அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட வக்ஃப் திருத்தச் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 16) விசாரிக்கிறது. new Waqf Act supreme court today
தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையில் நீதிபதிகள் கே.வி. விஸ்வநாதன் மற்றும் பி.வி. சஞ்சய் குமார் ஆகியோரைக் கொண்ட அமர்வு, இந்த வழக்கை பிற்பகல் 2 மணிக்கு விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வக்ஃப் திருத்தச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சுமார் 65 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
திமுக சார்பில் துணைப் பொதுச் செயலாளார் ஆ.ராசா, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் விஜய், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) எம்பி அசாதுதீன் ஒவைசி, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, ஆர்.ஜே.டி எம்பி மனோஜ் குமார் ஜா, சமாஜ்வாடி கட்சி எம்பி ஜியா உர் ரஹ்மான், காங்கிரஸ் எம்.பி.க்கள் இம்ரான் மசூத் மற்றும் முகமது ஜாவேத் உள்ளிட்டோர் வக்ஃப் திருத்தச் சட்டத்தை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள்.
மேலும் முஸ்லிம் அமைப்புகளும் வழக்குத் தொடர்ந்துள்ளன.
சட்டப் பிரிவுகள் 14 (சமத்துவ உரிமை), 15 (மதம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டுதல்), 21 (வாழ்க்கை மற்றும் சுதந்திரத்திற்கான உரிமை), 25 (மத சுதந்திரம்), 26 (மத விவகாரங்களை நிர்வகிக்கும் சுதந்திரம்), 29 (சிறுபான்மையினரின் உரிமைகள்) ஆகியவற்றை வக்ஃப் திருத்தச் சட்டம் மீறுவதாக இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. new Waqf Act supreme court today
இந்த வழக்குகளில் ஒவைசிக்காக வழக்கறிஞர் நிஜாம் பாஷா ஆஜராகும் அதே வேளையில், மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, ராஜீவ் தவான் மற்றும் ஷோப் ஆலம் ஆகியோர் புதிய சட்டத்திற்கு எதிராக வாதிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேநேரம், பாஜக ஆளும் ஆறு மாநிலங்களான ஹரியானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், அசாம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் இந்தச் சட்டத்தை ஆதரித்து மனுக்களை தாக்கல் செய்துள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.