லவ் டுடே – விமர்சனம்!

சினிமா

தன்னுடைய உயர்வுக்காக சமுதாயத்தைப் பற்றிக் கவலைப்படாமல் படமெடுக்கும் இயக்குநர்கள் வரிசையில் சேர்ந்திருக்கிறார் கோமாளி பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதன்.

காதலன் கைபேசி காதலி கையில் காதலி கைபேசி காதலன் கையில் ஒரு மணிநேரம் மாற்றிக் கொள்ள உடன்படும் காதலர் உண்டா? அப்படி நடந்தால் என்ன நடக்கும் என்பதே லவ் டுடே படம்.

இன்றைய இளைஞர்களுக்கு காதலிப்பதிலோ  ஒரு பெண்ணிடம் பேசுவதிலோ எந்த சிரமமும் இல்லை. சமூக வலைதளங்களின் வருகை அந்தத் தயக்கங்களையெல்லாம் உடைத்திருக்கிறது. ஆனால், அதே வலைதளங்களில்  பெரும்பான்மையினர் அறியாத ரகசியங்களும் சிதறிக் கிடப்பதை கருவாக வைத்து ‘லவ் டுடே’ உருவாகியிருக்கிறது.

நாயகன் பிரதீப் நாயகி இவானா ஆகியோர் காதலிக்கிறார்கள். அக்காதலை ஏற்றுக் கொள்ள இவானாவின் தந்தை சத்யராஜ், இருவரும் உங்கள் கைபேசிகளை ஒருநாள் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். அதன்பின் உங்களுக்குச் சம்மதமென்றால் எனக்கும் சம்மதம் என்கிறார்.

love today movie review

அதன்படி கைபேசிகளை மாற்றிக் கொள்வதால் ஏற்படும் சிக்கல்கள் என்ன? அவற்றை எப்படி எதிர்கொள்கிறார்கள்? என்பதைச் சொல்லியிருக்கிறது படம். இயக்குநர் பிரதீப் நாயகனாக நடித்திருக்கிறார்.

நாயகனாக நடிப்பதற்காக தனுஷ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கும் படங்களை பார்த்திருப்பார் போல. அவர்களைப் போலவே நடிக்க முயற்சித்திருக்கிறார்.

இக்காலப்பெண்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட காதல்கள் அதையும் தாண்டி குறைந்தது ஓர் ஆண் நண்பர் என்றிருப்பதாக, கதாநாயகி இவானாவின் கதாபாத்திரம் மூலம் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

வேணுசாஸ்திரி என்கிற அய்யங்கார் வேடத்தில் சத்யராஜ். காதலுக்கு  எப்போதும் பிராமணர்கள் எதிரானவர்கள் என்பதற்கு ஏற்ப அவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 

சில காட்சிகளில் மட்டுமே சத்யராஜ் நடித்திருந்தாலும் படம் முழுவதும் அவர் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறார். நாயகனின் அம்மாவாக வரும் ராதிகா பாத்திரமும் மகனிடம் அவர் பேசும் டயலாக் ஏனோ தானோ எனப் போகும்  படத்துக்கு அழுத்தம் சேர்க்கிறது.

ஆதித்யா கதிர் உள்ளிட்ட நாயகனின் நண்பர்கள் படம் தொய்வின்றி நகர உதவுகிறார்கள். யோகிபாபு ரவீனாரவி திருமணப் பேச்சு அதன்பின் நடக்கும் நிகழ்வுகள் ஆகியன உருவகேலிக்கு எதிராக அமைந்திருக்கிறது.

தினேஷ் புருசோத்தமனின் ஒளிப்பதிவில் காட்சிகள் நன்றாக அமைந்திருக்கின்றன. இறுதிக்காட்சியில் நாயகனும் நாயகியும் சந்திக்கும் காட்சியின் பின்னணி அழகு.

யுவனின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஆகியன படத்துக்கு பக்கபலமாக அமைந்திருக்கின்றன

முதல்பாதி முழுக்க பார்வையாளர்களை வயிறு குழுங்க சிரிக்க வைத்திருக்கிறார்கள். முக்கியமாக, சத்யராஜ் மற்றும் பிரதீப் முதல் சந்திப்பில் விசில் பறக்கிறது.

இரண்டாம் பாதியிலும் பல இடங்களில் நகைச்சுவைக் காட்சிகள் பலமாக கைதட்ட வைக்கின்றன. திரைக்கதையில் ஏராள இரட்டை அர்த்த வசனங்கள், முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள், ரகசியத் தவறுகளை பொதுமைப்படுத்துவது ஆகியன ஆபத்தான போக்கு என்பதை குறிப்பிடாமல் இருக்க முடியாது.

லவ் டுடே இளம் வயதினர் மட்டுமே பார்க்க கூடிய படம்.

படத்தின் இரண்டாம் பாதியின் நீளம், தடுமாற்றத்தைத் தந்த முதல் பாதி மேக்கிங் ஆகியவை படத்தின் சிறிய பலவீனங்கள். ஆனால், அதை யோசிக்க வைக்க நேரம் கொடுக்காமல் சிரிக்க வைத்தே படக்குழுவினர் வெற்றி பெற்றுள்ளனர்.

இராமானுஜம்

கோவை வழக்கில் ஆதாரங்கள் அழிப்பு : மீண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி

தெலங்கானா இடைத்தேர்தல் : பாஜக VS டிஆர்எஸ்… வெற்றி பெறப்போவது யார்?

+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *