நெடுஞ்சாலை முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
கரூர், திருப்பூர் பகுதிகளில் நெடுஞ்சாலை துறையில் முறைகேடு நடைபெற்றதாக கூறி முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில் தன் மீது போடப்பட்ட எஃப்.ஐ.ஆர்-ஐ ரத்து செய்ய கேட்டும், தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை ரத்து செய்யக் கோரியும் எ.வ. வேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது எ.வ. வேலு சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி, ‘ எ.வ. வேலு விசாரணைக்கு ஒத்துழைத்து வருகிறார். அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதை ரத்து செய்ய வேண்டும்’ என்று வாதங்களை முன் வைத்தார்.
இதைக் கேட்ட நீதிபதி இளந்திரையன், எ.வ. வேலுவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும் அவர் வெளிநாடு செல்ல விரும்பினால் கீழமை நீதிமன்றத்தின் அனுமதியை பெற வேண்டும் என்று நிபந்தனையும் விதித்தார்.
அப்போது எ.வ. வேலுவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என்று பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவையும் நீட்டித்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 14ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இந்நிலையில் இவ்வழக்கு இன்று நீதிபதி லட்சுமி நாராயணன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது பதில் மனு தாக்கல் செய்ய அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி பதில் மனு தாக்கல் செய்ய ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி உத்தரவு பிறப்பித்தார். அதுவரை எ.வ.வேலுவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என்ற இடைக்கால உத்தரவையும் நீட்டித்து உத்தரவிட்டார்.
