சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணி மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பழவந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவர் தனது சொந்த ஊருக்குச் செல்ல தாம்பரத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் ஆறாவது நடைமேடைக்கு மாநகரப் பேருந்து மூலம் வந்துள்ளார்.
பேருந்திலிருந்து இறங்கிய ஜெய்சங்கர் நடந்து சென்ற போது, மறைமலை நகர் பகுதிக்குச் செல்லும் அரசு பேருந்து அவர் மீது திடீரென எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் நிலைதடுமாறிய ஜெய்சங்கர் கீழே விழுந்தார். அப்போது பேருந்தின் முன்பக்கச் சக்கரம் ஜெய்சங்கர் மீது ஏறி இறங்கியது. இதில் ஜெய்சங்கரின் வலது கால் நசுங்கிய நிலையில் அவர் மீட்கப்பட்டார்.
வலியால் துடித்த ஜெய்சங்கரை மீட்ட அருகில் இருந்தவர்கள், அவரைச் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்த பதறவைக்கும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், விபத்தை ஏற்படுத்திய ஒப்பந்த ஊழியரான கிஷோர் என்பவரைக் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
