மறைந்த இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் குறித்த நினைவலைகளை ரஜினிகாந்த் பகிர்ந்து கொண்டுள்ளார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், பெப்சி, தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் ஆகிய ஐந்து சங்கங்கள் இணைந்து ‘ராஜகோபுரங்கள் நினைவு உற்சவம்’ என்ற தலைப்பில் மறைந்த இயக்குனர்கள் பாரதிராஜா மற்றும் பாக்யராஜ் ஆகியோருக்கு சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன.
கலாட்டா தமிழ் சேனலில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த், பாக்யராஜ், பாரதி ராஜா ஆகியோருடனான பழைய கால நினைவுகளை பகிர்ந்தார்
அவர் பேசுகையில், “நான் போட்டுவிட்ட செயினை பாக்கியராஜ் அவர் கடைசி மூச்சு வரை போட்டிருந்தார் என்று பூர்ணிமா சொன்னது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அவர் ஆடம்பரமாக எதையும் அணிந்து கொள்ள மாட்டார். இருந்தாலும் அவருக்கு ஒரு செயின் போட வேண்டும் என்று தோன்றியது. அதை கடைசி வரை அவர் அணிந்திருந்தார் என்பது எனக்கு சந்தோஷமான விஷயம்.
இவர்களைப் பற்றி நீங்கள் எவ்வளவு பேசியிருக்கிறீர்கள். இனி எப்போது பேசப் போகிறீர்கள் என்று என்னிடம் கேட்டிருக்கிறார்கள்.
இவர்கள் இரண்டு பேரும் சாதாரணமானவர்கள் இல்லை. தனிச்சிறப்புடைய மனிதர்கள். இவர்களைப் பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம்.
பாரதிராஜாவை பொறுத்தவரை அவர் கதை எழுத மாட்டார். மற்றவர்களின் கதையை தான் எடுப்பார்.

அவரிடம் கதையை கேட்டால்… படம் எந்த பாதையில் போகும், எப்போது இடைவெளி வரும், எப்போது கிளைமாக்ஸ் வரும் என்பதெல்லாம் ஐந்து நிமிடத்திலேயே தெரிந்து விடும்.
ஒருவரிடம் தன்னுடைய விஷயத்தை போட்டு, அதை எடுத்து எப்படி செய்ய வேண்டும் என்பதில் பாரதிராஜாவை போன்று இன்னொரு இயக்குனரை நான் பார்த்ததில்லை.
அதனால்தான் அத்தனை இயக்குனர்கள் எழுத்தாளர்கள் அவரால் உருவாக்கப்பட்டார்கள்” என்று பாரதிராஜாவை பற்றி பேசினார்.
பாக்கியராஜ் குறித்து பேசிய ரஜினிகாந்த், “இவரிடம் கதை சொன்னால் 100% இதையும் கேட்பார், ஆல்டர்நேட்டிவாக இதை எப்படி ஸ்கிரீன் ப்ளே செய்யலாம் என்று யோசனையும் செய்து கொண்டிருப்பார். இவை இரண்டும் இணையாகவே போய்க்கொண்டிருக்கும். அப்படி ஒரு தனித்திறமை கொண்டவர் பாக்யராஜ்.
அதனால்தான் அவர் திரைக்கதை மன்னர். ஒரு காமெடி சீனை சொல்லும் போது மற்றவர்கள் எல்லாம் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். ஆனால் பாக்யராஜ் ஒரு கர்சிப்பை வைத்துக்கொண்டு லேசாக புன்னகைப்பார். ஜாஸ்தி சிரிக்க மாட்டார்.
நாமெல்லாம் ஒரு காமெடி சீன் கேட்டால் கைதட்டி சிரிப்போம், இல்லையென்றால் எழுந்து நின்று சிரிப்போம்… ஆனால் பாரதிராஜாவை பொறுத்தவரை அந்த அறையை சுற்றி வந்து சிரித்து விட்டு உட்காருவார்” என சுவாரசியமான நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
இருவருக்குமே ஆங்கிலம் தெரியாது என்ற தாழ்வு மனப்பான்மை இருந்திருக்கலாம் என்று குறிப்பிட்ட ரஜினி, “யாராவது ஆங்கிலத்தில் பேசினால் இருவரும் ஆச்சரியமாக பார்ப்பார்கள். கமல்ஹாசனை பாரதிராஜா பென்டாஸ்டிக் ஆக்டர் என்று இரண்டு மூன்று முறை தான் சொல்லி இருப்பார். ஆனால் பத்து பதினைந்து முறை “என்னா இங்கிலீஷ் பேசுறாருப்பா” என்று சொல்லி இருப்பார். பாக்யராஜும் அப்படித்தான்.
இங்கு ராதிகா இல்லை. அவருக்கு நல்ல முகம். இருந்தாலும் அதை பார்த்து பாரதிராஜா அவரை புக் செய்திருக்க மாட்டார். இலங்கையில் பிறந்து லண்டனில் வளர்ந்தவர் ராதிகா. அவர் இங்கிலீஷ் பேசுவதை பார்த்து கிழக்கே போகும் ரயில் படத்தில் போட்டிருக்கிறார்கள்.
அந்த படத்தில் ராதிகாவை போட்டது பாக்யராஜுக்கு பிடிக்கவில்லை. ஆங்கிலத்தில் ராதிகா பேசுவதை பார்த்து “ஷீ இஸ் மை ஹீரோயின்” என்று சொல்லி இருப்பார்.
ஒரு விஷயத்தில் நாம் பிரகாசிக்க வேண்டும் என்றால் ஏற்கனவே ஒருவர் செய்வதை பாலோ செய்தால் அது ஜனங்களை ஈர்க்காது. வெற்றி பெற முடியாது.

யாரும் செய்யாததை புதிதாக என்ன செய்யப் போகிறோம் என்பதில் தான் அந்த பிரகாசம் இருக்கிறது. ஜனங்களையும் ஈர்க்க முடியும்.
இதுதான் இவர்கள் இருவரும் செய்த மிகப்பெரிய விஷயம்.
எல்லோருக்கும் இது தெரியும்… கேமராவை பாரதிராஜா ஸ்டூடியோவில் இருந்து கிராமத்துக்கு கொண்டு போனவர் என்று.
அந்த காலத்தில் கிராமத்து படங்கள் என்றால் பண்ணையார், ஜமீன்தார், பணக்காரர், ஏழை இப்படித்தான் இருக்கும்.
பாரதிராஜா இதையும் மாற்றினார். சாதாரண, டெய்லர், பார்பர், விவசாயி சின்ன குடும்பம் என இப்படி கொண்டு போனவர் பாரதிராஜா.
அதனால்தான் இவ்வளவு பெரிய பேரை அவர் சம்பாதித்திருக்கிறார்
அதேபோல பாக்கியராஜ்… அவர் நிச்சயமாக ஹீரோவாக ஆவார் என்று நினைத்திருக்க மாட்டார். இயக்குனராக வேண்டும் என்று தான் வந்திருப்பார்.
பாரதிராஜா அவ்வளவு கான்ஃபிடண்டான நபர். யாராக இருந்தாலும் நடிக்க வைத்து விடுவார்.” பாக்யா நீ தான்டா ஹீரோ” என்று பாக்யராஜிடம் சொல்லி இருப்பார்.
பாக்கியராஜ் உடல் அளவில் வீக்கானவர். குரலில் கணமில்லை. கண்ணு டேமேஜ். கண்ணாடி போட்டிருப்பார்.
ரஜினிகாந்த் நடிகனாகி அந்த ஹீரோ இமேஜை உடைத்து விட்டார் என்றில்லை. பாக்கியராஜ் தான் அந்த இமேஜை உடைத்தார்” என்றார்.
பாக்கியராஜ் இயக்கிய சுவரில்லாத சித்திரங்கள் படத்தில் இடம்பெறும் காட்சிகளை சுட்டிக்காட்டி பாராட்டி பேசிய ரஜினிகாந்த், நினைத்துப் பார்க்காததை செய்து காட்டுபவர்கள் தான் இவர்களைப் போன்ற ஜாம்பவான்கள்.
அதேபோன்று பாரதிராஜா படங்களில் எனக்கு ரொம்ப ஆச்சரியத்தை ஏற்படுத்தியது முதல் மரியாதை படம்.

சிவாஜி சாருக்கும் ராதாவுக்கும். இடையேயான உறவு என்ன? அன்பா… காதலா… மரியாதையா… பக்தியா… கௌரவமா… இந்த உறவை எவ்வளவு அழகாக காட்டியிருப்பார்” என புகழ்ந்து பேசினார்.
16 வயதினிலே படத்தில் பாரதிராஜா தன்னை அவருடனே தங்க சொன்னதையும், அதைத்தொடர்ந்து அவருடன் ஆறு நாள் தங்கியது பற்றியும் பேசிய ரஜினிகாந்த், “பாரதிராஜாவிடம் இருக்கும் 2 பேண்ட்டுகளில் ஒன்றில் ஜிப் கழன்று போய் பின் போட்டிருப்பார். அதை மறைப்பதற்காக சட்டையை மேலே விட்டிருக்கலாம். ஆனால் அதையும் இன்சர்ட் செய்து கொள்வார்.

இது பற்றி பாரதிராஜாவிடம் கேட்டபோது, அதை விடுய்யா…. யார் அதெல்லாம் பார்க்கப் போகிறார். பார்த்தால் பார்த்துவிட்டு போகட்டும் என்பார்.
ஏனென்றால் அவருக்கு அதில் கவனம் இல்லை. அவரைப் பொறுத்தவரை பரட்டை… சப்பானி… குருவம்மா கதாபாத்திரங்கள் தான் முக்கியம். அவ்வளவு கான்சென்ட்ரேஷன் டெடிகேஷன் ஆக வேலை செய்வார்.
இவர்களெல்லாம் கடவுள் அனுப்பிய குழந்தைகள். Rest in peace என்று சொல்வார்கள்… ஆனால் return if possible என்று சொல்கிறேன்” என குறிப்பிட்டார் ரஜினி.
