான் கதை எழுதப்பட்டு இருக்கிறது .

பூங்காவனம் கேரக்டரில் எதிரிகளையும் துரோகிகளையும் கெத்தாக டீல் பண்ணும் தாதா, மாற்றுத்திறனாளி மகன் கேலி செய்யும் போது பொறுத்துக் கொள்வது , முதல் மனைவியின் கிண்டல்களை கவனிக்காமல் போவது, இரண்டாம் மனைவியிடம் கொஞ்சல்…

அப்படிப்பட்ட பிடித்த மனைவியின் மகள் என்றாலும் காதல் என்று வரும்போது சாதி பார்க்கும் குணம் (இத்தனைக்கும் இரண்டாம் மனைவி இவர் ஜாதி இல்லை), அவ்வப்போது யார் என்ன செய்வானோ என்று பயப்படுவது…

இப்படி சீரியஸ் காட்சிகள் காமெடி காட்சிகள் இரண்டிலும் ஸ்கோர் செய்கிறார் ஆனந்தராஜ்.

படத்தில் முனீஸ்காந்த்தை வைத்து காமெடி டிராக் என்று ஒன்று வைத்திருக்கிறார்கள் . சிரிக்கவே முடியவில்லை

அந்த மாற்றுத் திறனாளி மகன் கேரக்டர் பூங்காவனத்தை ஒரு சில காட்சிகளில் கலாய்க்கும்போது வரும் குபீர் நகைச்சுவையில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட பல காட்சிகளை வீணாக்கும் முனீஸ்காந்த் சம்மந்தப்பட்ட காமெடி காட்சிகளில் வரவில்லை. . இப்போது கூட ஒன்றும் கெட்டுப் போய் விடவில்லை. அதை அப்படியே தூக்கினால் அது படத்த்துக்கு நல்லது.

அடியாட்களில் ராம்ஸ் கவனிக்கும்படி நடித்துள்ளார் . தீபாவும் ஸ்கோர் செய்கிறார்.

போலீஸ் அதிகாரியாக வரும் சம்யுக்தா உயரம் தோற்றப் பொருத்தம் ஓகே . ஆனால் ஒரு போலீஸ் அதிகாரியை அவரால் பர்சனாலிட்டியில் கொண்டு வர முடியவில்லை. போலீஸ் சல்யூட் அடிப்பது காமெடியாக இருக்கிறது. அந்தக் கேரக்டருக்கு அவரால் நியாயம் செய்ய முடியவில்லை.

திடீரென்று அவ்வப்போது திரைக்கதை ஏதோ வித்தியாசமாக சொல்ல முயல்வது போல காட்டிக் கொள்கிறது. மீண்டும் வழக்கமான ரூட்டுக்கு வரும்போதுதான் அது பாவ்லா காட்டி இருப்பது புரிகிறது.

அந்தக் கால சினிமா பாணியில் ஆன்ட்டி கிளைமாக்ஸ் சமயத்தில் ஆன்ட்டிகள் மற்றும் இளம் பெண்கள் ஆடும் கிளப் சாங் ஒன்று போட்டு இருக்கிறார்கள் .

கிளைமாக்சில் படம் சொல்லும் விஷயம் அபாரமானது . ஆனால் அதை சொன்ன விதமும் அதை சொல்வதற்குள் படம் இருக்கும் விதமும் , அந்த விஷயத்தை உட்கிரகிக்கும் மனநிலையை கெடுத்து விடுகிறது .

மதராஸ் மாபியா கம்பெனி என்ற அந்த சுவாரஸ்யமான விஷயத்தை வைத்து, வித்தியாசமான காட்சிகளை வைத்து, போலீஸ் துறை அதே புத்திசாலித்தனத்தை வைத்து எப்படி ஜெயிக்கிறது என்று திரைக்கதை எழுதி இருந்தால் இந்தப் படம் வெற்றி பெற்று இருக்கும். அதற்கு நல்ல திரைக்கதையாளர் தேவை .

மதராஸ் மாஃபியா கம்பெனி .. பேஸ்மென்ட் கொஞ்சம் ஸ்ட்ராங். ஆனால் பில்டிங் அநியாயத்துக்கு வீக்

— ராஜ திருமகன்

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share