கோடைக்காலத்தில் மூல நோய் பாதிப்பு அதிகரிக்க காரணம் என்ன, அதனை எப்படி கட்டுப்படுத்துவது என்பது குறித்துப் பார்க்கலாம்.
கோடைக்காலத்தில் பொதுவாக செரிமானப் பிரச்சனைகள் அதிகரிக்கின்றன. குறிப்பாக பலருக்கும் மூலப் பிரச்சனை (Piles-Hemorrhoids) ஏற்படும் ஆபத்துகள் அதிகமாக உள்ளன. மூலப் பிரச்சனை என்பது நமக்கு ஆசனவாயில் அதிகப்படியான வலியை ஏற்படுத்துகிறது.
இதனால் நமது அன்றாக வாழ்க்கை முறையே மாறிவிடும் சூழல் உள்ளது. மூலம் வந்தவர்கள் பலருக்கு உட்காரவோ நிற்கவோ கூட கடினமாக இருக்கும். கோடைக்காலத்தில் (Summer diseases) மூலநோய் ஏன் மோசமடைகிறது, மூல நோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் பார்ப்போம்.
மூலநோய் ஏற்படக் காரணம் என்ன?
கோடைக் காலத்தில் காரமான உணவுகள், துரித உணவுகளை சாப்பிடுகிறோம். அதுபோலவே உடற்பயிற்சியற்ற வாழ்க்கை முறை செரிமான (causes hemorrhoids) அமைப்பை பாதிக்கிறது. இதேபோல போதுமான அளவு தண்ணீர் குடிக்காதபோது மலச்சிக்கல் ஏற்படும். தொடர்ந்து மலச்சிக்கல் இருந்தால் அது மூல நோய்க்கு வழிவகுக்கும்.
மலச்சிக்கல்தான் முக்கிய காரணம்
மலச்சிக்கல் காரணமாக மலம் கழிக்கும்போது முக்குவது, ஆசனவாய்ப் பகுதியில் உள்ள நரம்புகளில் அழுத்தத்தை அதிகரித்து, மூல நோயை (Constipation) மேலும் மோசமாக்குகிறது. கோடை காலத்தில் ஏற்படும் அதிகப்படியான வியர்வை நீரிழப்புக்கு வழிவகுக்கிறது. இது மலத்தை கடினமாக்கும். கடினமான மலம் வெளியேறுவது வலியையும் ரத்தப் போக்கையும் அதிகரிக்கக்கூடும்.
மூலநோயை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்
கோடை காலத்தில் மூல நோயைக் கட்டுப்படுத்த தினமும் குறைந்தது 8 – 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். பச்சை காய்கறிகள், பழங்கள், சாலடுகள் மற்றும் முழு தானியங்கள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை (Foods rich in fiber) உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் நார்ச்சத்துகள் மலத்தை மென்மையாக்கி, அது எளிதாக வெளியேற உதவுகிறது. இது மூல நோயின் அறிகுறிகளை கணிசமாகக் குறைக்கும்.
உடற்பயிற்சி அவசியமாகும்
நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு மூல நோய் அதிகமாக ஏற்படுகிறது. கோடைக் காலத்தில் வீக்கமும் அசௌகரியமும் அதிகரிப்பதால் மூல வலி மோசமடையக்கூடும். ஆகவே ஒவ்வொரு 30 முதல் 40 நிமிடங்களுக்கும் நடமாடுவது அவசியம். லேசான உடற்பயிற்சி (Exercise) அல்லது நடைப்பயிற்சி ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, அழுத்தத்தைக் குறைக்கிறது.
மது, காஃபியை தவிர்க்க வேண்டும்
கோடை காலத்தில் அதிகப்படியான மது மற்றும் காஃபின் உட்கொள்வதும் ( avoid Alcohol and coffee) மூல நோயை மோசமாக்கக்கூடும். ஆகவே, இவற்றை தவிர்ப்பது நல்லது. தொடர்ச்சியான வலி அல்லது அதிகப்படியான ரத்தப்போக்கு போன்ற அறிகுறிகள் தீவிரமடைந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியமாகும்.
