ஜெம் வீரமணியின் கூட்டாளிகளான சாந்தி, மகேந்திர சிம்ஹன் ஆகியோருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஜெம் வீரமணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரது கூட்டாளிகளான சாந்தி, மகேந்திர சிம்ஹன், கணேசன் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் இருவரும் ஜாமீன் கேட்டு சென்னை போக்சோ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அதில், ஆகஸ்ட் 28-ம் தேதி கைது செய்து, ஆகஸ்ட் 29ஆம் தேதி தான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். 2019 ஆம் ஆண்டு நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவம் தொடர்பாக 6 ஆண்டுகள் கழித்து 2025 அக்டோபர் 6ம் தேதி தான் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
2025 அக்டோபர் 7ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த தாமதத்துக்கு எந்த விளக்கமும் இல்லை என்பதால் சந்தேகம் எழுந்துள்ளது.
கைது செய்யப்பட்டு மூன்று வாரங்கள் நெருங்கும் நிலையில் இதுவரை தங்களை காவலில் வைத்து விசாரிக்க கோரி காவல்துறை மனு தாக்கல் செய்யவில்லை. ஏற்கனவே ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு விட்டது. எனவே எங்களை சிறையில் அடைத்து வைத்திருக்கிற வேண்டிய அவசியம் இல்லை என்பதால் இருவருக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பத்மா இது தொடர்பாக காவல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று (செப்டம்பர் 26) பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதில், ”இருவருக்கும் ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்ககூடும். ஆதாரங்களை அழிக்க சாந்தி வீரமணியிடமிருந்து 24 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுள்ளார். இவரிடம் கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்களை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிகளை கண்டுபிடிக்க வேண்டும். இவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் மற்றும் குடும்பத்தினரை அச்சுறுத்த வாய்ப்புள்ளது. அதோடு இருவரும் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லக்கூடும் என்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது ”என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது..
காவல்துறையின் பதில் மனுவை தொடர்ந்து இந்த வழக்கு வரும் செப்டம்பர் 29ஆம் தேதி அன்று விசாரணைக்கு வரவுள்ளது.
