இரண்டரை மணி நேரம் இடையறாத ‘எண்டர்டெயின்மெண்ட்’!
ஒரு நல்ல பொழுதுபோக்கு திரைப்படம் என்ன செய்ய வேண்டும்? ‘ஜாலியான’ திரையனுபவத்தைத் தர வேண்டும். அதேநேரத்தில், சமூகத்திற்குத் தேவையற்ற விஷயங்களைக் கிஞ்சித்தும் சொல்லிவிடக் கூடாது. ‘என்ன பாஸ், பூமர் மாதிரி பேசுறீங்க’ என்றொலிக்கும் ‘மைண்ட்வாய்ஸ்கள்’ கேட்கிறது. மேற்சொன்ன இரண்டையும் ஒன்றிணைத்து, சிறப்பானதொரு ‘மெசேஜ்’ உடன் சீராக நகர்கிற ஒரு பொழுதுபோக்கு திரைப்படத்தைத் தர முடியுமா? ‘முடியும்’ என்ற நம்பிக்கை மிகுதியுடன் ‘டிராகன்’ படத்தைத் தந்திருக்கிறார் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. pradheep dragon movie review
‘ஓ மை கடவுளே’ படத்தை இதற்கு முன் இவர் இயக்கியிருக்கிறார். அதுவே, இவரால் அப்படியொரு முயற்சியில் வெற்றியைப் பெற்றிட முடியும் என்ற எண்ணத்தை வலுப்படுத்துகிறது.
’லவ் டுடே’ இயக்குனர் கம் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், காயாடு லோஹர், ஜார்ஜ் மரியான், இந்துமதி மணிகண்டன், விஜே சித்து, அர்ஷத்கான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், கே.எஸ்.ரவிக்குமார், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லியோன் ஜேம்ஸ் இதற்கு இசையமைத்திருக்கிறார்.
‘டிராகன்’ படம் ‘பீல்குட்’ அனுபவத்தைத் தருகிறதா? dragon movie review

யார் இந்த ‘டிராகன்’? pradheep dragon movie review
தனபால் ராகவன் எனும் டி.ராகவன் பள்ளியில் நல்லபிள்ளையாகத் திகழ்கிறார். கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் தங்கப்பதக்கம் பெற்று, நல்லதொரு கல்லூரியில் பொறியியல் படிக்க இடமும் கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கிறார். அதே சூட்டோடு தனது மனதுக்குப் பிடித்த தோழியிடம் காதலைச் சொல்கிறார். அவரோ, ‘உன்னை மாதிரி நல்ல பையன்லாம் எனக்கு செட் ஆகாது; அவனைத்தான் பிடிக்கும்’ என்று அங்கிருக்கும் ‘ரக்டு பாய்’ ஒருவரைக் கை காண்பிக்கிறார். அவ்வளவுதான்.
அந்த நொடி முதல் ‘பேட் பாய்’ ஆகும் உத்தேசத்தோடு செயல்படத் தொடங்குகிறார் டி.ராகவன். ஆங்கிலத்தில் அவரது பெயரில் உள்ள ‘ஏ வி ஏ’ எழுத்துகளை எடுத்துவிட்டு ‘ஓ’ எனும் எழுத்தைச் சேர்த்து அவருக்கு ‘டிராகன்’ என்று புதிய பெயரைச் சூட்டுகிறார் நண்பன் அன்பு (விஜே சித்து).
ஏஜிஎஸ் பொறியியல் கல்லூரியில் (?!) படிக்கச் செல்லும் ராகவன், அங்கு ’டிராகன்’ ஆக உருவெடுக்கிறார். இல்லாத சேட்டைகளை எல்லாம் கற்றுக்கொண்டு, அவற்றைச் செயல்படுத்தி 48 அரியர்களுடன் வெளியேறுகிறார். காதலி கீர்த்தி (அனுபமா), உடனிருக்கும் நண்பர்கள் வற்புறுத்தியும் அவர் கேட்பதாக இல்லை.
இரண்டாண்டுகள் கழித்து, ஒருநாள் பொழுது விடுகிறது. வேலைக்குச் செல்வதாகப் பெற்றோரிடம் (ஜார்ஜ் மரியான், இந்துமதி) சொல்லிவிட்டு, நண்பர்களின் பிளாட்டுக்கு சென்று பகல் முழுக்க டிவி பார்க்கிறார். மாலை ஆனதும் நண்பர்கள் சிலரிடம் பணத்தை வாங்கிக்கொண்டு வந்து, சம்பளம் வாங்கியதாகச் சொல்லி தந்தையிடம் கொடுக்கிறார். ‘அதற்கு இதற்கு’ என்று சொல்லி அந்தப் பணத்தைத் திரும்ப வாங்குவதோடு, தந்தையின் சம்பளத்தில் இருந்து கொஞ்சம் பணத்தைச் செலவுக்குப் பெற்றுக்கொள்கிறார்.
இப்பேர்ப்பட்ட டிராகன் தனது ’பேட்பாய்’தனத்தை மூட்டை கட்டி வைக்கிற சூழ்நிலை ஒன்று உருவாகிறது. ‘நீயெல்லாம் கல்யாணத்துக்கு சரிப்பட்டு வரமாட்டே’ என்று சொல்லிவிட்டு ‘பை’ சொல்லிவிடுகிறார் காதலி கீர்த்தி. dragon movie review
கோபாவேசம் உச்சத்திற்கு ஏற, அவருக்கு கணவராக வரப்போகிறவரை விட ஒரு ரூபாய் அதிகம் சம்பாதிக்க வேண்டுமென்று கங்கணம் கட்டுகிறார். கீர்த்தியைக் கல்யாணம் செய்பவரின் சம்பளம் ஒரு லட்சத்து இருபதாயிரம். dragon movie review
இந்த தகவலைக் கேட்டதுமே நண்பர்கள் பதைபதைத்துப் போகின்றனர். அப்போது, கிரிக்கெட் விளையாட்டின்போது அறிமுகமாகும் ஒரு நபர் (அஸ்வத் மாரிமுத்து) மூலமாக ஒரு கன்சல்டன்ஸி பற்றி அறிகிறார் ராகவன். பெற்றோரிடம் பொய் சொல்லி பத்து லட்சம் ரூபாய் வாங்கி வந்து அவர்களிடம் கொடுக்கிறார். dragon movie review
கல்லூரி முடித்தது போன்று பொய்யாகச் சான்றிதழ்களை தயார் செய்து, வேறொரு நபரின் உதவியுடன் நேர்காணலில் பங்கேற்று, ஒரு அமெரிக்க ஐடி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்கிறார். ஆனால், அதில் சேர்ந்ததும் வேலைகளைக் கற்றுக்கொண்டு திறம்பட உழைக்கிறார்.
மூன்றாண்டுகள் கழித்து அவரது சம்பளம் மாதத்திற்கு மூன்று லட்சம் ரூபாயைத் தொடுகிறது.
இஎம்ஐ மூலமாக புதிய வீடு, கார் என்றிருக்கும் ராகவனுக்கு ஒரு பெரிய தொழிலதிபர் (கே.எஸ்.ரவிக்குமார்) தனது பெண் பல்லவியை (காயாடு லோஹர்) கல்யாணம் செய்து தர முன்வருகிறார். dragon movie review
இந்த நிலையில், ராகவன் பொய் சொல்லி ஏமாற்றி வேலைக்குச் சேர்ந்தது ஒருவருக்குத் தெரிய வருகிறது. அவர் வேறு யாருமல்ல. ராகவன் படித்த கல்லூரியின் பிரின்சிபல் மயில்வாகனன் (மிஷ்கின்). கடைசி செமஸ்டரில் அவர் முகத்தில் தனது ஐடி கார்டை விசிறியெறிந்துவிட்டு வந்தவர் ராகவன். dragon movie review
அவ்வளவுதான். எந்த ரகசியத்தைத் தன்னைச் சார்ந்தவர்கள் அறியக்கூடாது என்று ராகவன் நினைத்தாரோ, அது உடையப் போகிறது. dragon movie review
அதன்பிறகு என்னவானது? மயில்வாகனன் என்ன செய்தார்? அதனை ராகவன் எப்படி எதிர்கொண்டார் என்று சொல்கிறது ‘டிராகன்’ படத்தின் மீதி.
உண்மையைச் சொன்னால், இதுவும் ‘சதுரங்க வேட்டை’ வகையறா கதைதான். ஆனால், ‘அறம் இல்லாததைச் செய்தால் வாழ்க்கை என்னவாகும்’ என்ற கருத்தைச் சொன்ன வகையில் கவனம் ஈர்த்திருக்கிறார் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து.
’சூது கவ்வும்’ திசை நோக்கிய திரைக்கதையின் முடிவில் ‘தர்மம் மறுபடி வெல்லும்’ என்று அவர் சொல்லியிருக்கிறாரா? அதனை அறிய விரும்புபவர்கள் இந்தப் படத்தைத் தாராளமாகக் காணலாம்.
போலவே, சுமார் இரண்டரை மணி நேரம் இடையறாது, இமைக்க மறந்து தியேட்டரில் உயிர்ப்போடு ஒரு திரைப்படத்தைக் காண வேண்டுமே என்பவர்களுக்கும் ஏற்றதாக இருக்கிறது இப்படம். அந்த அளவுக்கு இதில் ‘எண்டர்டெயின்மெண்ட்’ அம்சங்கள் எல்லா தரப்புக்கும் ஏற்ற வகையில் பொதிந்து வைக்கப்பட்டிருக்கின்றன.

‘பீல்குட்’ அனுபவம்! pradheep dragon movie review
இந்த படத்தில் நடித்த அனைவருமே மிகச்சிறப்பான நடிப்பைத் தந்திருக்கின்றனர். குறிப்பாக பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், ஜார்ஜ் மரியான், இந்துமதி மணிகண்டன், மிஷ்கின் மற்றும் அர்ஷத்கான் நடிப்பு அபாரம். ‘ஜென்ஸீ’ தலைமுறை பாஷையில் சொல்ல வேண்டுமானால் ‘வேற லெவல்’.
காயாடு லோஹர் கவர்ச்சிப்பதுமையாக வந்து போயிருக்கிறார். கொஞ்சமாக நடிக்கவும் செய்திருக்கிறார். அது, அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பெற்றுத் தரக்கூடும்.
இவர்கள் தவிர்த்து கௌதம் வாசுதேவ் மேனன், கே.எஸ்.ரவிக்குமார், விஜே சித்து, ரவீந்தர், பி.எல்.தேனப்பன், சுஜாதா பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
‘டிராகன்’ படத்தின் மிகப்பெரிய சிறப்பு, தொழில்நுட்பக் கலைஞர்களை மிகச்சிறப்பாக ஒருங்கிணைத்து இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தந்திருக்கும் செறிவு மிகுந்த உள்ளடக்கம். அது, இப்படத்தை அடுத்தடுத்து பல முறை காண வேண்டும் என்ற உத்வேகத்தைத் தூண்டிவிடுகிறது. ‘ரிப்பீட் ஆடியன்ஸ்’ வரவழைக்கும் அளவுக்குச் சிறப்பான உள்ளடக்கத்தைத் தருவது சாதாரண விஷயமல்ல.
அந்த வகையில் ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மிரெட்டி, படத்தொகுப்பாளர் லியோன் ஜேம்ஸ், தயாரிப்பு வடிவமைப்பாளர் வி.செல்வா, சண்டைப்பயிற்சி இயக்குனர்கள் விக்கி மற்றும் திலீப் சுப்பராயன், நடன இயக்குனர் ஜேடி, ஒலிக்கலவையைக் கையாண்டிருக்கும் எம்.ஆர்.ராஜகிருஷ்ணன், டிஐ, விஎஃப்எக்ஸ், ஆடை வடிவமைப்பில் பங்கேற்றவர்கள் என்று பலரது உழைப்பைச் சிறப்பாகத் திரையில் மிளிரச் செய்திருக்கிறார் இயக்குனர்.
குறிப்பாக, லியோன் ஜேம்ஸ் தந்திருக்கும் பின்னணி இசை இப்படத்தின் முதுகெலும்பாகத் திகழ்கிறது.
கல்லூரி மாணவ மாணவியர் கரகோஷம் எழுப்பும்போது ‘பனைமரத்துல வவ்வாலா.. ..க்கே சவாலா..’ என்று குறிப்பிட்ட கல்லூரியை, அதில் பயில்பவரைச் சொல்வது வழக்கம். அது போன்ற முழக்கங்களை வெவ்வேறு சூழல்களைக் கொண்ட காட்சிகளில் புகுத்தி ‘கூஸ்பம்ஸ் மொமண்ட்’ தந்திருக்கிறார் லியோன். ஆரவாரமிக்க காட்சிகளில் மட்டுமல்லாமல் சோகத்தையும் நெகிழ்ச்சியையும் வெளிப்படுத்துகிற இடங்களில் மயிலிறகால் வருடுவது போன்ற இசையைத் தந்திருக்கிறார்.
இனி அவரை தெலுங்கு, இந்தி, மலையாளத் திரையுலகைச் சேர்ந்தவர்கள் முழுதாகக் கொத்திக்கொண்டு போனால் ஆச்சர்யப்படத் தேவையில்லை.
‘டிராகன்’னில் லியோன் தந்திருக்கும் பாடல்களில் ’வழித்துணையே’ சட்டென்று மனதோடு ஒட்டிக்கொள்ளும் ரகம். அது போக ‘ஏண்டி விட்டுப்போன’, ’இட்ஸ் ரைஸ் ஆப் எ டிராகன்’, ’மாட்டிக்கினாரு ஒர்த்தரு’ உள்ளிட்ட பாடல்களும் நம்மைத் திரைப்படத்திற்குள் இழுத்துக் கொள்கின்றன.
சுமார் இரண்டே கால் மணி நேரம் இளசுகளின் ஆட்டம் என்றால், கடைசி இருபது நிமிடங்கள் மட்டும் பெரியவர்கள் ‘இது எங்களுக்கான பகுதி’ என்று காலரை தூக்கிவிட்டுக் கொள்ளும் அளவுக்கு நெகிழ வைக்கிறது ‘டிராகன்’. முக்கியமாக, அறத்தின் வழி நடப்பவர்கள் உண்மையில் தோற்றவர்களா, வெற்றி பெற்றவர்களா என்று சொல்லியிருக்கிறது. அதனைப் பாடமாகச் சொல்லித்தராமல் ‘படமாக’ உணர வைப்பதுதான் ‘டிராகன்’னின் வெற்றி.
இதில் பிரதீப் ரங்கநாதன், அவருடன் வருபவர்கள், அர்ஷத் கான் உள்ளிட்ட சிலர் ஏற்று நடித்த பாத்திரங்கள் ஆபாசமாக, கொச்சையாகப் பேசுகிற அல்லது அப்படியான அர்த்தம் தொனிக்கிற வார்த்தைகளைப் பாதியில் முழுங்குகிற இடங்கள் வசனங்களில் இடம்பெற்றுள்ளன. அது போக காயாடு லோஹரின் கவர்ச்சியும் கொஞ்சம் ‘ஏ’ ரகம்.
இது போக, ’பள்ளி யூனிபார்மில் இருக்கும்போதே தங்கப்பதக்கமும் வாங்கிக்கொண்டு ஒரு கல்லூரியில் பிளேஸ்மெண்டும் கிடைக்க வழி இருக்கிறதா’ என்று லாஜிக் சார்ந்த சில கேள்விகளையும் எழுப்புகின்றன இதில் வரும் சில காட்சிகள்.
மேற்சொன்ன விஷயங்களைத் தவிர்த்திருந்தால், ‘டிராகன்’ ஒரு முழுமையான, சிறப்பான ‘பீல்குட்’ திரைப்படமாக, குடும்பச் சித்திரமாக இருந்திருக்கும். ‘பூமர் மாதிரி பேசாதீங்க, புஷ்பா மாதிரி படங்களையே குடும்பத்தோடு பார்க்கறப்போ இதெல்லாம் ஜுஜுபி மேட்டர்’ என்று சிலர் சொல்லக்கூடும். அவ்வாறு சொல்லத் தயாராக இருந்தால், ‘டிராகன்’ குழந்தைகளையும் பெரியவர்களையும் அழைத்துச் சென்று குடும்பத்தோடு பார்த்து ரசிக்கக்கூடிய ஒரு திரைப்படம் தான்.
இப்படிப்பட்ட திரையனுபவத்தைப் பெறத்தான் எத்தனை காலம் காத்திருக்க வேண்டியிருக்கிறது..!