பெரியார் பேரணிக்கு அனுமதி மறுத்த விஜய் அரசு – உதயநிதி, டிடிவி தினகரன் கண்டனம்

Published On:

| By Pandeeswari Gurusamy

பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் பிறந்த ஈரோட்டு மண்ணில் தி.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணிக்கும், குடியாத்தத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.கழகம் உள்ளிட்ட கட்சிகள் நடத்தவிருந்த பேரணிக்கும் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு அனுமதி மறுத்துள்ளது. தமிழக காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு உதயநிதிஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் உதய நிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில்,”தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் பிறந்த ஈரோட்டு மண்ணில் தி.க. சார்பில் செப்டம்பர் 17-ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணிக்கும், குடியாத்தத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.கழகம் உள்ளிட்ட கட்சிகள் நடத்தவிருந்த பேரணிக்கும், இந்த Circus அரசின் காவல்துறை அனுமதி மறுத்து இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

ADVERTISEMENT

முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை, வலதுசாரி அமைப்புகளின் பேரணிகளுக்கு அனுமதி வழங்கிவிட்டு, தமிழ்நாட்டை செதுக்கிய பெரியார் – அண்ணாவின் பிறந்த நாள் பேரணிகளுக்கு அனுமதி மறுப்பது ஏன்?

பெரியாரையும், அண்ணாவையும் கொள்கைத்தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் முதலமைச்சர், யாரை திருப்திப்படுத்த இதைச் செய்கிறார்?

ADVERTISEMENT

காவல்துறை, முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? இல்லை அவரது காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா?

பெரியார் – அண்ணாவை புறக்கணிக்கும் Reels முதலமைச்சர், அவருடைய அடிமைத்தனத்தையும் – ஆணவத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து, உடனே இந்த பேரணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதேபோல் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் பதிவில், “தந்தை பெரியார் பிறந்தநாள் விழிப்புணர்வு பேரணிக்கு அனுமதி மறுப்பதா? – அரசியலுக்காக பெரியாரை தங்களது கொள்கைத் தலைவர் என தவெக போடும் நாடகம் அம்பலம்.

தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதி, அவர் பிறந்த ஈரோட்டில் உள்ள பன்னீர்செல்வம் பூங்காவில் இருந்து பெரியார் இல்லம் வரை திராவிடர் கழகம் சார்பில் திட்டமிடப்பட்டிருந்த விழிப்புணர்வு பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே, கடந்த ஜூலை மாதம் நீட் தேர்வுக்கு எதிராக திராவிடர் கழகம் நடத்தவிருந்த இருசக்கர வாகனப் பேரணிக்கு அனுமதி மறுத்தும், பெரியார் திடலில் காவல்துறையினரைக் குவித்தும் அடக்குமுறையைக் கையாண்ட தவெக அரசு, தற்போது அவரது பிறந்தநாளை முன்னிட்டு திட்டமிடப்பட்டிருந்த விழிப்புணர்வு பேரணிக்கும் அனுமதி மறுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

சமூகநீதி, சுயமரியாதை, பகுத்தறிவு, சாதி ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம் எனப் பல்வேறு கொள்கைகளுக்காகத் தனது வாழ்நாள் முழுவதும் போராடிய தந்தை பெரியாரின் பிறந்தநாளில், அவரது சொந்த மண்ணிலேயே அவரது கொள்கைகளை வலியுறுத்தி நடத்தப்படவிருந்த பேரணிக்கு அனுமதி மறுத்திருப்பதன் மூலம், பெரியாரை அரசியலுக்காக மட்டுமே தவெக தனது கொள்கைத் தலைவராக முன்வைத்திருப்பது அம்பலமாகியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பெரியாரின் பிறந்தநாளையொட்டி நடைபெறும் விழிப்புணர்வு பேரணிக்கு, இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களை காரணம் காட்டி அனுமதி மறுத்திருப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

எனவே, பெரியாரை கொள்கைத் தலைவராக முன்மொழிந்திருக்கும் தவெக, அவரையும் அவரது பெயரையும் வெறும் அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தும் நாடகத்தைக் கைவிட்டு, பெரியாரின் பிறந்தநாளன்று திராவிடர் கழகம் திட்டமிட்டிருந்த விழிப்புணர்வு பேரணிக்கு உடனடியாக அனுமதி வழங்கி, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்திட வேண்டும் என்று இந்நேரத்தில் வலியுறுத்துகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share