புதுச்சேரி தலைமை பொறியாளர் கைது… சிக்கும் தமிழ்நாட்டுப் புள்ளிகள்- ரங்கசாமிக்கு செக் வைக்கும் மோடி

Published On:

| By vanangamudi

புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன், செயற்பொறியாளர் சிதம்பரநாதன், ஒப்பந்ததாரர் இளமுருகன் ஆகிய மூவரையும் சிபிஐ போலீசார் நேற்று (மார்ச் 23) அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்ல… தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மத்தியிலும் இது குறித்து பரபரப்பாக பேசப்படுகிறது. Puducherry Chief Engineer arrest

இதுதொடர்பாக முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று புதுச்சேரி சட்டமன்றத்தில் இன்று திமுக, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.

சிபிஐ-யின் இந்த திடீர் ஆக்‌ஷன் பற்றி சிபிஐ வட்டாரத்திலும், புதுச்சேரி அரசியல் வட்டாரத்திலும் விசாரித்தோம்…

“புதுச்சேரியில் பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஆட்சி அமைக்கும்போதே, முதல்வர் பதவி என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமிக்கு இரண்டரை வருடம், பாஜகவுக்கு இரண்டரை வருடம் என வாய்வழி ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், ரங்கசாமி முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க மனமில்லாமல் பிடிவாதமாக இருந்து வருகிறார். இதனால் பாஜகவுக்கும், என்.ஆர்.காங்கிரஸுக்கும் இடையே நெருடல் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், டெல்லியில் மத்திய பொதுப்பணித்துறையில் இன்ஜினியராக இருந்த தீனதயாளனை 2024 இல் புதுச்சேரி பொதுப்பணித்துறைக்கு தலைமை பொறியாளராக டெபுடேஷனில் அழைத்து வந்தார் முதல்வர் ரங்கசாமி.

இவர் ஏற்கனவே மத்திய புலனாய்வு அமைப்பினரின் கண்காணிப்பில் இருந்து வந்தவர். சமீபத்தில், மத்திய அரசுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் சமூக வலைதளங்களில் அதிகளவில் எதிர்மறையான கருத்துக்கள் பரவி வந்தாக மத்திய புலனாய்வு துறைக்கு ரிப்போர்ட் சென்றது. புலனாய்வு துறையின் விசாரணையில், இந்த சிம் கார்டுகள் அனைத்தும் டெல்லி குருகிராம் பகுதியில் வாங்கப்பட்டது என கண்டுபிடிக்கப்பட்டது.

மத்திய புலனாய்வு அமைப்பு டெல்லி குருகிராம் பகுதியில் விசாரித்தபோது, (CPW) மத்திய பொதுப்பணித்துறையில் வேலை பார்த்த தீனதயாளனும் அங்கு சிம் கார்டு வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்பிறகு, புதுச்சேரி டெபுடேஷனில் வந்த தீனதயாளனை பற்றி மத்திய புலனாய்வு அமைப்பு சற்று கூர்மையாக விசாரிக்கத் தொடங்கியது. அந்த விசாரணையில்தான் இவர் அறிவு ஜீவி (Intellectual forum) என்ற வாட்ஸ் அப் குழுவை நடத்தி வந்தது தெரியவந்தது.    

இந்த குரூப்பில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த உயரதிகாரிகள், அரசியல்வாதிகள், டாக்டர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் இருந்துள்ளனர்.

இவர்கள் மூலமாக பாஜகவுக்கும் மோடிக்கும் எதிரான கருத்துக்களை தீனதயாளன் பரப்பி வந்ததை கண்டுபிடித்துள்ளனர் புலனாய்வு அதிகாரிகள்.

இது ஒருபக்கம் என்றால், இன்னொரு பக்கம் புதுச்சேரியில் பொதுப்பணித்துறையில் ஊழல் மலிந்திருக்கிறது. தரமற்ற வேலைகள் நடந்து வருகிறது, என அடுக்கடுக்கான புகார்கள் டெல்லிக்கு சென்றுள்ளன.

இந்தநிலையில், தீனதயாளன், ஒப்பந்ததாரர்களுடன் 30 சதவிகித கமிஷன் பெற்று, வேலை நடக்கக்கூடிய தொகுதி எம்.எல்.ஏ, அமைச்சர் மற்றும் கட்சி தலைமை வரைக்கும் பிரித்து கொடுப்பதும் சிபிஐ-க்கு தெரியவந்துள்ளது.

இதனால் கடந்த மூன்று மாதங்களாக தலைமை பொறியாளர் தீனதயாளன் மற்றும் அவருக்கு நெருக்கமான அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள், அதிகாரிகள் என அவர்களது கைப்பேசிகளையும் மூவ்மென்டுகளையும் சிபிஐ அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.

அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜின் அண்ணன் மகன் இளமுருகனும் ஒருவர். இவர் காரைக்காலில் 7 கோடியே 44 லட்சத்து 59 ஆயிரத்து ஒன்பது ரூபாய்க்கு ஒப்பந்த வேலை எடுத்து தீனதயாளனுடன் பேசிவந்துள்ளார்.

இந்தநிலையில், தீனதயாளன் அடுத்த வாரம் நடக்கக்கூடிய தனது மகளின் திருமண அழைப்பிதழ் கொடுக்க காரைக்காலுக்கு சென்றார். அங்கு கடற்கரை ஓரத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சுற்றுலா மாளிகையில் தங்கி இருந்தார்.

நேற்று முன்தினமே (மார்ச் 22) இளமுருகனை தொடர்புகொண்ட செயற்பொறியாளர் சிதம்பரநாதன், ”நாளைக்கு சி.இ, அவரோட மகள் கல்யாணத்துக்கு பத்திரிகை கொடுக்க காரைக்காலுக்கு வர்றாரு. கொடுக்க வேண்டிய மீதி கமிஷன எடுத்துட்டு வந்துருங்க” என்று தெரிவித்துள்ளார்.

ஹெஸ்ட் ஹவுஸில் தலைமைப் பொறியாளர் தீனதயாளன், செயற்பொறியாளர் சிதம்பரநாதன், பொறியாளர்கள் மகேஷ், சந்திரசேகர், ஓ.ஏ சீனிவாசன், ஒப்பந்ததாரர் இளமுருகன், அதிகாரிகளின் கார் ஓட்டுநர்கள் என அனைவரும் இருந்தபோது டிஎஸ்பி ஜெயசீலன் தலைமையில் சிபிஐ போலீசார் திடீரென எண்ட்ரி கொடுத்தனர்.

தொடர்ந்து ஒப்பந்ததாரர் இளமுருகன் காரில் இருந்த ரூ.50 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். சிதம்பரநாதனிடம் கான்ட்ராக்டர் இளமுருகன் கொடுத்த 2 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். மொத்தம் 50 லட்சம் கமிஷன் பேசப்பட்டு, ஏற்கனவே 25 லட்சத்தை இளமுருகன் கொடுத்திருக்கிறார். மீதமுள்ள பணத்தை கொடுத்தபோது தான் சிபிஐ அதிகாரிகளிடம் கையும் களவுமாக சிக்கினார். ஒரே நேரத்தில் தீனதயாளன், சிதம்பரநாதன், மகேஷ் என அனைவரது வீடுகளிலும் சிபிஐ சோதனை நடத்தினர்.

இதில் உதவி பொறியாளர் ரவிச்சந்திரன் காரைக்கால் பட்டம்மாள் நகரில் 10 கோடி மதிப்பிற்கு வீடு கட்டியிருப்பது தெரியவந்துள்ளது. மகேஷ் வீட்டில் பணம், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. அவர் வட்டிக்கு பணம் கொடுப்பதும் தெரியவந்துள்ளது.

சிதம்பரநாதன் வீட்டில் இருந்து ரூ.8 லட்சம் பணமும், புதுச்சேரி மூலக்குளத்தில் உள்ள தலைமை பொறியாளர் தீனதயாளன் வீட்டில் ரூ.73 லட்சம் பணமும், 40 ஏக்கர் நிலப்பத்திரமும் பறிமுதல் செய்யப்பட்டது.

அந்த நிலப்பத்திரம் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனுக்கு தொடர்பானது என்கிறார்கள்.

தீனதயாளனை கண்காணித்ததில் முதல்வர் ரங்கசாமி, பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், ஒப்பந்ததாரர் இளமுருகன் மற்றும் மற்ற ஒப்பந்ததாரர்களுடன் உரையாடும்போது பெரும்பாலும் கமிஷன் சம்பந்தப்பட்ட உரையாடலாகவே இருந்திருக்கிறது என்கிறார்கள் சிபிஐ வட்டாரத்தில்.

தீனதயாளன் புதுச்சேரி காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் கந்தசாமியின் உறவினர். இவர் புதுச்சேரியில் வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸில் போட்டியிட தயாராகி வருவதும் தெரிந்துள்ளது. இவருடைய மகளுக்கு புதுச்சேரியில் பிரபலமான லே பாண்டி ஹோட்டலில் ரூ.2 கோடி செலவில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதுதொடர்பான போட்டோக்களையும் சேகரித்துள்ளது சிபிஐ.

பாஜகவுக்கு எதிராக சோஷியல் மீடியாக்களில் கருத்துக்களை பதிவிட்டு வந்த தீனதயாளனை ஊழல் வழக்கில் கைது செய்துள்ளது சிபிஐ. அவரது வாக்குமூலத்தை வைத்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கும், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணனுக்கும் நெருக்கடி கொடுக்க திட்டமிட்டுள்ளது பாஜக அரசு.

இதேபோல, 15 ஆண்டுகளுக்கு முன்பு, காங்கிரஸ் ஆட்சியில் ரங்கசாமி முதல்வராக இருந்தபோது, ஊழல் வழக்கில் பொதுப்பணித்துறையில் தலைமை பொறியாளராக இருந்த ஆனந்தன் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டார் என்பதும் நினைவு கூறத்தக்கது” என்கிறார்கள். Puducherry Chief Engineer arrest

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share