சீனாவைத் தொடர்ந்து சர்வதேச அளவில் தோட்டக்கலைப் பயிர்கள் மற்றும் பழங்கள் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஆரஞ்சு உற்பத்தியை மேம்படுத்தும் விதமாக ’உலக ஆரஞ்சுத் திருவிழா 2017’ என்ற மூன்று நாள் நிகழ்வு நாக்பூரில் டிசம்பர் 17ஆம் தேதி தொடங்கியது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட மத்திய வேளாண் மற்றும் விவசாயி நலத் துறை அமைச்சரான ராதா மோகன் சிங் பேசுகையில், “தோட்டக்கலைப் பயிர் பிரிவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் வாயிலாக தோட்டக்கலைப் பயிர் உற்பத்தி சிறப்படைந்துள்ளது. இதன் விளைவாகப் பருவநிலை மாற்றங்களையும் தாண்டி, உணவு தானிய உற்பத்தியை விடத் தோட்டக்கலைப் பயிர்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் பழங்கள் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் உற்பத்தியில் சீனாவைத் தொடர்ந்து இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
2015-16ஆம் ஆண்டில் மொத்தம் 63 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் 9 கோடி மெட்ரிக் டன் அளவிலான பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. மேலும், 2016-17ஆம் ஆண்டில் 2.5 கோடி ஹெக்டேர் நிலப்பரப்பில் மொத்தம் 30 கோடி மெட்ரிக் டன் அளவிலான தோட்டக்கலைப் பயிர்கள் உற்பத்தி செய்யப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் பழங்களின் உற்பத்தி அளவு அதிகமாக இருக்கும். தோட்டக்கலைப் பயிர்களின் உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசின் தரப்பில் தொழில்நுட்ப அம்சங்கள் சார்ந்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்தார்.









