பூசணி விதைகள் முதல் தயிர் வரை தைராய்டு பாதிப்பு அறிகுறிகளை குறைக்கும் 5 உணவுகளின் பட்டியலை தெரிந்துகொள்ளுங்கள்.
தைராய்டு என்பது தற்போதைய காலகட்டத்தில் ஒரு பொதுப் பிரச்சனையாகவே மாறிவிட்டது. குறிப்பாக பெண்களிடையே தைராய்டு பாதிப்பு அதிகம் காணப்படுகிறது. மன அழுத்தம் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறி வருகிறது. மோசமான வாழ்க்கை முறைகள் தைராய்டை ஒரு பொதுவான பிரச்சனையாக மாற்றியுள்ளன. தைராய்டைக் கட்டுப்படுத்த (thyroid control) மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறோம். ஆனாலும், தைராய்டு பாதிக்கப்பட்ட பலரும் தொடர்ச்சியான உடல் எடை அதிகரிப்பு, இடைவிடாத சோர்வு மற்றும் முடி உதிர்தல் போன்ற தொடர் பிரச்சனைகளால் அவதிப்படுகின்றனர்.
தைராய்டுக்கு மருந்துகள் பலனளிக்கவில்லை எனில், உங்கள் வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறையில் தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டிய நேரம் இது. தைராய்டு சுரப்பி நமது வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்துகிறது. அது செயலிழக்கும்போது, முழு உடல் அமைப்பும் மந்தமாகிவிடுகிறது. மருந்துகள் மட்டும் தற்காலிகமாக ஹார்மோன் (Hormone levels) அளவுகளை மேம்படுத்தலாம், ஆனால் சுறுசுறுப்பான உடல் செயல்பாட்டைப் பராமரிக்கவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் சரியான ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன. 5 ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் தைராய்டு அறிகுறிகளை கட்டுப்படுத்த உதவும்.
பூசணி விதைகள்
தைராய்டு ஹார்மோன்களைச் (Benefits of pumpkin seeds) செயல்படுத்துவதற்கு, அதாவது T4ஐ T3ஆக மாற்றுவதற்கு உடலுக்கு துத்தநாகம் மிகவும் தேவை. பூசணி விதைகள் துத்தநாகத்தின் ஒரு சிறந்த களஞ்சியமாகவே உள்ளன. தினமும் ஒரு தேக்கரண்டி பூசணி விதைகளைச் சாப்பிடுவது தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், முடி உதிர்வதையும் தடுக்கிறது.
ஊறவைத்த பாதாம்
ஊறவைத்த பாதாமில் உள்ள நுண்ணூட்டச்சத்து தைராய்டு அழற்சியைக் குறைக்கிறது. பாதாமில் (Soaked almonds) ஊட்டச்சத்துகள் அதிகமாக உள்ளது. ஒவ்வொரு காலையும் 4-5 ஊறவைத்த பாதாம் மற்றும் ஒரு வால்நட் சாப்பிடலாம். இது மந்தநிலையையும் சோர்வையும் அற்புதமாகப் போக்கும்.
தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய்
தைராய்டு பாதிப்பு உள்ளவர்களுக்கு வளர்சிதை மாற்றம் மெதுவாக இருப்பதால் அவர்கள் உண்ணும் அனைத்தும் கொழுப்பாகச் சேர்ந்து, உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது. தேங்காயில் நடுத்தரச் சங்கிலி கொழுப்பு அமிலங்கள் (MCFAs) உள்ளன, அவை மந்தமான வளர்சிதை மாற்றத்தை விரைவாக அதிகரிக்க உதவும். காலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை உணவில் சேர்த்துக்கொள்ளலாம் அல்லது இளநீர் அருந்தலாம்.
தயிர்
தைராய்டு பாதிப்பு உள்ளவர்களில் எழுபது சதவீதம் பேருக்கு செரிமானக் கோளாறும் ஏற்படுகிறது. குறிப்பாக மலச்சிக்கல் மற்றும் வயிறு உப்புசம் ஏற்படுகிறது. தயிர், மோர் அல்லது புரோபயாடிக் உணவுகள் (Probiotic foods) குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கின்றன. குடல் சுத்தமாக இருக்கும்போது, உடலால் மருந்துகளையும் ஊட்டச்சத்துக்களையும் சிறப்பாக உறிஞ்சிக்கொள்ள முடியும், இதனால் சோர்வு குறைகிறது.
கீரை வகைகள் மற்றும் நெல்லிக்காய்
நெல்லிக்காய் மற்றும் கீரை வகைகளில் ( முருங்கைக் கீரை) ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. நெல்லிக்காய் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றவும், தைராய்டு ஹார்மோன் உற்பத்தியைச் சீராக்கவும் உதவுகிறது. தினமும் காலையில் நெல்லிக்காய் சாறு (Gooseberry juice)அருந்துவது உடல் எடையைக் கட்டுப்படுத்த மிகவும் உதவியாக இருக்கும். கீரையில் உள்ள ஊட்டச்சத்துகள் உடல் இயக்கத்தையும் சுறுசுறுப்பையும் அதிகரிக்கிறது.
