“ஏங்கிக்கொண்டிருந்த பொறுப்பு தேடி வந்தது”: முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்த புஷ்பவனம் குப்புசாமி

Published On:

| By Kavi

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற தலைவராக நியமிக்கப்பட்டுள்ள புஷ்பவனம் குப்புசாமி முதல்வர் விஜய்யை இன்று (அக்டோபர் 6) நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். 

தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகள், நாட்டுப்புற கலைகள், இயல், இசை, நாடகம் உள்ளிட்ட கலை வடிவங்களை பாதுகாத்து வளர்ப்பதற்காக அரசு கலாச்சார அமைப்பாக தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் செயல்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

1955 ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த மன்றம் 1973 இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 

2021 ஆம் ஆண்டு நடிகர் வாகை சந்திரசேகர் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். அதற்கு முன்பு இசையமைப்பாளர் தேவா இதன் தலைவராக இருந்துள்ளார். 

ADVERTISEMENT

இந்த சூழலில்  நாட்டுப்புற பாடகரான புஷ்பவனம் குப்புசாமியை, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராக நியமித்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இவர் நாட்டுப்புற இசை மற்றும் கிராமிய கலை துறையில் நீண்ட காலமாக பணியாற்றி வருகிறார். திரைப்படப் பாடல்கள் மட்டுமின்றி பக்தி பாடல்களாலும் பரவலாக அறியப்பட்டவர். 

ADVERTISEMENT

இந்த நிலையில் இயல், இசை, நாடக மன்ற தலைவராக நியமிக்கப்பட்டுள்ள புஷ்பவனம் குப்புசாமி நேற்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார். 

இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜயை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘நேர்மையாகவும் உண்மையாகவும் உழைத்து இந்த அரசுக்கு நான் பெருமை சேர்ப்பேன். 

அந்த காலத்தில் நாட்டுப்புற பாடல்களை ஏளனமாக பார்க்கக் கூடிய ஒரு சூழல் இருந்தது. பல முயற்சிகள் காரணமாக அது மாற்றி அமைக்கப்பட்டது. 

இதற்காக நான் உழைத்தேன் என்ற பெருமையும் எனக்கு உண்டு. அதை உணர்ந்து இந்த அரசு இந்த நியமனத்தை செய்திருக்கிறது” என்றார். 

நாட்டுப்புற கலைக்காக தன் வாழ்நாளை செலவிட்ட போதிலும் சில இடங்களில் தன்னை மட்டும் புறக்கணித்ததாக கூறி வருத்தம் தெரிவித்த அவர், ‘என்னை தொடர்பு கொண்டு, இதுபோன்று உங்களுக்கு பதவி கொடுக்கப் போகிறோம் என்று சொன்னபோது தாராளமாக இதற்குத்தான் ஏங்கிக் கொண்டிருக்கிறேன் என்று கூறினேன். அதைத்தொடர்ந்து இதற்கான அறிவிப்பு வந்துள்ளது. 

இந்த நேரத்தில் முதல்வர் ஜோசப் விஜய்க்கும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

நலிவடைந்த கலைஞர்களின் வாழ்வு சிறக்க, வழிகளை ஏற்படுத்தி கொடுப்பேன்” என்று கூறியுள்ளார்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share