ஒடிசாவில் பழங்குடி நபர் ஒருவர் இறந்த தனது அக்காவின் உடலை தோண்டி எடுத்து வந்ததால் வங்கி அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
ஒடிசாவின் கேந்துஜர் மாவட்டத்தில் உள்ள பாட்னா பிளாக்கிற்கு உட்பட்ட பகுதியில் ஒடிசா கிராமின் வங்கி உள்ளது. இந்த வங்கியில் தியானலி கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின சமூகத்தைச் சார்ந்த ஜிது முண்டாவின் சகோதரி கல்ரா முண்டா கணக்கு வைத்துள்ளார். ஆனால் மூன்று மாதங்களுக்கு முன்பு இறந்துள்ளார். இவரது வங்கிக் கணக்கில் ரூ.19,300 சேமிப்பு பணம் இருந்துள்ளது.
இந்தநிலையில் ஜுது முண்டா இந்த பணத்தை எடுக்க வங்கி அதிகாரிகளை அணுகியுள்ளார். ஆனால் கல்ரா, சட்டப்பூர்வ வாரிசாக யாரையும் சேர்க்காததால் வங்கி அதிகாரிகள் அவரது சேமிப்பை விடுவிக்க மறுத்துவிட்டனர். கணக்கு வைத்திருப்பவர் நேரில் இருக்க வேண்டும் அல்லது சட்டப்பூர்வ வாரிசு ஆவணங்களைக் காட்ட வேண்டும் என்று ஜிதுவிடம் வங்கி அதிகார்கள் கூறினார்.
பலமுறை வங்கி அதிகாரிகளை அணுகியும் எந்த பலனும் இல்லை. இந்த நிலையில் கடும் அதிருப்தி அடைந்த ஜிது முண்டா தனது சகோதரியின் உடலை தோண்டி எடுத்து, தனது தோளில் சுமந்துகொண்டு வங்கிக்கு வந்துள்ளார்.
வங்கி திறப்பதற்கு முன்பே வந்து, வாசலில் உடலுடன் அமர்ந்துள்ளார். இதையடுத்து வந்த வங்கி அதிகாரிகள் உடலை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் , பாட்னா காவல் நிலைய ஆய்வாளர் கிரண் பிரசாத் சாஹு வங்கிக்கு சென்று விசாரணை மேற்கொண்டார். பின்னர் உடலை மீண்டும் புதைக்க போலீசார் ஏற்பாடு செய்தனர்.
இதுகுறித்து காவல் ஆய்வாளர் கிரண் பிரசாத் கூறுகையில், “ஜிது படிப்பறிவற்ற ஒரு பழங்குடியின மனிதர். வாரிசுதாரர் அல்லது வாரிசு நியமனதாரர் என்றால் என்னவென்று அவருக்குத் தெரியவில்லை. உயிரிழந்த ஒருவரின் கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்கான நடைமுறைகளை அவருக்குப் புரிய வைப்பதில் வங்கி அதிகாரிகள் தவறிவிட்டனர்” என்று கூறியுள்ளார்.
ஜிது முண்டா செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘எனது சகோதரி உயிருடன் இல்லை, இறந்துவிட்டாள் என பலமுறை கூறியும் வங்கி அதிகாரிகள், அதை ஏற்றுக்கொள்வதாக இல்லை. எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால் சகோதரியின் உடலை தோண்டி அவளது எலும்பு கூடுகளை எடுத்து வந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, உயிரிழந்த அவரது சகோதரியின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக போலீஸார் ஜிது முண்டாவிடம் உறுதியளித்துள்ளனர்.ஜிது முண்டாவிற்கு, அந்தப் பணம் விரைவில் கிடைப்பதை உறுதி செய்யத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு வங்கி அதிகாரிகளுக்கு உள்ளூர் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
