ADVERTISEMENT

விமர்சனம் : ‘dude’ இவ்வளவுதான் ‘DUDE’!

Published On:

| By Minnambalam Desk

ராஜ திருமகன்

பால்வளத்துறை அமைச்சரின் (சரத்குமார் ) தங்கையின் (ரோகிணி) மகன், dude ஏகன் சிதம்பரம் (பிரதீப் ரங்கநாதன்) . அமைச்சருக்கும் தங்கைக்கும் பேச்சு வார்த்தை இல்லை (சஸ்பென்ஸ் . சஸ்பென்ஸ்..!)

ADVERTISEMENT

அமைச்சரின் மகள் குறளரசி (மமிதா பைஜூ) தன் அத்தை மகனான ஏகனிடம் காதலைச் சொல்கிறாள். ”சின்ன வயதில் இருந்தே உன்னைப் பார்த்ததால் உன்மேல் எனக்கு லவ் எல்லாம் வரல” என்று அவன் சொல்ல, அவள் கண்ணீரோடு கெஞ்ச , கண்டு கொள்ளாமல் போய்விடுகிறாள் .ஏகன்.

வீட்டில் இருக்கப் பிடிக்காமல் அவள், மேல் படிப்புக்கு பெங்களூர் போகிறாள் .

ADVERTISEMENT

இந்த நிலையில் ஏகனுக்கு ஏற்படும் விபத்தில் இன்னொரு விபத்தாக அவனுக்கு குறளரசி மேல் காதல் வருகிறது .

அதைச் சொல்ல இவன் போக, அதற்குள் அவள் இன்னொருவனை லவ் செய்து விடுகிறாள்.

ADVERTISEMENT

அதை அறிந்த ஏகன் மனதைக் கல்லாக்கிக் கொண்டு அவர்கள் காதலுக்கு உதவ முயல, அமைச்சர் மாமாவோ ஏகனுக்கும் குறளரசிக்கும் கல்யாணம் நிச்சயம் செய்கிறார்.

இனி காதலைச் சொன்னால் அமைச்சர் ஏற்க மாட்டார் என்பது ஏகனுக்குப் புரிய, கல்யாணத்துக்குள் எப்படியாவது காதல் ஜோடியை வெளிநாட்டுக்கு அனுப்பி விடலாம் என்று ஏகன் திட்டமிட , காதலனால் குறளரசி கர்ப்பம்!

எனவே விசா கிடைக்காத நிலையில் , ஏகனே அவளைக் கல்யாணம் செய்து கொண்டு கணவனாக இருந்தபடியே குழந்தை பிறந்ததும் விவாகரத்து செய்து, அவளையும் அவள் காதலனையும் சேர்த்து வைக்க முயல , மாமாவுக்கு எல்லாம் தெரியவர , மாமா என்ன செய்தார் என்பதே இந்த dude.

நடிகர் சந்திரபாபு தன் முதலிரவில் அவரது மனைவி வேறு ஒருவனைக் காதலிப்பதாக சொல்ல, உடனே அவர் அவனை வர வைத்து மனைவியை அவனோடு அனுப்பி வைத்தார் என்று …

உண்மை பாதி பொய் பாதி கலந்து செய்த கலவையாக இங்கே ஒரு கதை உண்டு.

இந்தப் பட இயக்குனர் கீர்த்தீஸ்வரனுக்கு ஒரு சந்திரபாபு போதவில்லை . பத்துப் பதினைந்து சந்திரபாபுக்களை ஒன்றாகக் கட்டி அழுத்தி முறித்து உடைத்து சூப் வைத்து குடிக்கும்படியாக ஒரு கேரக்டரை எழுதி இருக்கிறார். அதே நேரம் சாதி ஆணவத்தை நான் சென்ஸ் என்று உடைத்துப் போடும் காட்சி அருமை/ பாராட்டுகள்

லவ் டுடே , டிராகன் மூலம் நடிப்புக்கு ஏற்படுத்திக் கொண்ட அதே பாணியில் இந்தப் படத்திலும் இளைஞர்களுக்குப் பிடித்தமான அப்நார்மல் தன்மையோடு நடித்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன் . ரசிகர்கள் விசில் அடிக்கிறார்கள். அந்த கேரக்டரை பிரதீப் ரங்கநாதன் எதிர்கொள்ளும் விதம் சிறப்பு.

ஒரு நிலையில் சுயநலவாதி என்று நினைக்க வைக்கிற கேரக்டரில், சிரித்துக் கொண்டும் நடித்துக் கொண்டும் கவனம் கவர்கிறார் மாமிதா பைஜூ

ஆரம்ப அப்பாவி நடிப்பு, அப்புறம் எடுக்கும் வில்லத்தனம் அதன் விளைவான உருக்கம் என்று, பிரமாதமாக ஸ்கோர் செய்திருக்கிறார் சரத்குமார் .

தாலி செண்டிமெண்டை அந்தத் தாலியை வைத்தே கலாய்த்திருக்கிறார் இயக்குனர் கீர்த்தீஸ்வரன்.

சில பிராங்க் பண்ணும் ஐடியாக்கள் காட்சியாகவும் மாண்டேஜ் எனப்படும் காட்சித் துண்டுகளாகவும் அசத்துகின்றன . பிராங்க் செய்வதை உண்மை என்றும், உண்மையை பிராங்க் என்றும் நம்ப வைக்கும் அந்த பிளே, இந்தப் படத்தின் திரைக்கதையில் உச்சம் .

நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு ரம்மியம் . இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் படத்துக்கு இன்னும் கொஞ்சம் உபயோகங்கர் ஆக இருந்திருக்கலாம் . பரத் விக்ரமனின் படத் தொகுப்பு தெறிப்பு .

மாமன் மகளை சிறு வயது முதல் பார்த்ததால் அவளை காதலிக்க முடியவில்லை என்கிறான் ஏகன்.

ஆனால் சிறு வயது முதல் தான் பாசமாக பார்த்த அவள்,ஏகன் கிடைக்காத ஏக்கத்தில் நொறுங்கி அழும்போதும், கண்டு கொள்ளாமல் சுயநலவாதி போலப் போய்விடுகிறான் .

அப்புறம் ஆக்சிடென்ட் டன் விளைவாக காதல் வருகிறது

திரும்ப இவன் காதல் சொல்ல வரும்போது அவள் வேறொருவனை காதலித்து விட்டாளாம். இதற்கு எதற்கு அவள் ஒரு லாரி கண்ணீரைக் கொட்டி விட்டு வேறு ஊருக்குப் போகணும் .

ஏகன் ஆக்சிடெண்டில் சிக்கி சாகும் தருவாயில் அவள் மேல் அவனுக்கு காதல் வருகிறது என்பதும் ஏற்புடையதாக இல்லை.

காதல் வந்திருக்கும் என்றால் அவளது ஏக்கக் கண்ணீரின் போதே அவனுக்கு காதல் வந்திருக்கும் . வரலை என்றால் செத்தாலும் இவனால் அவளைக் காதலியாகப் பார்க்க முடியாது .

அப்படிப் போன காதலி , நிலைமையை உணராமல், கல்யாணத்துக்கு முன்பே காதலனோடு ‘சேர்ந்து’ கர்ப்பமும் ஆவது என்பதும் சரிதானா? அப்படிப்பட்ட மாமா மகளுக்காக நாயகன் அளப்பரிய தியாகம் செய்கிறான் என்பதும் யதார்த்தமாக . அவளுக்காக இவன் அளப்பரிய தியாகம் , பழி பாவம் எல்லாம் சுமப்பதும் யதார்த்தம்தானா?

அதுவும் இப்படி ஒரு பெண் கேரக்டருக்கு ‘குறளரசி’ என்று பெயர் .

எல்லா கேரக்டர்களும் எல்லா கேரக்டர்களையும் தேவை என்றால் காலைப் பிடிக்கிறது தேவை இல்லை என்றால் கழுத்தை நெரிக்கிறது . முன்னாடி கடிக்குது . அப்புறம் பின்னாடி உதைக்குது .

ஆனால் ஒருவனின் காதலி இன்னொருவன் மனைவி ஆகி, காதலித்தவனால் அவளுக்கு குழந்தை பிறந்தது என்ற ‘நீல நிற’ச் சிக்கலை இன்றைய ஜென் ஜீ தலைமுறை ரசிக்கிறது என்பதுதான் __ அவரவர் விருப்பத்துக்கு fill in the blanks. .

MY CHILDREN AND YOUR CHILDREN ARE PLAYING WITH OUR CHILDREN என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது.

இப்படி படத்தில் அடிப்படையிலேயே சில போதாமைகள் இருந்தபோதும் , அடுத்தடுத்து சுவாரஸ்யமான சம்பவங்கள் கொடுத்து எடுக்கப்பட்ட படம் இது .

விபரீத நிகழ்வுகளுக்குள் தைரியமாக நுழையும் திரைக்கதை, அதையும் சமாளிக்கும் DUDE இன் கெத்து ரசிகர்களை ரசிக்க வைக்கிறது .

பொதுப் புத்தியில் சரி என்று தோன்றும் சில விசயங்களை இயக்குனர் கீர்த்திவாசன், லாஜிக்காக டெக்னிக்கலாக பயாலஜிக்கலாக உடைத்துப் போடும் விதம் ஈர்க்கிறது .

ஜனரஞ்சகப் பொழுது போக்கு நேர்த்தியால் தீபாவளி படங்களில் தமிழில் வசூலில் முதலிடத்தில் நிற்கிறது DUDE…

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share