இரத்த தானம் செய்ய சாதி பெயர் கேட்பதா? – கொந்தளித்த மாணவர்கள்!

Published On:

| By Pandeeswari Gurusamy

உதகை அரசு கலை கல்லூரியில் நடந்த ரத்த தான முகாமில் மேரா யுவ பாரத் சார்பில் மாணவர்களின் சாதி விவரம் சேகரிக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நீலகிரி மாவட்டம், உதகை அரசு கலை கல்லூரி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் ரத்த தான முகாம் கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் ஏராளமான மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். இதில் பங்கேற்ற இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கட்டுபாட்டில் இயங்கும் நீலகிரி மேரா யுவ பாரத் அமைப்பை சேர்ந்த ஒருவர், ரத்த தான முகாமில் பங்கேற்ற மாணவர்களிடம் தனியாக படிவம் வழங்கி அதில் பெயர், வயது, பயிலும் பட்டப்படிப்பு, சாதி, தொலைபேசி எண் உள்ளிட்டவற்றை எழுதி வாங்கியுள்ளார்.

ADVERTISEMENT

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனை வீடியோவாகவும் எடுத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், பேசிய மாணவர் ஒருவர், ரத்த தானம் செய்வதற்கு எதற்கு சாதி விவரங்கள் எல்லாம் கேட்கிறார்கள். சாதி பார்த்து தான் ரத்தம் வாங்குவார்களாம். சாதி தெரிவித்து தான் ரத்தம் வழங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
உதகை அரசு கலை கல்லூரியில் ரத்த தானம் பெற சாதி விவரங்கள் எல்லாம் கேட்கப்பட்டுள்ளது. சாதி பார்த்து தான் ரத்தம் பெறுவார்களா என கோபத்துடன் கேள்வி எழுப்பி உள்ளார்.

ADVERTISEMENT

இந்த வீடியோ வைரலான நிலையில் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் கேட்ட போது, எந்த படிவத்தையும் வழங்கி சாதி உள்ளிட்ட விவரங்கள் கேட்கவில்லை என விளக்கமளித்துள்ளது. மேலும் கல்லூரி முதல்வர் எபனேசர் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில், “முகாம் தொடங்கிய பின் முதல்வர் மற்றும் ஆசிரியர்களிடம் எவ்வித அனுமதியும் பெறாமல் இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் நீலகிரி மாவட்ட மேரா யுவபாரத் அமைப்பை சேர்ந்த ஒருங்கிணைப்பாளரான ரஞ்சித்குமார் முகாமில் கலந்து கொண்டு மாணவர்களின் சாதி விவரங்கள் உட்பட தனிப்பட்ட விவரங்கள் அடங்கிய படிவங்களை விநியோகித்து தகவல்களை பெற்றுள்ளார். இது கல்லூரியை ஏமாற்றும் செயலாகும். எனவே இது தொடர்பாக உரிய விசாரணை மற்றும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர்விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share