25 ரூபாய்தான் மாத வாடகை : ஆச்சரியம் ஆனால் உண்மை!

Published On:

| By Kavi

கேரளாவின் கொச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் முக்கிய வேளாண் நிறுவனமான ’ஹாரிசன்ஸ் மலையாளம்’, ஆர்.பி.ஜி. குழுமத்தின் ஒரு பகுதியாகும்.

மூணாறில் அந்நிறுவனத்துக்குச் சொந்தமான கட்டடத்தில் 114 ஆண்டுகளாக ஒரு தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இந்த தபால் நிலையத்துக்கு மாத வாடகையாக 25 ரூபாய் என அப்போது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இன்றும் அதே வாடகையில் அந்த தபால் நிலையம் இயங்கிக் கொண்டிருக்கிறது என ஆர்.பி.ஜி. குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

அந்த பதிவில், “மூணாறில் உள்ள இந்தப் பிரிட்டிஷ் கால தபால் நிலையம், ஹாரிசன்ஸ் மலையாளம் நிறுவனத்துக்குச் சொந்தமான கட்டடத்தில் கடந்த 114 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

இதற்கான மாத வாடகை வெறும் 25 ரூபாய். தொழில்நுட்பம் மாறிக்கொண்டே இருந்தாலும், சில நிறுவனங்கள் அமைதியாகத் தொடர்ந்து மக்களை இணைத்துக் கொண்டிருப்பதை நினைவூட்டும் அழகான நினைவுச் சின்னம் இது” என பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

அந்தப் பதிவுக்கு கமெண்ட் செய்துள்ள ஒருவர், “ஹர்ஷ், இது உண்மையிலேயே பாராட்டத்தக்க செயல். வாடகையை அப்படியே வைத்திருப்பதன் மூலம், விலைமதிப்பற்ற மற்றும் பழமையான நினைவுகளைத் தாங்கிய இந்தக் கட்டடத்தைப் பாதுகாப்பது சிறப்பானது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொருவர், “எனது குடும்பத்தினர் 2024-ஆம் ஆண்டு இந்தத் தேயிலைத் தோட்டப் பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்தனர். மூணாறில் மூன்று நாட்கள் தங்கியிருந்தோம். அப்போது இந்தத் தபால் நிலையத்தையும் தொழிலாளர்களுக்கான மருத்துவ மையத்தையும் பார்த்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

இன்னொரு நபர், “பழுதடைந்த நிலையில் இருக்கும் இந்தக் கட்டடத்தில் எந்த அழகும் இல்லை. இது ஒரு தபால் நிலையம் என்ற பெயருக்கேற்ற நிலையில் இல்லை. நீண்ட காலத்திற்கு முன்பே இது நவீனமயமாக்கப்பட்டிருக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்குச் சிறந்த வசதிகள், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகளுடன் புதிய கட்டடம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்” என்று மாறுபட்ட கருத்தை கூறியுள்ளார்.

“அன்புக்குரியவர்கள் கையால் எழுதிய கடிதங்களையும் இன்லேண்ட் லெட்டர், அஞ்சல் அட்டைகளையும் பெற்ற காலத்தின் மகிழ்ச்சியை இது நினைவூட்டுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார் இன்னொருவர்.

உலகின் மிகப்பெரிய தபால் வலையமைப்பைக் கொண்ட நாடு இந்தியா.

நாடு முழுவதும் 1,64,999 தபால் நிலையங்கள் உள்ளன. அவற்றில் 1,49,385 தபால் நிலையங்கள் கிராமப்புறங்களிலும், 15,614 தபால் நிலையங்கள் நகர்ப்புறங்களிலும் உள்ளன.

1766-ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியில் இருந்த வாரன் ஹேஸ்டிங்ஸ், ‘கம்பெனி மெயில்’ என்ற தபால் சேவையை முதன்முதலில் கொண்டு வந்தார்.

பின்னர் 1854-ஆம் ஆண்டு, அப்போதைய கவர்னர் ஜெனரல் டல்ஹவுசி, தபால் சேவையை பிரிட்டிஷ் அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தார்.

இப்படி நீண்ட வரலாற்றுக்குச் சொந்தமானது இந்திய தபால் சேவை. இன்றைய நவீன காலச்சூழலில் உலகின் எந்த மூலைக்கும் நொடிப்பொழுதில் தகவல்களை அனுப்பிவிடலாம் என்ற நிலையிலும் கூட, தபால் நிலையங்கள் பல்வேறு பரிணாமங்களை அடைந்து இன்றும் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது.

அதில் ஒரு கட்டடம் வெறும் 25 ரூபாய் வாடகையில் 114 ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்பது பெரும் ஆச்சரியத்தை தருகிறது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share