ADVERTISEMENT

ஆதாரம் காட்டிய ஓபிஎஸ்.. நயினார் நாகேந்திரனை பேசவிடாமல் தடுத்த அண்ணாமலை

Published On:

| By Minnambalam Desk

Annamalai Nainar

பிரதமர் மோடியின் தமிழக வருகையை முன்வைத்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இடையேயான மோதல் வலுத்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடி தமிழகம் வந்த போது அவரை சந்திக்க முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேரம் கேட்டு கடிதம் எழுதி இருந்தார். ஆனால் பிரதமரைச் சந்திக்க ஓபிஎஸ்-க்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவதாக ஓபிஎஸ் அறிவித்தார். பின்னர் ஓபிஎஸ், முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT

மேலும், “ஓபிஎஸ் என்னிடம் தெரிவித்திருந்தால் பிரதமர் மோடியைச் சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன்” என நயினார் நாகேந்திரன் தெரிவித்திருந்தார்.

ஆனால், “நயினார் நாகேந்திரன் பொய் சொல்கிறார். அவரை 6 முறை தொடர்பு கொண்டேன். மெசேஜ் அனுப்பினேன். இதற்குப் பதில் அளிக்கவில்லை என்பதால் கடிதம் எழுதினேன்” என்று ஓபிஎஸ் காட்டமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

ADVERTISEMENT

இதைத் தொடர்ந்து நயினார் நாகேந்திரன், “ஓபிஎஸ் கடிதம் வந்து சேர்ந்த உடன் உங்களிடம் காட்டுகிறேன். அப்போது யார் உண்மை சொன்னது. யார் பொய் சொன்னது எனத் தெரியவரும். முதல்வர் ஸ்டாலினை ஓபிஎஸ் திடீரென சந்தித்திருக்க முடியாது. பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற ஒரு காரணம் சொல்கிறார். 6 முறை என்னை ஓபிஎஸ்தொடர்பு கொண்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை” என்று தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று ஆகஸ்ட் 3-ந் தேதி மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ், பிரதமர் மோடியைச் சந்திப்பது தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை செய்தியாளர்களிடம் காட்டினார். அந்த குறுஞ்செய்தியில், கடந்த ஜூலை மாதம் 24ம் தேதி நயினார் நாகேந்திரனுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT

ஓபிஎஸ் வெளியிட்ட குறுஞ் செய்தி குறித்து ஈரோட்டில் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “செல்போனில் காட்ட வேண்டாம். ஆதாரமாகக் கொடுங்கள்”என்றார். தொடர்ந்து பேச முயன்ற நயினார் நாகேந்திரனை பிறகு பேசலாம் என கூறி பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அழைத்துச் சென்றார்.

ஓபிஎஸ், நயினார் நாகேந்திரன் இடையே மோதல் வலுத்துவரும் நிலையில் நயினார் பேச வந்ததை அண்ணாமலை தடுத்து அழைத்துச் சென்றது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share