‘‘எம்.ஆர்.ராதா மட்டும்தான் கேலி செய்யவில்லை’’: குமரிமுத்து!

Published On:

| By Balaji

அட்டகாச சிரிப்பால் மட்டுமே தனக்கான அடையாளத்தை தமிழ் சினிமாவில் பதிய வைத்த குமரிமுத்து மறைந்தார். சின்னசிறிய வேடமென்றாலும் அதிலெல்லாம் தன் தடத்தை அழுத்தமாக பதியவைத்தவர் குமரிமுத்து. திமுக கலை இலக்கிய பேரவையின் மாநில துணைத்தலைவராக இருந்த குமரிமுத்து தன் வாழ்க்கையில் பெரிதும் மகிழ்ந்த தருணமாக கருணாநிதி கையால் கலைஞர் விருது வாங்கியதை சொல்லுவார்.

குமரிமுத்து – தன்னை எப்போதும் கருணாநிதியின் தம்பியாக அடையாளப்படுத்திக் கொள்வதையே விரும்பியவர். திராவிட இயக்க நடிகர்களில் தடம் மாறாமல் பயணித்த குமரிமுத்து வாழ்க்கையே ஒரு பாடம். ‘கிராஸ் ஐ’ என்று அழைக்கக்கூடிய மாறுகண்ணுடன் பிறந்த குமரிமுத்துக்கு, எங்கு போனாலும் கேலியும் கிண்டலும்தான் வரவேற்றது. விளையாடப்போனாலும், படிக்கப்போனாலும் அவரது பிறவிக்குறையான மாறுகண்ணை வைத்தே அடையாளப்படுத்தப்பட்டவர். 15 வயதில் வீட்டைவிட்டு வெளியேறி நடிக்கக் கிளம்பினார். அலைந்து திரிந்து வாய்ப்புகள் அற்று வீடு திரும்பியவரை பெற்ற தாயே உன் ஒண்ரைகண்ணுக்கு நடிப்பு கேடா” என்று அவரைக் கேலி செய்துள்ளார்.

ADVERTISEMENT

தன் வாழ்க்கை அனுபவங்களை பல்வேறு இதழ்களில் குமரிமுத்து பதிய வைத்த தொகுப்பிலிருந்து சில நினைவுகள்.”என்னைப் பெற்ற தாயே அப்படிச் சொல்லவும் எனக்கு வருத்தமாகத்தான் இருந்தது. அதே தாயின் மற்றொரு வார்த்தைதான் என்னை நாடறியும் நடிகராக ஆக்கியது. 15 வயதில் வீட்டைவிட்டு வெளியேறிய நான், எம்.ஆர்.ராதாவின் நாடகக் கம்பெனியில் 6 வருடங்கள் வேலை செய்தேன். ஒவ்வொருநாளும் அடிதடியாகத்தான் இருக்கும். நாடகம் நடந்துகொண்டே இருக்கும்போது, யாராவது நாலு பேர் கல்ல உட்டு எறிவான், ராதா பயப்படவே மாட்டாரு. போலீஸ்காரங்களும் பாதுகாப்புத் தரமாட்டாங்க. எங்களுக்குப் பாதுகாப்பு நாங்கதான். அதென்னவோ தெரியலை! எதிர்ப்பாளர்கள் எறியுற கல்லு ராதா அண்ணன் மேல படவே படாது. சைடு ஸ்கிரீன் பக்கத்துல நின்னுக்கிட்டு இருக்கிற எங்க தலையிலதான் வந்து விழும். என் முகத்தில் ஐந்து ஆறு இடத்தில் மாறவே மாறாத காயத்தழும்புகளெல்லாம் அப்பத்தான் ஏற்பட்டது. ஆனா, என்னை முதன்முதலில் பார்த்தவுடனே “இவன் யாரைப் பார்க்கிறான்” என்று என் கண் குறைபாட்டைக் கேலிசெய்யாமல் பேசிய முதல் மனிதன் எம்.ஆர்.ராதாதான். ஒரு அளவுக்கு மேல அடிவாங்க முடியாமல், ஊருக்குப் போனால் ‘நடிக்கப்போன மூஞ்சியப் பாரு’ என, பெற்ற தாயே கேலி பேசினார். ‘நீ மட்டும்தான் பாக்கி’ன்னு சொன்னபோது, என் அப்பாவுடன் வேலைபார்க்கும் ஆசிரியர் ஒருவரின் பெண் இருப்பதாகவும் அவரைக் கல்யாணம் பண்ணிக்கொள்கிறாயா? என கேட்கவும், நானும் சும்மாத்தானே இருக்கிறோம் என ‘சரி’ என்றேன். பொண்ணு பாக்கப்போன இடத்தில் பெண் பிடித்துவிடவே சம்மதம் எனத் தலையாட்டினேன். ஆனால் அந்தப் பெண் உள்ளேசென்று ‘இவன் வடக்க பார்க்கச் சொன்னா, தெக்க பாக்குறான். இவனக் கட்டிக்கிட்டு என்ன எழவ கொட்ட’ என்று, தன் வீட்டாரிடம் சொன்னது என் காதில் விழுந்தது. அன்று மறுபடியும் கிளம்பி வெளியேறியதால்தான் இன்றைக்கு 728 படம் நடிக்க முடிந்தது. இப்பவும் மானசீக நன்றியை என்னைப் புறக்கணித்த அந்த பெண்ணுக்குச் சொல்லுவேன்.

அந்தப் பொண்ணு சொன்னதும் கோபமாகி சென்னைக்கு பஸ் ஏறி வந்தாலும், இங்க ஒவ்வொரு சினிமா கம்பெனியிலும் அவமானம்தான். எந்த டைரக்டரைப் பார்த்தாலும் வாய்ப்பு இல்லைனு சொன்னால்கூட பரவாயில்ல, அதுக்கு முன்ன என் கண்ணை கேலி செய்துதான் வாய்ப்பை மறுப்பாங்க. ஒரு கம்பெனியில வாய்ப்புக்காக போய் நிற்கும்போது எனக்கு முன்னாடிபோன, லூஸ்.மோகனை படுகிண்டல் பண்ணி என்னைய காமிச்சு ‘அவர மாதிரி இருந்தாக்கூட பரவாயில்ல’ன்னு சொன்னாங்க. பின்னாடி வெளியே வந்து ‘ அண்ணே உங்கள கிண்டல் பண்ணின பிறகுதான் எனக்கு நிம்மதி’ன்னு விளையாட்டா லூஸ்.மோகன்கிட்ட சொன்னேன். அதுக்கு அவரு ‘போன வாரம் நீ ஒரு கம்பெனிக்கு வாய்ப்புக் கேட்டு போன இல்ல, அவங்க நீ போன பின்னாடி என்கிட்ட அந்தாளுக்கு நீ பரவாயில்லைன்னு சொன்னாங்க’ன்னு சொல்லி சிரிச்சாரு. ஆனா, எதை என்னோட குறையாக உலகம் சொன்னதோ அதே குறைபாடே என் அடையாளமாகியது. அதுபோல, ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அரசியல் இருக்க வேண்டும். என்கிட்ட நிறைய பணம் இருக்கு, நான் ஓட்டுப்போட மாட்டேன் என்பதல்ல. ஓட்டுப் போடுறதைத் தாண்டி சமூக நிகழ்வுகளை கண்காணிப்போடு அணுகவேண்டும். அதுபத்தி நம்மளுக்கு ஒரு கருத்து வேணும், அது நல்லதோ கெட்டதோ நமக்கு அரசியல் கருத்து வேணும்” என, குமரிமுத்து மனம் திறந்துள்ளார்.

ADVERTISEMENT

குமரிமுத்துவின் திரை வாழ்க்கையில் மிக முக்கிய படம் ‘இது நம்ம ஆளு’ அந்த படத்தில் பாக்யராஜின் அப்பாவாகவும் மனோரமாவின் கணவராகவும் பிரமாதமாக நடித்திருப்பார் குமரிமுத்து. அவ்பர் பற்றி இயக்குநர் பாக்யராஜ் தெரிவித்த போது..

“நான் அடுத்தவர்களின் படங்களைப் பார்க்கும்போது அதில், எனக்கு யாராவது சிறப்பா நடிச்சிருந்தா மனசுக்குள்ள குறிச்சுக்குவேன். என் படத்தின் கதை விவாதத்தின்போதே இன்ன படத்தில, இன்ன கேரக்டரில் நடிச்சாரே அவருதான் இந்த ரோல் பண்ணுறாருன்னு ஃபிக்ஸ் பண்ணிக்குவேன். குமரிமுத்தை நாடக நடிகராகவே எனக்கு தெரியும்னாலும் அவருக்கு ஏற்ற ரோல் கொடுக்கமுடியாமலே இருந்தது. ‘இது நம்ம ஆளு’ படத்தில் எனக்கு அப்பா ரோல் எழுதும்போதே இவரைத்தான் நினைச்சு எழுதினேன். ஒரு நாள், அவரை வரச்சொல்லியிருந்தேன். வந்தவர்கிட்ட ‘இந்த மாதிரி எனக்கு அப்பா ரோல் ஒண்ணு இருக்கு, நீங்கதான் அதுக்கு சரியா வருவீங்க’ன்னு சொன்னேன். ‘அதுக்கென்னங்க, அதெல்லாம் அட்டகாசமா பன்ணிடலாம்’ன்னு சொன்னவர்கிட்ட, உங்களுக்கு ஜோடி மனோரமா பண்றாங்கன்னு சொல்லவும் கொஞ்சம் பதறிப் போய்ட்டார். அவங்ககூட எல்லாம் நடிக்கிறது ரொம்பக் கஷ்டமாச்சேன்னு புலம்பிக்கிட்டே போனார். ஷூட்டிங் ஆரம்பித்த அன்று மனோரமா பக்கத்துல வந்து நிற்கவே கூசிக்கிட்டே இருந்தார். மனோரமாதான் அவரை கூப்பிட்டு “இங்க பாருங்க முத்து, இந்த கேரக்டர் பத்தி டைரக்டர்கிட்ட நல்லா கேட்டுக்கிட்டேன். உங்க நடிப்பு வாழ்க்கையில, ரொம்ப முக்கியமா இருக்கும்’னு சொன்னாங்க’’ என்றார். அதுக்குப் பிறகுதான் சமாதானமாகி நடிக்க ஆரம்பிச்சார். குமரிமுத்து, அடிப்படையில் நாடகத்தில் இருந்து வந்ததால மனோரமாவுக்கு அவர்மேல தனி ப்ரியம். இன்று மனோரமாவும் இல்ல, குமரிமுத்துவும் இல்ல” என, பாக்யராஜ் வருத்தம் தெரிவித்தார்.

ADVERTISEMENT

குமரிமுத்து பற்றி பாக்யராஜ் இறுதியாகச் சொன்ன வார்த்தைகள்தான் அவருக்கு நினைவாகச் சொல்ல வேண்டும். “ஆள் பார்க்கத்தான் அப்பாவியா இருப்பாரு. ஆனா, தமிழை கரைத்துக் குடித்திருப்பார். உண்மையில், தமிழ்த் திரை அவரை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்”.

குறைகளையே முன்வைத்து வென்ற குமரிமுத்துவிற்கு அஞ்சலிகள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share