தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய், இன்று (நவம்பர் 23) காஞ்சிபுரம் மாவட்டத்தில் “மக்கள் சந்திப்பு” நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
கரூரில் நிகழ்ந்த கோரமான கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு விஜய் கலந்துகொள்ளும் முதல் மக்கள் சந்திப்பு இதுவாகும்.
இந்நிகழ்விற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. QR குறியீடுகளுடன் கூடிய நுழைவுச்சீட்டு வைத்திருக்கும் 2,000 பேர் மட்டுமே இந்தச் சந்திப்பில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஜேப்பியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய விஜய், திமுகவை கடுமையாக தாக்கி பேசினார்.
”நாட்டிற்காக உழைப்பதற்கே அண்ணா பிறந்தார். பொதுநலத்தில் தானே நாள் முழுக்க கண்ணா இருந்தார் என்று எம்ஜிஆர் பாடியிருக்கிறார். நீங்கள் கேட்டிருப்பீர்கள்.
தன்னுடைய வழிகாட்டி என்பதாலேயே தன்னுடைய கட்சி கொடியில் அண்ணாவை வைத்தவர் எம்ஜிஆர்..
ஆனால் எம்ஜிஆர் உருவாக்கிய அந்த கட்சியை தற்போது அதை கைப்பற்றியவர்கள், என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று நான் சொல்லி தான் உங்களுக்கு தெரிய வேண்டுமா என்ன
தனிப்பட்ட முறையில் நமக்கும் அவர்களுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. வாய்க்கா வரப்பு தகராறு எதுவும் இல்லை. அப்படியே இருந்தாலும் அதை நாம் கண்டுக்க போறதில்லை.
தனிப்பட்ட முறையில் அவர்கள் வேண்டுமானால் நம் மீது வன்மத்தோடு இருக்கலாம். ஆனால் நாம் அப்படி கிடையவே கிடையாது.
அதேசமயம் உங்களையும் என்னையும் நம்ப வைத்து ஓட்டு போட வைத்து ஏமாற்றினார்களே… ஏமாற்றி ஆட்சிக்கு வந்து நல்லது செய்வது போல் நடிக்கிறார்களே.. நாடகம் ஆடுகிறார்களே. அவர்களை எப்படி நாம் கேள்வி கேட்காமல் இருக்க முடியும்.
அதனால் அவர்களை கேள்வி கேட்காமல் நாம் விடப் போறதே கிடையாது.
தெரிந்தோ தெரியாமலோ இந்த மாவட்டத்துக்கும் நமக்கும் ஒரு கனெக்சன் ஏற்படுகிறது. ஏனென்றால் நமது முதல் களப்பயணத்தை தொடங்கியதே பரந்தூரிலிருந்து தான்.
பரந்தூர் மண்ணில் நின்று அந்த மக்களுக்காக கேள்வி கேட்டதும் இதே அண்ணா பிறந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் தான்.
ஒரு பெரிய வேதனைக்கு பிறகு மீண்டும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வந்திருப்பதும் அண்ணா பிறந்த அதே காஞ்சிபுரம் மாவட்டத்தில் தான்.
மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும். அதுவும் அங்கீகாரத்துடன் சட்டபூர்வமுடன் செய்ய வேண்டும். ஒட்டுமொத்த தமிழக மக்களுக்காகவும் ஒரே மாதிரியாக செய்ய வேண்டும்.
அந்த ஒரே இலட்சியத்தோடு தான் நாம் அரசியலுக்கு வந்திருக்கிறோம். அதனால் தான், மக்களிடம் செல் என்று சொன்ன அண்ணாவை கையில் எடுத்தோம்.
அவர் சொன்னது போல மக்களை நோக்கி போகிறோம். ஆனால் மக்களிடம் செல் என்று சொன்ன அண்ணாவை மறந்தது யாரு? ” என்று கேள்வி எழுப்பினார் .
மேலும் அவர்”கொள்கையா… அது கிலோ என்ன? விலை என்ன? என்று கேட்கிற அளவுக்கு… அப்படி ஒரு கட்சியை நடத்தும் ஒரு தலைவர், தமிழ்நாடு முதல்வர் சொல்கிறார், நமக்கு கொள்கை இல்லை என்கிறார்.
பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்ற நமது கட்சியின் கோட்பாட்டை அறிவித்த நமக்கு கொள்கை இல்லையா?
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். சமூக நீதி கிடைக்க வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலிமையாக சொன்ன நமக்கு கொள்கை இல்லையா?
கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே சிஏஏ-வை எதிர்த்த நமக்கு கொள்கை இல்லையா? வக்ஃப் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்கு போன நமக்கு கொள்கை இல்லையா?
நீட் தேர்வை ஆட்சிக்கு வந்தால் ரத்து செய்து விடுவேன் என்று கதை எல்லாம் விடாமல் கல்வியை மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் அதற்கு ஒரு இடைக்கால தீர்வை சொன்ன நமக்கு கொள்கை இல்லையா?
சமத்துவம் சம வாய்ப்பு என்று உறுதியாக சொன்ன நமக்கு கொள்கை இல்லையா?
ஆனால் கொள்கையை வெறும் பேச்சில் மட்டுமே வைத்துக் கொண்டு, எல்லா கொள்கையையும் அண்டர் கிரவுண்டில் அடக்கி வைத்து விட்டு, எல்லா கொள்கையையும் இவர்களே குத்தகைக்கு எடுத்த மாதிரி பேசுகிறார்கள்.
இவர்கள் கொள்கையே கொள்ளை தானே… இதெல்லாம் மக்களுக்கு தெரியாது என நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா?
எங்கள் கட்சி ஒன்றும் சங்கர மடம் இல்லை என்று சொன்னது யாரு? யார் சொன்னார்கள்? எதற்கு சொன்னார்கள்? இப்போது அவர்கள் கட்சியில் என்ன நடந்து கொண்டிருக்கிறது. எனவே அதை யோசித்துப் பாருங்கள்.
பவள விழா பாப்பா… நீ பாசாங்கு காட்டாத பாப்பா… நீ நல்லவர் போல் நடிப்பதை பார்த்து நாடே சிரிக்குது (விஜய் வாயில் கையை வைத்துக்கொண்டு சிரிப்பு) என்று சொன்னோம்.
பாப்பா என்பதை ஆசைப் பாசமாக தான் சொன்னோம். அதையே நீங்கள் அதிர்ச்சியாக எடுத்துக் கொண்டால் நாங்கள் என்ன செய்வது. அதை விமர்சனம் என்று சொன்னால் என்ன செய்வது.
நாங்கள் இன்னும் விமர்சிக்க ஆரம்பிக்கவில்லையே.. இன்னும் நாங்கள் அடிக்கவே தொடங்கவில்லை.. அதற்குள் அலறினால் எப்படி?
உங்கள் அரசவை புலவர்கள் யாரேனும் இருந்தார்கள் என்றால்… கர்ச்சீப்பை எடுத்து அவர்களது கண்ணீரை துடைத்து விடுங்கள்.
சரி… அது அவர்கள் பிரச்சனை அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும்…
நமக்கு எப்போதுமே மக்கள்தான்.. மக்களின் பிரச்சினையைப் பற்றி பேசுவது தான் முக்கியம்” என்று குறிப்பிட்டார்.
