சென்னை தீவு திடலில் இன்று நடைபெற்ற “மாணவர்களின் குரல்” நிகழ்ச்சியில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசும்போது கலைந்து செல்ல முயன்ற மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
“மாணவர்கள் குரல்” என்ற தலைப்பில் ஒவ்வொரு மாநிலமாகச் சென்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மாணவர்களைச் சந்தித்து வருகிறார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை தீவுத் திடலில் “மாணவர்களின் குரல்” கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று மாலை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்துகொண்டு உரையாற்றினார். இதில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், கல்லூரி முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசிக் கொண்டிருந்தபோதே ஏராளமான மாணவர்கள் கலைந்து செல்ல ஆரம்பித்தனர். அரங்கில் காற்றோட்ட வசதி இல்லாததால், மாணவர்கள் பலர் மூச்சு விடுவதில் சிரமப்பட்டு அங்கிருந்து வெளியேறியதாகக் கூறப்படுகிறது. மேலும், மாலை 5 மணிக்கு வர வேண்டிய ராகுல் காந்தி இரவு 7 மணிக்குத்தான் மேடைக்கு வந்ததாகவும், அவருடன் பேசுவதற்கு மாணவ-மாணவிகள் முன்கூட்டியே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது போல் தெரிந்ததாகவும் மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதே சமயம், மாணவர்கள் யாரும் வெளியே செல்ல அனுமதிக்க வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சியினர் காவல்துறையிடம் கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் வெளியில் செல்வதைக் காவல்துறையினர் தடுத்ததால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.
இது குறித்து பாஜக முன்னாள் எம்எல்ஏ வானதி சீனிவாசன் தனது எக்ஸ் பதிவில், “சென்னையில் இன்று ராகுல் காந்தி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள், நிகழ்ச்சியிலிருந்து வெளியேற முயன்றபோது, காங்கிரஸார் காவல்துறையினர் மூலம் அவர்களைக் கட்டாயப்படுத்தி வெளியே செல்ல விடாமல் தடுத்ததாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் கண்டனத்திற்குரியவை.
மாணவர்களின் குரலைக் கேட்பதாகக் கூறிக்கொண்டு, அவர்களின் விருப்பத்திற்கு மாறாகச் செயல்படுவதுதான் காங்கிரஸ் கட்சியினருக்கு தெரிந்த ஜனநாயகமா? மாணவர்களுடன் கலந்துரையாடுவதாகக் கூறும் ராகுல் காந்திக்கும் காங்கிரஸ் கட்சிக்கும், மாணவர்களின் கருத்துச் சுதந்திரத்தையும் தனிப்பட்ட உரிமைகளையும் மதிக்க வேண்டிய பொறுப்பு இல்லை என்பதையே இந்நிகழ்ச்சி காட்டுகிறது.
மாணவர்கள் என்பவர்கள் அரசியல் தலைவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்பட வேண்டியவர்கள் அல்ல. அவர்கள் தங்களது கருத்துகளைச் சுதந்திரமாக வெளிப்படுத்தவும், ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கவும், விரும்பினால் அதிலிருந்து வெளியேறவும் முழு உரிமை கொண்டவர்கள். அதை விடுத்து அவர்களின் விருப்பத்திற்கு மாறாகக் கட்டாயப்படுத்துவது ஜனநாயக மாண்புகளுக்கும் அடிப்படை உரிமைகளுக்கும் எதிரானது.
மாணவர்களின் நலனுக்காகப் பேசுவதாகக் கூறும் ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியும், முதலில் மாணவர்களின் உரிமைகளையும் சுயமரியாதையையும் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
மாணவர்களின் குரலை ஒடுக்கிவிட்டு, அவர்களுக்காகப் பேசுவதாக அரசியல் நாடகம் நடத்த முடியாது. அவர்கள் எந்த அச்சுறுத்தல்களுக்கோ, கட்டாயப்படுத்துதல்களுக்கோ ஒருபோதும் அடிபணிய மாட்டார்கள்!”என தெரிவித்துள்ளார்.
