தமிழகத்திற்கு போதுமான நிதி அளித்தும் கூட சிலர் அழுதுகொண்டே இருக்கிறார்கள் என்று பிரதமர் மோடி இன்று (ஏப்ரல் 6) திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். Modi says DMK government crying
பாம்பனில் புதிய ரயில்வே மேம்பாலத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று காலை இலங்கையிலிருந்து மண்டபம் பகுதிக்கு வந்தடைந்தார். அவரை ஆளுநர் ரவி, மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ், மத்திய தகவல் ஒலிப்பரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றனர்.

தொடர்ந்து பாம்பனில் புதிய ரயில்வே மேம்பாலத்தை மோடி திறந்து வைத்தார். பின்னர் ராமேஸ்வரம் கோவிலில் வழிபாடு செய்தார். இதனை தொடர்ந்து ராமேஸ்வரத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரூ.8,000 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது, “திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியை விட கடந்த 10 ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிக நிதியை மத்திய அரசு வழங்கியிருக்கிறது. தமிழ்நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கு இது மிகவும் உதவியிருக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் ரயில்வேத்துறை பட்ஜெட்டில் 7 மடங்கிற்கு அதிகமாக பங்களிப்பு செய்யப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் செய்தபிறகும் கூட சிலர் அழுதுகொண்டே இருக்கிறார்கள். அவர்களால் அழ மட்டுமே முடியும். அவர்கள் அழுதுவிட்டு போகட்டும்.
2014-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை ரயில்வே திட்டங்களுக்கு வெறும் ரூ.900 கோடி மட்டுமே கிடைத்து வந்தது. அப்போதெல்லாம் யார் கூட்டணியில் இருந்தார்கள் என்று நான் சொல்லவே தேவையில்லை.
தமிழகத்திற்கு 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் கிடைத்திருக்கின்றன. மருத்துவ படிப்பினை தமிழில் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். ஏழைக் குடும்ப மாணவ மாணவிகளும் தமிழில் படிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
மத்திய அரசின் முயற்சியின் காரணமாக, கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 3,700-க்கும் மேலான மீனவர்கள் இலங்கையில் இருந்து மீட்டுக்கொண்டு வரப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். சில காலங்களுக்கு முன்பு தூக்குமேடையில் இருந்து தமிழக மீனவர்கள் காப்பற்றப்பட்டுள்ளனர்.

வழக்கமாக தமிழகத்தில் இருந்து சில தலைவர்கள் எனக்கு கடிதம் எழுதுவதுண்டு. அந்த கடிதம் ஆங்கிலத்தில் இருக்கிறது. கையெழுத்தும் ஆங்கிலத்தில் இருக்கிறது. குறைந்தபட்சம் அவர்கள் கையெழுத்தையாவது தமிழில் போட வேண்டாமா?
இன்று மிகவும் புனிதமான ராமநவமி நாள். 100 ஆண்டுகளுக்கு முன்பாக இந்த பாம்பன் பாலத்தை கட்டியவர் குஜராத்தி. 100 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பாலத்தை திறந்து வைப்பதும் ஒரு குஜராத்தி தான்” என்று மோடி தெரிவித்தார். Modi says DMK government crying