வழக்கமாகச் செய்யும் பலகாரத்தையே சற்று வித்தியாசமாகவும், சத்தாகவும் செய்தால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பிடித்துப்போகும். அதற்கு உதாரணம், இந்த ராகி ரிப்பன் பக்கோடா.
என்ன தேவை?
ராகி மாவு (கேழ்வரகு மாவு) – 200 கிராம்
பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு – தலா 50 கிராம்
வெண்ணெய் – ஒரு டீஸ்பூன்
எள் – 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – தேவையான அளவு
பெருங்காயத்தூள் – சிறிதளவு
சீரகத்தூள் – கால் டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
பாத்திரத்தில் மாவு வகைகள் அனைத்தையும் போட்டு வெண்ணெய், எள், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்துக் கலந்து சிறிதளவு தண்ணீர்விட்டு முறுக்கு மாவுப் பதத்துக்குப் பிசையவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் ரிப்பன் பக்கோடா அச்சில் மாவை நிரப்பி எண்ணெய்க்குள்ளேயே நேரடியாகப் பிழிந்து, சிறு தீயில் வேகவிட்டு எண்ணெய் சலசலப்பு அடங்கியதும் எடுத்தால் சத்தான, கரகர மொறுமொறு ராகி ரிப்பன் பக்கோடா ரெடி.
