மூன்று சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உறுதி செய்துள்ளது.
திருநெல்வேலி மேலப்பாளையத்தில் 2023ல் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். அதேபகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான ஆனந்தசேகர் (41) 6,7,8 வயதுடைய 3 சிறுமிகளை மிரட்டி வீட்டிற்குள் அழைத்துச் சென்று வன்கொடுமை செய்துள்ளார்.
அதோடு நடந்த சம்பவத்தை வெளியில் கூறினால், கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியிருக்கிறார். ஆனால் சிறுமிகள் வழக்கத்துக்கு மாறாக இருப்பதை உணர்ந்த பெற்றோர்கள் என்ன நடந்தது என கேட்டபோது, தங்களிடம் ஆனந்தசேகர் தவறாக நடந்துகொண்டதாக கூறியிருக்கின்றனர்.
இது தொடர்பாக பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆனந்த சேகரை கைது செய்தனர்.
இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் கடந்த 2026, மார்ச் 12ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய போக்சோ நீதிமன்றம், ஆனந்த சேகரை குற்றவாளி என்று அறிவித்தது. அதோடு அவருக்கு தூக்கு தண்டனை விதித்தும் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா 7 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை உறுதி செய்வதற்காக பாளையங்கோட்டை போலீசார் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ஆனந்த சேகர் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கை இன்று (ஜூன் 30) விசாரித்த நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் கே.கே.ராமகிருஷ்ணன், போக்சோ சட்டம், 2012-ன்கீழ் இந்த மரண தண்டனை உறுதி செய்யப்படுகிறது என்று உத்தரவு பிறப்பித்தனர்.
அதுபோன்று தூக்கு தண்டனையை எதிர்த்த ஆனந்த சேகரின் மனுவை தள்ளுபடி செய்தனர்.
அப்போது நீதிபதிகள், ”குழந்தைகளை பாதுகாப்பதே நல்ல சமூகத்தின் அடையாளம். நம் முன் நிற்கும் இந்த குற்றவாளி வெறும் உடல் ரீதியான குற்றத்தை மட்டும் செய்யவில்லை. கொன்றுவிடுவேன் என்று மரண பயத்தை காட்டி, ஒரு குழந்தை பாதிக்கப்படுவதை இன்னொரு குழந்தை பார்க்கும்படி கட்டாயப்படுத்தியிருக்கிறார். திட்டமிட்டு மூன்று குழந்தைகள் மீதும் ஒரு பயங்கரவாதத்தையே நடத்தியிருக்கிறார். இவர் வெறும் சட்டத்தை மட்டும் மீறவில்லை. அந்த குழந்தைகளின் ஒட்டுமொத்த குழந்தை பருவ ஒளியையே அணைத்துவிட்டார். குழந்தைகள் வாழும் காலம் முழுவதும் அவர்களை ஒரு தீராத பயமும், துயரமும் நிழல்களாக தொடரும் வகையிலான கொடூர செயல் இது.
மனசாட்சி என்பது துளி கூடவா இல்லை. இவ்வளவு கொடூரமான குற்றத்திற்கு இந்தச் சமுதாயத்தின் ஒட்டுமொத்த வெறுப்பையும், கோபத்தையும் பிரதிபலிக்கும் வகையிலான ஒரு தீர்ப்பு அவசியமாகிறது.
எந்தவொரு இரக்கமும் இல்லாமல், திட்டமிட்டு, இவ்வளவு நீண்ட கொடூரத்தை அரங்கேற்றிய இந்த அரக்கனின் உயிரைக் காப்பாற்ற நினைப்பது, தவறான இடத்தில் காட்டப்படும் கருணையாகிவிடும். ஒருவேளை கருணை காட்டப்பட்டால், குழந்தைகள் சிதைக்கப்படுவதை சட்டம் வேடிக்கை பார்ப்பதுபோல் ஆகிவிடும்.
இத்தகைய மிகக் கடுமையான வழக்கிலும் மரண தண்டனை விதிக்காமல், அதை ஆயுள் தண்டனையாகக் குறைப்பது, ‘பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வாழ்நாள் முழுவதற்குமான நிம்மதியைக் குலைத்த ஒரு அரக்கன், சிறைச்சாலையின் வசதிகளோடு சுகமாக வாழ முடியும்’ என்ற ஒரு மோசமானசெய்தியை இந்தச் சமுதாயத்திற்குக் கொண்டு சேர்த்துவிடும்.
வக்கிர உணர்ச்சிகளைத் திருப்திப்படுத்துவதற்காகக் குழந்தைகளை வேட்டையாடுபவர்களைக் கையாளும் போது, சட்டம் உறுதித் தன்மையை கொண்டிருக்க வேண்டும்.
நம் நாட்டின் எதிர்காலமான குழந்தைகளை அச்சுறுத்தலாம், சிதைக்கலாம், அவர்களின் வாழ்க்கையை அழிக்கலாம், அதிலிருந்து தாங்கள் தண்டனையின்றி தப்பித்துவிடலாம் என்று நினைக்கும் எவருக்கும் இந்தத் தீர்ப்பு ஒரு கடுமையான, உறுதியான எச்சரிக்கையாக இருக்கட்டும்.
மனித குலத்திற்கு இடையே நடமாடும் தன் உரிமையை இந்த கைதி முற்றிலும் இழந்துவிட்டார்” என்று கூறி தூக்குத் தண்டனையை உறுதி செய்தனர்.
