ஈரோட்டில் பெரியார் பிறந்தநாள் பேரணிக்கு அனுமதி மறுத்த தவெக அரசு!

Published On:

| By Pandeeswari Gurusamy

பெரியார் பிறந்தநாளில் பேரணிக்கு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தைக் காரணம் காட்டிய தமிழக காவல்துறையின் அனுமதி மறுப்பு கடும் எதிர்வினையை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டுதோறும் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் தேதி அன்று, திராவிடக் கழகம் மற்றும் முற்போக்கு இயக்கங்கள் இணைந்து ஈரோட்டில் விழிப்புணர்வு பேரணி நடத்துவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் செப்டம்பர் 17ஆம் தேதி அன்று காலையில் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் தொடங்கி பெரியார் இல்லம் வரை பேரணியாகச் செல்ல திராவிடர் கழகத்தினர் திட்டமிட்டு அனுமதி கோரியிருந்தனர்.

ADVERTISEMENT

இந்தச் சூழலில், அதே நாளில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற உள்ளது. மாலை வேளையில் வேறு வழித்தடத்தில் இந்த விநாயகர் ஊர்வலம் நடைபெற்றாலும், இதைக் காரணம் காட்டித் திராவிடக் கழகம் ஏற்பாடு செய்திருந்த பெரியார் விழிப்புணர்வு பேரணிக்கு ஈரோடு மாவட்டக் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

பெரியாரைத் தங்களது கொள்கைத் தலைவர் என்று அறிவித்துள்ள தவெக அரசின் இந்த நிலைப்பாடு, திராவிடர் கழகத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நாளில் இரண்டு நிகழ்வுகள் நடைபெற உள்ளதால், பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதுவரை எந்த ஆட்சியிலும் பெரியார் பிறந்த நாளில் நடைபெறும் இந்த விழிப்புணர்வு பேரணிக்கு அனுமதி மறுத்தது இல்லை. மாலை 5 மணிக்கு மேல் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் முற்றிலும் வேறு பகுதியில் நடைபெறும் நிலையில் பெரியார் பிறந்த நாள் பேரணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது பெரியார் கொள்கைகளை பிற்பற்றுவோர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தடையை மீறி பேரணி நடத்துவோம்!

திராவிடர் கழகம் சார்பில் நடைபெற இருந்த பேரணிக்கு த.வெ.க அரசு அனுமதி மறுத்த நிலையில், “இந்து முன்னணி ஊர்வலத்தை காரணம் காட்டி அனுமதி மறுப்பதால் தடையை மீறி அனைத்து தோழர்களும், ஆயிரக்கணக்கில் திரண்டு செப்.17 அன்று காலையில் ஒன்றுகூடி ஈரோட்டில் பேரணியாக சென்று பெரியார் – அண்ணா நினைவகத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கும், பேரறிஞர் அண்ணா சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவோம்.” என தி.க தலைமைச் செயற்குழு உறுப்பினர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share