பரந்தூர் விமான நிலைய திட்டத்தை முடக்க முயற்சிக்கிறதா விஜய் அரசு? – நயினார் குற்றச்சாட்டு

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay nainar

தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார்,”பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் விஜய் கூடுதல் கவனம் செலுத்துகிறார். சில அதிகாரிகளுடன் பேசியபோது பரந்தூரில் ஓடுபாதை அமைக்க முடியாது எனக் கூறினர்.விமான நிலையம் அமைக்கப்பட இருக்கும் இடத்தில் 800 – 900 நீர்நிலைகள் இருப்பதே முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அமைச்சர் நிர்மல் குமாரின் பேச்சு பொய் பிரச்சாரம், இது தமிழகத்தின் எதிர்காலத்திற்கு தவெக அரசு செய்யும் துரோகம் என கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.

ADVERTISEMENT

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கும் முட்டுக்கட்டை போடும் வகையில், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை முடக்கும் முயற்சியில் ஜோசப் விஜய் அரசு இறங்கியிருக்கிறது! மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் விரிவான ஆய்வுகளுக்குப் பின் முறைப்படி அனுமதி பெற்ற ஒரு திட்டத்திற்கு, ‘ஓடுதளம் அமைக்க முடியாது’ என்று தவெக அமைச்சர் நிர்மல்குமார் கூறுவது அப்பட்டமான பொய்யாகும்; மேலும், இது தமிழகத்தின் எதிர்காலத்திற்கு செய்யும் துரோகமாகும்.

அமைச்சர் நிர்மல் குமார் அவர்களே, இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவை விரிவான ஆய்வுகள் மேற்கொண்டு, நீர்நிலைகளைக் கணக்கில் கொண்டுதான் கொள்கை அளவிலான அனுமதியை வழங்கின என்பது உங்களுக்குத் தெரியாதா?

ADVERTISEMENT

ஏற்கனவே தொழில்நுட்ப நிபுணர் குழுக்கள் நீர்நிலைகளைப் பாதுகாத்து ஓடுதளம் அமைப்பதற்கான பொறியியல் தீர்வுகளைப் பரிந்துரைத்திருக்கும்போது, இப்போது திடீரெனப் புதிய சிக்கலை உருவாக்குவது ஏன்?

இது உண்மையான தொழில்நுட்பப் பிரச்சினையா? அல்லது, உங்கள் கட்சியின் மலிவான ஓட்டு வங்கி அரசியலுக்காக மாநிலத்தின் வளர்ச்சியைப் பலியிடும் செயலா?

ADVERTISEMENT

இட நெருக்கடி காரணமாக சென்னை விமான நிலையத்தை மேலும் விரிவுபடுத்த இயலாத நிலையில், இத்திட்டத்தைத் தாமதப்படுத்துவது தமிழகத்தின் சர்வதேச வர்த்தக வாய்ப்புகளைப் பறித்துவிடும். எனவே, பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் காலதாமதமின்றி உடனடியாகத் தொடர மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.”என தெரிவித்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share