அன்புமணி என்னை மார்பிலும், முதுகிலும், கண்ட இடத்திலும் ஈட்டியால் குத்துவது போல குத்துகிறான். நான் என்ன செய்வது? அவனுக்கு ஒரு தகப்பன் உலகத்தில் தன் பிள்ளைக்கு என்ன செய்கிறானோ அதைவிட அதிகமாக நான் செய்திருக்கிறேன். என்ன குறை வைத்தேன் என மேடையிலேயே ராமதாஸ் கண்கலங்கி அழுத படி பேசினார். மேலும் ஒரு மிகப்பெரிய வெற்றி கூட்டணி அமைப்பேன் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
சேலத்தில் இன்று (டிசம்பர் 29) பாமக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், இந்த நேரத்தில் எதைப் பேசி எதை விடுவது.. எனக்குள்ளே ஒரு குழப்பம். ஏனென்றால் எனக்கு இருக்கும் ஆதங்கத்தை கொட்டி உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஒரு மணி நேரம் தேவை. நான் இடையிடையில் பேசியிருக்கலாம். ஆனாலும் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்ன பேசுகிறீர்கள் என்பதை கேட்டுக் கொண்டிருந்தேன்.
அந்த வகையில் நீங்கள் இந்த பொதுக்குழுவில் அதிகமாக எதிர்பார்த்து வந்திருப்பது எந்தக் கூட்டணி என்பதுதான். ஐயாவிற்கு அதிகாரம் கொடுத்து விட்டோம், ஐயா கூட்டணியை இப்போதே அறிவிப்பாரா? அல்லது அடுத்த ஆண்டில் அறிவிப்பாரா? எப்போது அறிவிப்பார் என்று ஆவலோடு இருக்கிறீர்கள். உங்களிடம் கூட்டணி குறித்து கேட்பவர்களிடம் ஐயா நல்ல முடிவெடுப்பார். அது வெற்றி கூட்டணியாக நிச்சயமாக இருக்கும் என்று கூறுங்கள் என்றார்.
10.5% என்ன ஆச்சு
சின்ன பையன் கூட 10.5% என்ன ஆச்சு என்று கேட்கிறான். அவனுக்கு வரும் வருமடா.. வரும். 10.5% வரும் என்று ஆறுதல் சொல்ல வேண்டி உள்ளது. நிச்சயமாக நாம் 10.5% இட ஒதுக்கீட்டை நாம் பெறுவோம்.
தூக்கம் வருவதில்லை
ஒரு குழு.. ஒரு கூட்டம் அல்லது ஒரு கும்பல் அவர்கள் எல்லோரும் நான் வளர்த்த பிள்ளைகள் தான். நான் பொறுப்பு கொடுத்த பிள்ளைகள் தான். என்னை இப்பொழுது தூற்றுகிறார்கள். அதுவும் மிக கேவலமாக என்னையும், நமது கௌரவத் தலைவரையும் அவ்வளவு மோசமாக தூற்றுகிறார்கள். தூக்கம் வருவது இல்லை. ஆனாலும் படுத்து தூங்கிக் கொண்டிருந்தேன். தூக்கம் வந்தபோது கனவில் என்னுடைய தாய் வந்தார்.
கண் கலங்கிய ராமதாஸ்
என் தாய் ஏம்பா அழுகிறாய் என்று கேட்டார்கள் என்று பேசியவாறு மேடையிலேயே ராமதாஸ் சிறிது நேரம் கண்கலங்கி அழுதார். ஒரு பையன் என்னை கழுத்தில் துணி போட்டு இறுக்கிக் கொலை செய்ய வேண்டும் என்று பதிவு போடுகிறான். அந்த பதிவு போட்டவனை கூப்பிட்டு அவனுக்கு உன் பேரன் பொறுப்பு கொடுக்கிறான் என்று சொன்னேன். அதற்கு எனது தாய்.. நான் என்னப்பா செய்ய முடியும். நீ அப்படி வளர்த்து இருக்கிறாய் என்றார்.
நான் சரியாகத்தான் வளர்க்கவில்லை
அம்மா என்னை மார்பிலும், முதுகிலும், கண்ட இடத்திலும் ஈட்டியால் குத்துவது போல குத்துகிறான். நான் என்ன செய்வது? அவனுக்கு ஒரு தகப்பன் உலகத்தில் தன் பிள்ளைக்கு என்ன செய்கிறானோ அதைவிட அதிகமாக நான் செய்திருக்கிறேன். என்ன குறை வைத்தேன்? ஒரு குறையும் வைக்கவில்லை.. ஆனாலும் அவன் நான் எப்பொழுது..எப்பொழுது.. என்று வார்தையை முடிக்காமல் நிறுத்தினார்.
மேலும் பேசுகையில் ஓராண்டிற்கு முன்னர் சென்னையில் ஒரு சொத்து பிரச்சனையில் ஒரு பிள்ளை தனது தகப்பனை 30 தூண்டுகளாக வெட்டி கொண்டு போய் காவேரிப்பாக்கம் என்ற ஊரில் போட்டுவிட்டு வந்ததை நீங்கள் எல்லோரும் படித்திருப்பீர்கள். அப்படி செய்தால் கூட நான் போய் சேர்ந்து இருப்பேன். ஆனால் ஒவ்வொரு நாளும் இந்த சில்லறை பசங்களை வைத்துக்கொண்டு அவமானப்படுத்துகிறான்.. அவர்களும் நான் வளர்த்தவர்கள் தான். அதுவும் எனது தவறுதான். கொஞ்சம் நஞ்சமாக அவமானப் படுத்தவில்லை. என்னையும் அருகில் இருக்கும் ஓய்வறியா உழைப்பாளி, தியாகச் செம்மல் ஜி.கே. மணியையும் அவமானப்படுத்துகிறார்கள்.
மனம் தாங்காமல் ஒன்று நான் காணாமல் போக வேண்டும். இல்லை என்றால் நான் சாக வேண்டும் என்று ஜிகே மணி ஒரு நாள் சொல்கிறார். 30 ஆண்டுகாலம் இந்த கட்சிக்கும் மக்களுக்கும் உழைத்த ஜிகே மணியை அவ்வளவு தரக்குறைவாக பேசியதன் விளைவாக அவர் அந்த இரண்டு வார்த்தைகளை சொன்னார். அதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
இப்பொழுது என்னை நேரடியாக தாக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள எட்டு கோடி மக்களும் எனக்கு சொந்தங்கள் தான். எனது உறவுகள் தான். அது எந்த சமுதாயமாக இருந்தாலும் சரி, எந்த மக்களாக இருந்தாலும் சரி அவர்கள் எல்லோரும் எனக்கு உறவுகள் தான். அவர்கள் என்னை எப்பொழுதும் நேசிப்பவர்கள்.
95% சதவிகிதம் என் பின்னால்
மருத்துவரை போய் பார்க்கப் போனால் சீனியர் மருத்துவர்கள் ஏன் இப்படி செய்கிறார் அன்புமணி. என்ன ஆயிற்று அவருக்கு? இன்னும் கொஞ்சம் வருடங்கள் அவரால் பொறுக்கக் கூடாதா என்று கேட்கிறார்கள். இதுபோல நிறைய பேர் கேட்கிறார்கள்.
அதற்கு நான் அவரை மாற்ற முடியாது. அவரை மாற்ற வழி இல்லை என்ன செய்வது கேட்டுக் கொண்டுதான் இருக்க வேண்டும். ஆனாலும் இப்பொழுது நடக்கின்ற இந்த செயற்குழு அல்லது பொதுக்குழு அதற்கு முன்னால் நடந்த குழுக்கள் எல்லாவற்றையும் பார்க்கும் பொழுது நூற்றுக்கு 95 விழுக்காடு பாட்டாளி மக்கள் என் பின்னால் தான் இருக்கிறார்கள்.
சரியான பதிலடி
அன்புமணி பின்னால் 5 சதவிகித மக்கள் கூட இல்லை. ஆனால் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் செலவு செய்து கூட்டத்தைக் கூட்டி பம்மாத்து வேலை செய்து கொண்டிருக்கிறார். ஆனால் இந்த தேர்தல் அவருக்கு சரியான பதிலடி கொடுக்கும். அந்த வகையில் இந்த தேர்தலில் நான் ஒரு நல்ல கூட்டணி அமைப்பேன். அந்த நல்ல கூட்டணி வெற்றியைத் தரும். ஏனென்றால் என் பின்னால் வந்த இந்த மக்கள் உழைத்து உழைத்து என்னை எப்போதும் கைவிட்டதில்லை. இனிமேலும் கைவிட மாட்டார்கள் அதனால் உனக்கு யார் இருக்கிறார்கள். நூற்றுக்கு இரண்டு பேர், மூன்று பேர் இருக்கிறார்கள்.
இதுவெல்லாம் யாரால் வந்தது. என்னைப் போன்று ஒரு தகப்பன் உனக்கு உலகத்திலேயே யாராவது கிடைத்திருப்பானா? ஆனால் நீ.. என்னால் இதற்கு மேல் பேச முடியவில்லை. ஏனென்றால் அப்படி அவருடைய செயல்பாடு இருக்கிறது.
என்ன குறை வைத்தேன்
நான் ஆசைப்பட்டிருந்தால் எல்லா பதவிகளையும் நான் இந்திய அளவிலேயே அடைந்திருப்பேன். ஆனால் நான் அன்று செய்த சத்தியத்தை இன்று வரையில் காப்பாற்றுகிறேன். அந்த சத்தியத்தினால் தானே நீ அமைச்சர் ஆனாய். இப்போது ராஜ்யசபா உறுப்பினர் ஆனாய். உனக்கு என்ன குறை வைத்தேன். எவ்வளவு கஷ்டப்பட்டு உன்னை படிக்க வைத்து மருத்துவர் ஆக்கினேன். அதன் பிறகு 36 வயதிலேயே மத்திய அமைச்சராக்கினேன். அதன் பிறகு ராஜ்யசபா உறுப்பினர் என ஒரு தகப்பன் என்னென்ன செய்ய வேண்டுமோ அதை எல்லாம் செய்தேன். ஆனால் இப்போது நீ என்னை அவ்வளவு கேவலமாக எழுதச் சொல்கிறாய். இதற்கெல்லாம் காலம் பதில் சொல்லும்.
கூட்டணிக்கு காலம் கனியவில்லை
வருகின்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவதற்கு அயராது எல்லோரும் பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.10 நாட்களாக ஒவ்வொரு மாவட்ட செயலாளர், தலைவரையும் கூப்பிட்டு யாரோடு கூட்டணி வைக்கலாம் என்று கருத்துக்களை கேட்டேன். கூட்டணி அமைவதற்கு இன்னும் காலம் கனியவில்லை. அவர்கள் சொன்ன கருத்துக்களின் அடிப்படையில் ஒரு மிகப்பெரிய வெற்றி கூட்டணி அமைப்பேன்” என்றார்.
