சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘சாம்னா’வில் ஒபாமா மற்றும் மோடி இடையேயான நட்பைக் குறித்து வெள்ளிக்கிழமை வெளியான தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ளது. அதில், “பிரதமர் மோடியின் உற்ற தோழனாக ஒபாமா மாறிவிட்டார். அவர்களுக்கு இடையே ஆழமான நட்பு நீடிக்கிறது. கடந்த காலங்களில் ஒரு அமெரிக்க அதிபரிடம் இருந்து வேறு எந்த இந்தியப் பிரதமரும் இதுபோன்ற அன்பைப் பெற்றதில்லை. அதனால், ஒபாமா தனது பதவிக்காலம் முடிந்தவுடன் தனது குடும்பத்தினருடன் டெல்லி அல்லது சூரத், ராஜ்கோட், போர்பந்தர் ஆகிய நகரங்களுக்குக் குடிபெயர்ந்தாலும், ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை. இக்கட்டான நேரங்களில் உதவி செய்ததற்காக, அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தது மரியாதை நிமித்தமான பேச்சாகும். அதே அமெரிக்காதான், பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் மற்றும் நிதியுதவி வழங்கி உதவி செய்வதை நிறுத்தாமல் உள்ளது. இந்தியாவின் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்துக்கு உதவி செய்யும் அமெரிக்கா, மறுபுறம் பாகிஸ்தானுக்கு போர் விமானங்களை விற்பனை செய்கிறது. பதான்கோட் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது. ஒரு எதிரி (பின்லேடன்) பதுங்கியிருக்கும் ஒரு நாட்டுக்குள் (பாகிஸ்தான்) புகுந்து அவரை அமெரிக்கா சுட்டுக்கொன்றது. ஆனால், இந்தியாவுக்கு ஆதரவாக எச்சரிக்கையை மட்டுமே விடுக்கிறது. அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாட்டைப் புரிந்துகொள்ள வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சிவசேனா – பாஜக உறவு என்ன ஆகும் என்று சொல்லமுடியாத நிலையில் போய்க்கொண்டிருக்கிறது. ஒருசில விஷயங்களைத் தவிர பாஜக-வின் பெரும்பாலான நடவடிக்கைகளை சிவசேனா விமர்சித்து வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் அடுத்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆளும்கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக-வும், சிவசேனாவும் மோதல் போக்கை கடைபிடித்து வருகின்றன. சமூக ஊடகங்கள் வாயிலாகவும், தலைவர்களின் கருத்துகள் மூலமாகவும் மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.
