சென்னை மெட்ரோ ரயிலில் நாளை செப்டம்பர் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பயணம் செய்ய திட்டமிட்டுள்ளவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அறிவிப்பை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

விமான நிலையம் செல்வோர் கவனத்திற்கு
பராமரிப்பு பணிகள் காரணமாக, பச்சை வழித்தடத்தில் (Green Line) அண்ணா நகர், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு நேரடியாக Inter-Corridor சேவையில் நாளை பயணிக்க முடியாது.
இந்தப் பகுதிகளில் இருந்து விமான நிலையம் செல்லும் பயணிகள் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து நீல வழித்தட (Blue Line) ரயிலுக்கு மாறி விமான நிலையத்துக்குப் பயணிக்க வேண்டும்.
Green Line, Blue Line இயங்குமா?
அதே நேரத்தில், பச்சை வழித்தடத்தில் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ – செயின்ட் தாமஸ் மவுண்ட் இடையேயும், நீல வழித்தடத்தில் விம்கோ நகர் டிப்போ – சென்னை சர்வதேச விமான நிலையம் இடையேயும் மெட்ரோ ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும்.
எத்தனை நிமிடங்களுக்கு ஒரு ரயில்?
நாளை காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இருக்கும்.
காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையும் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும்.
நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும், இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்படும்.
எனவே அண்ணா நகர், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து விமான நிலையம் செல்லும் பயணிகள் ஆலந்தூரில் Blue Line-க்கு மாறிச் செல்லும் வகையில் தங்களது பயணத்தைத் திட்டமிட்டுக் கொள்ளுமாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
