2024 ஆம் ஆண்டில் மக்களே பிரதமர் மோடிக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுப்பார்கள் என்று டெல்லி துணை முதல் அமைச்சர் மணிஷ் சிசோடியா கூறியுள்ளார்.
டெல்லியில் மதுபானக் கடைகள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக டெல்லி துணை முதல் அமைச்சர் மணீஷ் சிசோடியா மற்றும் முறைகேட்டில் தொடர்புடையதாக கூறப்படும் 14 பேரிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டது.
மேலும் மணிஷ் சிசோடியா தொடர்புடைய இடங்களில் சோதனையும் நடத்தியது சிபிஐ.
அமலாக்கத்துறையும் மணீஷ் சிசோடியாவிடம் விசாரணை மேற்கொள்ளும் என்று தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், அமலாக்கத்துறை, சிபிஐயிடம் விசாரணை குறித்த விவரங்களை கேட்டறிந்தது.

இந்த நிலையில் மணீஷ் சிசோடியா வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக சிபிஐ சார்பில் லுக் அவுட் நோட்டீஸ் விடப்பட்டுள்ளது.
மேலும், இந்த முறைகேட்டில் தொடர்புடையதாக கூறப்படும் 14 பேருக்கும் சிபிஐ லுக் அவுட் நோட்டீஸ் விட்டுள்ளது.
சிபிஐ சோதனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த டெல்லி துணை முதல் அமைச்சர் மணீஸ் சிசோடியா;
“விலைவாசி ஏற்றம், வேலையில்லாத் திண்டாட்டம் போன்றவற்றுக்கு தீர்வு காணும் நல்ல தலைவரைத்தான் நாடு தற்போது தேடிக்கொண்டிருக்கிறது.
ஆனால் பிரதமர் மோடி யாருக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பலாம் என்று சிந்தித்து கொண்டிருக்கிறார்.
சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் குறித்து சிந்திக்கும் பிரதமர்தான் தற்போது நாட்டுக்கு தேவை.
2024 ஆம் ஆண்டில் பாஜகவின் பெரும் வாக்குறுதிகளை கேட்ட பிறகு, பொதுமக்கள் அவர்களுக்கு ‘லுக் அவுட் நோட்டீஸ்’ கொடுப்பார்கள்” என்றும் மணீஷ் சிசோடியா கூறினார்.
மேலும், மணீஷ் சிசோடியா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் , “உங்கள் சோதனைகள் அனைத்தும் தோல்வியடைந்தன, எதுவும் கிடைக்கவில்லை.
இப்போது மணீஷ் சிசோடியாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று லுக்-அவுட் நோட்டீஸ் வெளியிட்டு இருக்கிறீர்கள்.
இது என்ன வித்தை மோடி ஜி… நான் டெல்லியில் சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருக்கிறேன்.
உங்களால் என்னைக் கண்டுபிடிக்க முடியவில்லையா? தயவு செய்து எங்கே வரவேண்டும் என்று சொல்லுங்கள்.
இது என்ன வித்தையாக இருக்கிறது” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
டெல்லி துணை முதல்வருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்: விரைவில் கைது!