ஆசிரியர்கள் ’TET’ தேர்வு எழுத 3 ஆண்டுகள் ‘கெடு’.. ’பாஸ்’ ஆகலைனா கட்டாய ஓய்வு! சுப்ரீம் கோர்ட் அதிரடி!

Published On:

| By Mathi

Supreme Court TET

2028 ஆகஸ்ட் 31-க்குள் ‘டெட்’ (TET) தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வுதமிழக அரசின் சீராய்வு மனுவில் உச்சநீதிமன்றம் (Supreme Court) வழங்கிய அதிரடி இறுதித் தீர்ப்பு விவரம் உள்ளே..

ள்ளி ஆசிரியர்களுக்கான டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது.

பள்ளி ஆசிரியர்களுக்கும் ‘டெட்’ தேர்வு

2009-ஆம் ஆண்டு மத்திய அரசு, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (RTE Act, 2009) கொண்டு வந்தது.

ADVERTISEMENT

இச்சட்டத்தின்படி,

  • 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு ‘TET’ தேர்வு கட்டாயமாக்கப்பட்டது.
  • தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (NCTE) 2010 ஆகஸ்ட்டில் இதற்கான அறிவிப்பாணையை வெளியிட்டது.
  • தமிழகத்தில் 2012 முதல் இது நடைமுறைக்கு வந்தது.

‘டெட்’ (TET) தேர்வுக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு

  • டெட் தேர்வுக்கு தமிழக பள்ளி ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
  • ”இந்தச் சட்டம் நடைமுறைக்கு வரும் முன்னர் அதாவது 2010-க்கு முன் முறையாக அரசு விதிகளின்படி பணியில் சேர்ந்து 15, 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருகிறோம். பணிக்குச் சேர்ந்த பிறகு, புதிய விதியைக் கொண்டு வந்து எங்களை தேர்வு எழுதச் சொல்வது சட்டப்படி செல்லாது” என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆசிரியர்கள் வழக்குகளை தொடர்ந்தனர்.

தீர்ப்புகள் என்ன?

  • சென்னை உயர் நீதிமன்றம் ஆசிரியர்களுக்கும் TET கட்டாயம் என்று தீர்ப்பளித்தது.
  • சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டன.
  • உச்சநீதிமன்றமும் தரமான கல்வியை உறுதிப்படுத்த கல்வித் தகுதி அவசியம் எனக் கூறி, ஆசிரியர்களின் கோரிக்கையை நிராகரித்து TET-ஐ கட்டாயமாக்கியது.

2025-ல் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்ன?

  • பள்ளி ஆசிரியர்கள் பணியில் நீடிக்கவும் பதவி உயர்வு பெறவும் ‘TET’ தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.
  • ஓய்வு பெறும் வயதை எட்டுவதற்கு 5 ஆண்டுகள் மட்டுமே இருக்கக்கூடிய ஆசிரியர்கள் பணியில் நீடிக்கலாம்.
  • 5 ஆண்டுகளுக்கு அதிகமாக ஓய்வு பெறும் வயது இருக்கக்கூடிய ஆசிரியர்கள் ‘TET’ தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.
  • ‘TET’ தேர்வு எழுத முடியாது என கூறினால் ஆசிரியர் பணியை விட்டு தாராளமாக வெளியேறலாம்; ஓய்வூதிய சலுகைகளைப் பெற்றுக் கொண்டு கட்டாய ஓய்வு பெறலாம்
  • அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் தகுதி தேர்வை கட்டாயப்படுத்த முடியுமா? என்பது குறித்து அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும்.

தமிழக அரசு செய்தது என்ன?

  • உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு– முந்தைய திமுக அரசு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது.
  • சீராய்வு மனுவில், “ஆசிரியர் தேர்வு என்பது மாநில அரசுகளின் கொள்கை முடிவுடன் தொடர்புடையது.
  • உச்சநீதிமன்றத் தீர்ப்பால் பல ஆண்டுகளாக பணிபுரிந்த ஆசிரியர்கள் பாதிக்கப்படுவர்
  • உச்சநீதிமன்றம் தமது தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

உச்சநீதிமன்றத்தின் புதிய உத்தரவு என்ன?

  • தமிழ்நாடு அரசின் சீராய்வு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் திபங்கர் தத்தா, சதீஷ் சந்திர சர்மா விசாரித்தனர்.
  • தமிழ்நாடு அரசின் சீராய்வு மனுவை முற்று முழுதாக டிஸ்மிஸ் செய்யவில்லை.
  • உச்சநீதிமன்றத்தின் கடந்த ஆண்டு தீர்ப்பில் சில திருத்தங்கள் மட்டும் செய்யப்பட்டன.
  • 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பாடம் நடத்தும் அனைத்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களும் (அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள்) பணியில் தொடரவும், பதவி உயர்வு பெறவும் TET தேர்ச்சி பெறுவது கட்டாயம்.
  • கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பில் பணியில் இருக்கும் ஆசிரியர்கள் 2 ஆண்டுகளுக்குள் TET தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது; இதனை 3 ஆண்டுகளுக்குள் TET தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என திருத்தம் செய்தனர் நீதிபதிகள்.
  • 2028-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ந் தேதிக்குள் ‘TET’ தேர்வை நடத்தி முடிக்க வேண்டும்; கால நீட்டிப்பு தர முடியாது
  • 3 ஆண்டுகளுக்குள் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள், கட்டாய ஓய்வு பெற்றவர்களாகக் கருதப்பட்டு, அவர்களுக்குரிய ஓய்வூதியப் பலன்களை வழங்க வேண்டும்.
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகதுறை அனுபவம், ’தினமணி’, ‘இன்தாம்’, ஆஸ்திரேலியா தமிழ் வானொலி, சன் நியூஸ், ஒன் இந்தியா தமிழில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share