சாகித்திய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளரும் கவிஞருமான புவியரசு, கோவையில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய், புவியரசுவின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்த உத்தரவிட்டுள்ளார்.
கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்து வந்த கவிஞர் புவியரசு, கடந்த 1971-ஆம் ஆண்டு கோவையில் ‘வானம்பாடி’ கவிதை இயக்கத்தை உருவாக்கியவர்களில் மிக முக்கியமானவர் ஆவார். கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு எனச் சுமார் 120-க்கும் மேற்பட்ட நூல்களை அவர் எழுதியுள்ளார். ஆங்கிலம், ரஷ்யன், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலிருந்து முக்கிய படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
திரைப்படத் துறையிலும் தடம் பதித்த இவர், நடிகர் கமல்ஹாசனின் நெருங்கிய இலக்கிய நண்பராகக் கருதப்படுகிறார். புவியரசு எழுதிய ‘கையொப்பம்’ என்ற கவிதை தொகுப்பிற்கும், ‘புரட்சிக்காரன்’ என்ற வங்க மொழிபெயர்ப்பு நூலுக்கும் என இரண்டு முறை சாகித்திய அகாடமி விருதுகள் வழங்கப்பட்டன.
அவரது மறைவிற்கு முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் இலக்கியவாதிகளும் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கவிஞர் புவியரசுவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து, அவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் தனது எக்ஸ் தளப் பதிவில்,
“சாகித்ய அகாதமி விருது பெற்ற கவிஞரும், எழுத்தாளருமான புவியரசு அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
சமூகப் பொறுப்பை வலியுறுத்துகின்ற கவிதைகளாலும், உலக இலக்கியச் செல்வங்களைத் தமிழுக்குக் கொண்டுவந்த மொழிபெயர்ப்புகளாலும் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் புவியரசு அவர்கள்.
‘கையொப்பம்’ என்ற கவிதைத் தொகுப்பிற்காக தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது. ‘புரட்சிக்காரன்’ என்ற மொழிபெயர்ப்பு நூலிற்காக மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
கவிஞர் புவியரசு அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர். உறவினர்கள். நண்பர்கள் மற்றும் தமிழ் இலக்கிய உலகைச் சேர்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இலக்கியத் துறையில் திரு. புவியரசு அவர்களின் பங்களிப்பைப் போற்றி அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்.” என தெரிவித்துள்ளார்.
