சமீபத்தில் வெளியான ‘கருப்பு’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கும் நடிகர் சூர்யா, அடுத்தடுத்து தனது படங்களின் அப்டேட்களை வழங்கி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். வெங்கி அட்லூரி இயக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ மற்றும் டி.ஜே.ஞானவேல் இயக்கும் ‘சூர்யா 48’ ஆகிய படங்களைத் தொடர்ந்து, தற்போது இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சூர்யா 47’ (Suriya 47) படம் குறித்த மாஸான அப்டேட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் பேக்கப் வீடியோ
‘ரோமாஞ்சம்’, ‘ஆவேஷம்’ என மலையாளத்தில் தொடர் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த ஜித்து மாதவன், முதன்முறையாகத் தமிழில் நடிகர் சூர்யாவை வைத்து ‘சூர்யா 47’ படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஜித்து மாதவன் ‘கட்.. பேக்கப்’ (Pack Up) சொல்லும் வீடியோவும், ஜூன் 27 எனத் தேதியிடப்பட்ட ‘சூர்யா 47 பேக்கப்’ என்ற கிளாப்போர்டு புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் கசிந்து வைரலாகி வருகின்றன. ‘சூர்யா 48’ படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றதால், இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்ட செய்தி ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.
20 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் ரெக்கார்ட்
இந்த ஆண்டு மே மாதத்தில் சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படம் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படம் ரிலீஸாக உள்ளது. தற்போது ‘சூர்யா 47’ படமும் இதே ஆண்டில் வெளியாகும் பட்சத்தில், 2026-ஆம் ஆண்டில் சூர்யா நடிப்பில் மூன்று பிரம்மாண்ட படங்கள் வெளியாகி சாதனை படைக்கும். இதற்கு முன்பு 2005-ஆம் ஆண்டில் (மாயாவி, கஜினி, ஆறு) மட்டுமே ஒரே ஆண்டில் சூர்யா ஹீரோவாக நடித்த மூன்று படங்கள் வெளியாகியிருந்தன. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மேஜிக் அவரது கேரியரில் மீண்டும் நிகழவுள்ளது.
மலையாள நட்சத்திரங்களின் மெகா கூட்டணி
ழகரம் ஸ்டுடியோஸ் (Zhagaram Studios) தயாரிக்கும் இப்படத்தில், சூர்யா ஒரு மிடுக்கான காவல் துறை அதிகாரியாக (Cop) மிரட்டலான தோற்றத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நஸ்ரியா நசீம் (Nazriya) நடிக்க, மலையாளத்தின் முன்னணி இளம் நடிகர் நஸ்லென் (Naslen) ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் ஆனந்த்ராஜ், ஜான் விஜய் ஆகியோர் துணைக்கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மலையாளத்தின் சென்சேஷனல் இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் (Sushin Shyam) இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
தீபாவளி ரேஸில் களமிறங்கும் ‘சூர்யா 47’
இந்த வீடியோவில் பேக்அப் என்று கூறுவது முழு படத்தின் படப்பிடிப்பா? அல்லது ஒரு பகுதியா குழப்பம் ரசிகர்களுக்கு இடையே இருந்தாலும், படத்தின் ரிலீஸ் தேதி குறித்த பேச்சுகளும் கோலிவுட் வட்டாரத்தில் தீவிரமாக நடந்து வருகின்றன. வரும் நவம்பர் 8-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அதனைக் குறிவைத்து நவம்பர் 5 அல்லது 6-ஆம் தேதிகளில் ‘சூர்யா 47’ திரைப்படத்தைப் பிரம்மாண்டமாகத் திரையரங்குகளில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
