சிபிஎஸ்இ பள்ளி தொடங்க மாநில அரசின் தடையில்லா சான்று தேவையில்லை என்பது கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைக்கும் செயல் என கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். no need noc for cbse school
புதியக் கல்வி கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு நிதி வழங்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமீபத்தில் தெரிவித்தார். இதனையடுத்து அவரது கருத்துக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் வேப்பூரில் நடைபெற்ற பெற்றோரைக் கொண்டாடுவோம் மாநாட்டில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், ”ரூ.10 ஆயிரம் கோடி கிடைக்கும் என கூறினாலும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம்“ எனத் திட்டவட்டமாக கூறினார்.
இந்த நிலையில் சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்கும் விதிமுறையில் மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் புதிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
தடையில்லா சான்றிதழ் தேவையில்லை! no need noc for cbse school
அதன்படி, சிபிஎஸ்இ பள்ளிகள் அங்கீகார சட்டம் 2018ல் பிரிவு 2.3.5ல் திருத்தம் செய்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க இனி மாநில அரசின் அனுமதி தேவையில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற மாநில அரசின் தடையில்லா சான்றிதழ் அவசியம். இந்த நிலையில் தற்போது செய்யப்பட்டுள்ள திருத்தத்தின்படி, மாநில அரசின் தடையில்லா சான்றிதழ் கட்டாயமில்லை. சாரஸ் இணையதளம் மூலம் அங்கீகாரம் கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு தடையில்லா சான்றிதழ் இல்லாமலேயே சிபிஎஸ்இ பள்ளிக்கான அங்கீகாரம் வழங்கப்படும்.
பள்ளி தொடங்க விண்ணப்பித்ததும், சிபிஎஸ்இ நிர்வாகம் மாநில அரசின் கருத்தை கேட்டு கடிதம் அனுப்பும். இந்த கடிதம் கிடைத்த 30 நாட்களுக்குள் மாநில அரசு பதிலளிக்க வேண்டும். இல்லாவிட்டால், சம்மந்தப்பட்ட மாநில பள்ளி கல்வித் துறைக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்படும். அதற்கு 15 நாட்களுக்குள் பதில் அளிக்காதபட்சத்தில், எந்த ஆட்சேபனையும் இல்லை (No Objection) என கருதப்பட்டு சிபிஎஸ்இ அனுமதி வழங்கும்.
புதிய விதிமுறையில் செய்யப்பட்டுள்ள திருத்தம் 2026-2027ஆம் கல்வியாண்டில் அமலுக்கு வர உள்ளது.
ஏற்கெனவே மத்திய அரசின் புதியகல்வி கொள்கைக்கு எதிராக தமிழக அரசு போராடி வரும் நிலையில், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு மாநில அரசின் என்.ஓ.சி தேவையில்லை என்ற அறிவிப்பு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும், கல்வியாளர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைக்கும்! no need noc for cbse school
இதுதொடர்பாக கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொதுவாக எந்த பள்ளிகளை தொடங்க வேண்டும் என்றாலும் மாநில அரசின் அங்கீகாரம் பெற்றாக வேண்டும். மாநில அரசு அந்த இடத்தில் ஏற்கெனவே பள்ளிகள் உள்ளதா, அதில் கற்பிக்கப்படும் பாடத்திட்டம், பள்ளி கட்டிடத்திற்கான தரநிலை ஆகியவை முழுவதும் உள்ளதா என்பதை ஆய்வு செய்து தடையில்லா சான்றிதழ் வழங்கும்.
தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க வேண்டும் என்றால் மாநில அரசிடம் இருந்து தடையில்லா சான்று பெற வேண்டும். அப்போது தான் சிபிஎஸ்இக்கு விண்ணப்பிக்க முடியும். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை வகுத்து, தேர்வுகளை நடத்தி, மதிப்பெண் சான்றிதழ் வழங்குகிறது. இதைமட்டுமே சிபிஎஸ்இ செய்கிறது.
ஆனால் பள்ளி நிர்வாகம் சரியாக செயல்படுகிறதா, மாணவர்களுக்கான வசதிகள் இருக்கிறதா ஆகியவற்றை உள்ளாட்சி அமைப்புகள் தான் கண்காணிக்க முடியும்.
மாநில அரசின் தடையில்லா சான்றிதழ் தேவையில்லை என்றால் ஏதாவது பிரச்சனை ஏற்படும் போது அதற்கு யார் பொறுப்பேற்பார்கள். மாநில அரசின் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும் என்ற நிலை இருக்கும் போதே சிபிஎஸ்இ மாநில நிர்வாகங்களை மதிப்பதில்லை, இப்போது அதுவும் இல்லை என்றால் மாநில அரசின் எந்த கட்டுப்பாட்டிற்கும் கீழ் வராது. இந்த நடைமுறை என்பது கல்வியை முழுமையாக வணிகமயமாக்கவே உதவும்.
மேலும் மத்திய அரசு, மாநில அரசுகளை கவனத்திற்கு எடுத்து கொள்ளாமல் தனிச்சையாக முடிவெடுக்கவும், மாநில அரசுகளே இல்லை என்ற எண்ணத்திலும் செயல்படுகின்றனர். இந்த நடைமுறை என்பது கூட்டாட்சி தத்துவத்தையும், அரசியலமைப்பு சட்டத்தையும் சீர்குலைக்கும் விதமாகவே உள்ளது.
நிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ எந்த பள்ளிகளுக்கு ஒப்புதல் உள்ளது என்பது உள்ளிட்டவை குறித்து ஆய்வுகள் எதுவும் நடத்துவது இல்லை. இதனால் பெற்றோர் தான் தங்கள் குழந்தைக்கு நல்ல கல்வி வழங்க வேண்டும் என்பதற்காக அதிக கட்டணம் செலுத்தி பின்னர் பள்ளிகளுக்கு அங்கீகாரம் இல்லை என தெரியவந்து ஏமாற்றம் அடைகின்றனர். இதுபோன்ற எண்ணற்ற பிரச்சனைகளை சிபிஎஸ்இ கொண்டுள்ள நிலையில், மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிப்பது மிகவும் தவறான ஒன்று” என பிரின்ஸ் கஜேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
