எந்தத் துண்டுக்கும், எந்தச் சீட்டிற்கும் அடிபணிகிறவன் நான் அல்ல என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் விஜய் காவல் துறை மானியக் கோரிக்கைக்கு பதில் அளித்து பேசியபோது, எதிர்க்கட்சிகளைப் பேச அனுமதிக்கிறேன் என்று சொன்ன சபாநாயகர் துண்டுச் சீட்டைப் பார்த்தவுடன் அனுமதி மறுத்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. இது குறித்து நெல்லையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பேசுகையில்,
“எந்தத் துண்டுக்கும், எந்தச் சீட்டிற்கும் அடிபணிகிறவன் நான் அல்ல. நான் மீண்டும் சொல்கின்றேன்; அவ்வப்போது எனக்கு எழும் சந்தேகங்களை எனது துறை சார்ந்து இருக்கும் சட்டப்பேரவை அலுவலகத்திலிருந்து சில குறிப்புகளை நான் கேட்டு வாங்குவது வழக்கம். உதாரணமாக, ஏற்கனவே சர்க்காரியா கமிஷன் பற்றி அவர் பேசியிருப்பதும் மற்றும் அமலாக்கத்துறை பற்றி அவர் பேசியிருப்பதும் குறிப்பில் இருந்தால், அந்தக் குறிப்புகள் எந்த ஆண்டு, எந்த நாள் இந்த அவையில் பேசப்பட்டது என்ற குறிப்பு எனக்கு எடுத்துத் தாருங்கள் என்று கேட்டிருந்தேன்.
உடனடியாக விவாதத்திற்குத் தயாராகிறபோது அவை குறிப்பில் அவையெல்லாம் இருக்கிறது என்பது எனக்குத் தெரிந்திருந்தும், எந்த நாள், எந்தத் தேதியில் நடந்தது என்பதைப் குறிப்பிட்டு விவரத்தை நான் கேட்டிருந்தேன். அந்த விவரத்திற்குரிய துண்டுச் சீட்டைத்தான் கொடுத்தார்கள்.
சபையை எப்படி நடத்துவது என்பது பற்றியோ அல்லது யாரைப் பேச அனுமதிக்கலாம், அனுமதிக்கக் கூடாது என்றெல்லாம் யார் துண்டு கொடுத்தாலும் சரி, சீட்டு கொடுத்தாலும் சரி, அதற்கு ஏற்கும் மனநிலையில் நான் எப்போதும் இருக்க மாட்டேன் என்பதைத் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.”என்றார்.
பட்டினப்பாக்கத்தில் புதிய சட்டப்பேரவை வளாகம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “அது குறித்து அரசு விவரங்களை வெளியிடும் போது அனைத்து மக்களும் மகிழ்ச்சியடையும் விதத்தில் அத்திட்டம் அமையும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.
தமிழகத்தில் இடைத்தேர்தல் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “இரண்டு தொகுதிகளுக்கான தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது, தேர்தல் நடைபெற உள்ளது. மீதமுள்ள நான்கு பேரின் பிரச்சினையைக் குறித்து ஆய்வில் வைத்துள்ளோம். அவர்களைத் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார். விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது. நேரடியாக விசாரணைக்கு அழைக்கப்பட்டு முதல்கட்ட விசாரணை முடிவடைந்துள்ளது. அடுத்த கட்ட விசாரணைக்காகக் காத்திருக்கிறோம், தேதி குறிக்கப்பட்டு முறையான விரிவான நேரடி விசாரணைகள் நடைபெறும்” என்று தெரிவித்தார்.
