தமிழகத்தின் புதிய டிஜிபி.. யார் இந்த மகேஷ் குமார் அகர்வால் ஐபிஎஸ்!

Published On:

| By Pandeeswari Gurusamy

DGP

தமிழகத்தின் டிஜிபி நியமன விவகாரத்தில் முந்தைய திமுக அரசிற்கும் யுபிஎஸ்சிக்கும் இடையே சுமூகமான சூழல் இல்லாத நிலை நிலவியது.பணிமூப்பு அடிப்படையில் தகுதி பெற்ற மூத்த அதிகாரிகளில் இளையவரான வெங்கட்ராமன் பொறுப்பு டிஜிபி-யாக திமுக அரசு நியமித்தது.

இதைத்தொடர்ந்து தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற போது, தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் தமிழகத்தின் டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், தேர்தல் காலத்தில் டிஜிபி தேர்வுக்கான கூட்டத் தேதி வந்தது. இதன் காரணமாக தோ்தலுக்குப் பிறகு அக்கூட்டத்தை யுபிஎஸ்சி தள்ளிவைத்தது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற யுபிஎஸ்சி- டிஜிபி நியமனத்துக்கான உயர்நிலை தேர்வுக் குழுக் கூட்டத்தில் யுபிஎஸ்சி மற்றும் மத்திய உள்துறை உயரதிகாரிகள், தமிழக தலைமைச் செயலர், உள்துறைச் செயலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து பதவி மூப்பு அடிப்படையில் ராஜீவ் குமாா், சந்தீப் ராய் ரத்தோா், மகேஷ் குமார் அகர்வால் ஆகிய மூன்று உயரதிகாரிகளின் பெயர்களுக்குத் தேர்வாணையம் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் மகேஷ் குமார் அகர்வால் ஐபிஎஸ் தமிழகத்தின் புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

யார் இந்த மகேஷ் குமார் அகர்வால்?

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ் குமார் அகர்வால், 1994-ஆம் ஆண்டு பேட்ச் தமிழக கேடர் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். இவரது தந்தை ஒரு வழக்கறிஞர் என்பதால், அவரைத் தொடர்ந்து சட்டம் பயின்ற இவர், பின்னர் காவல்துறையில் இணைந்தார். தனது 22-ஆவது வயதிலேயே சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று, ஐபிஎஸ் அதிகாரியாகத் தனது பணியைத் தொடங்கினார்.

ADVERTISEMENT

காவல்துறையில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணியாற்றிய இவர், 2020 முதல் 2021 வரை சென்னை பெருநகர காவல் ஆணையராகப் (Police Commissioner) பணியாற்றினார். மேலும், ஆயுதப்படை ஏடிஜிபி (ADGP), பிஎஸ்எஃப் (BSF) ஏடிஜிபி உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளையும் வகித்துள்ளார்.

சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், இவர் தலைமையிலான சிபிசிஐடி சிறப்புக் குழு தீவிர விசாரணை நடத்தி கொள்ளையர்களைக் கைது செய்தது.
மேலும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பு வழக்கு, பெண் என்ஜினியர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு போன்ற பல்வேறு முக்கிய வழக்குகளின் விசாரணையில் இவர் முக்கியப் பங்காற்றியுள்ளார்.

ADVERTISEMENT

கொரோனா பெருந்தொற்று காலத்தில் சென்னையில் இவரது நிர்வாகம் பலரின் கவனத்தை ஈரத்தது. தனது சிறந்த பணிகளுக்கான குடியரசுத் தலைவர் பதக்கம், முதலமைச்சர் பதக்கம் உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார்.

இந்நிலையில், தமிழகத்தில் விஜய் தலைமையிலான புதிய அரசு அமைந்ததைத் தொடர்ந்து, தற்போது மகேஷ் குமார் அகர்வாலை புதிய டிஜிபியாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவர் அடுத்த இரண்டு ஆண்டுகள் இந்தப் பொறுப்பில் நீடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share