மதுரையில் அரசு சட்டக் கல்லூரி நிகழ்ச்சியில் நீதிபதி பேசிக் கொண்டிருக்கும் போதே மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், தமிழக வெற்றிக்கழக ஆட்சி அமைந்தது முதல் தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக நள்ளிரவில் பொதுமக்கள் போராடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மதுரையில் உள்ள சட்டக்கல்லூரியில் இன்று (செப்டம்பர் 26) நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின்போது திடீரென மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா கலந்து கொண்டார். மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென சில நொடிகள் மின்வெட்டு ஏற்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை வரவேற்று நீதிபதி பேசிக்கொண்டிருந்த போது, மின்வெட்டு ஏற்பட்டதால் அவர் பேச்சை நிறுத்தினார்.
பின்னர் மின்சாரம் வந்ததும், ‘கரண்ட் வந்திருச்சு’ என கூறி தனது பேச்சை தொடர்ந்தார்.
மின்சாரத் துறை அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சி, குறிப்பாக உயர்நீதிமன்ற நீதிபதி கலந்து கொண்டு பேசிக் கொண்டிருக்கும்போது மின்வெட்டு ஏற்பட்டது பேசு பொருளாகியுள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் நிர்மல் குமார் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்திருந்தார்.
”நிகழ்ச்சி நடந்த இடத்தில் ஒரு ஜெனரேட்டரில் இருந்து இன்னொரு ஜெனரேட்டருக்கு மின்சார இணைப்பை மாற்றியதால் வெறும் 5 வினாடிகள் மட்டுமே கரண்ட் போய் வந்தது” என்று கூறியுள்ளார்.

அதுபோன்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும் விளக்கம் அளித்திருந்தது.
அதில், “ஒத்தக்கடை துணை மின் நிலையத்தில் உள்ள 110KV… அழகர் கோயில்- பசுமலை மின் பாதையில், இன்று காலை 11.22 மணி அளவில் மின் பாதை துண்டிக்கப்பட்டதன் காரணமாக மின்தடை ஏற்பட்டுள்ளது. தற்போது பழுது நீக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இன்னும் தோராயமாக 2 மணி நேரத்தில் மின் வினியோகம் சீரமைக்கப்படும்” என்று தெரிவித்திருந்தது.
ஆனால் இந்த பதிவை வெளியிட்ட சில நிமிடங்களில் டான்ஜெட்கோ, ட்விட்டர் பக்கத்திலிருந்து நீக்கி உள்ளது.
இந்த பிரச்சினைக்கு உரிய விளக்கம் வருவதற்குள் இன்று மீண்டும் அமைச்சர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் மின்வெட்டு ஏற்பட்டது.
தாராபுரத்தில், உப்பாறு அணை தொடர்பாக விவசாயிகளுடன் அமைச்சர்கள் அருண்ராஜ், செங்கோட்டையன் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். அப்போது உடுமலை ராதாகிருஷ்ணன் பேசும்போது மின்தடை ஏற்பட்டது.
இதுபோன்று அமைச்சர்கள், நீதிபதிகள் என முக்கிய விருந்தினர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் மின்சாரம் தடைபடுவது முதல் முறை அல்ல.
ஏற்கனவே வேலூரில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்துக் கொண்டிருந்தபோது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கலந்தாய்வு கூட்டத்தில், அமைச்சர்கள் செங்கோட்டையன், அருண் ராஜ், விஜய பாலாஜி, பர்வேஸ், பிரபு, லோகேஷ் தமிழ்ச்செல்வன், ராஜேஷ் குமார் கலந்து கொண்டிருந்தனர். இதில், செங்கோட்டையன் பேசிக்கொண்டிருக்கும்போது மின்வெட்டு ஏற்பட்டது.
மதுராந்தகம் தொகுதியில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் பேசிக் கொண்டிருக்கும்போது மின்வெட்டு ஏற்பட்டது.
அமைச்சர்கள் பங்கேற்கும் பாதுகாப்புமிக்க அரசு நிகழ்ச்சிகளிலேயே மின்சாரம் துண்டிக்கப்படுகிறது என்றால், கிராமப்புறங்களில் வாழும் சாமானிய மக்களின் நிலை என்ன? என்ற கேள்வி எழுந்துள்ளது.
