சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய விசிக எம்.எல்.ஏ. வன்னி அரசு, “திருமாவளவன் முதல்வராக கூட வாய்ப்பிருகிறது” என கூறியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிபிஐ, சிபிஎம், விசிக கட்சிகளுடன் மு.க.ஸ்டாலின் அண்மையில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது, அதிமுக ஆட்சி அமைக்க திமுக வெளியில் இருந்து ஆதரவு தருவது குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது, “எடப்பாடி பழனிசாமி முதல்வராக நாங்கள் ஆதரவு தரமாட்டோம்; அப்படி எடப்பாடி பழனிசாமி முதல்வரானால் நம்பிக்கை வாக்கெடுப்பில் நாங்கள் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்வோம்” என ஸ்டாலினிடம் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களான பெ.சண்முகம், மு. வீரபாண்டியன் கூறி இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து சென்னையில் நேற்று சிபிஐ, சிபிஎம் கட்சிகளின் மாநில குழுக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு கருத்துகள் விவாதிக்கப்பட்டு இறுதியாக திடீரென விஜய்க்கு ஆதரவு தருவது என இரு கட்சிகளும் முடிவெடுத்து அறிவித்தன.
இதனிடையே திமுக தரப்பில், “தலித் தலைவரான திருமாவளவனை ஏன் திமுக- அதிமுக இணைந்து முதல்வராக்கக் கூடாது?” என்கிற யோசனை முன்வைக்கப்பட்டு பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடனும் திமுக தரப்பு ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனைகளில் “திருமாவளவன் குறிப்பிட்ட காலம் முதல்வராக இருக்கட்டும்; அதன் பின்னர் நீங்கள் (எடப்பாடி பழனிசாமி) முதல்வராக பதவியேற்கலாம்” என்றும் சொல்லப்பட்டது.
ஆனால், தம்மால் முதல்வர் பதவியை விட்டுத் தர முடியாது; திருமாவளவன் துணை முதல்வராக இருக்கட்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்து வருகிறார்.
இதனிடையே சென்னையில் அதிமுக எம்.எல்.ஏக்களுடன் எடப்பாடி பழனிசாமி தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார். இதில், அதிமுக மூத்த தலைவர்களான கே.பி. முனுசாமி, சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர், “திருமாவளவனை முதல்வராக்குவதற்காக நீங்கள் (எடப்பாடி பழனிசாமி) விட்டுத் தரவேண்டும்” என ஒருமித்த குரலில் வலியுறுத்தி வருகின்றனர்.
தற்போதைய நிலையில் எடப்பாடி பழனிசாமி எடுக்கப் போகும் முடிவுகளின் அடிப்படையில்தான் அடுத்த கட்ட நகர்வுகள் இருக்கும் என்கின்றன தகவல்கள்.
இந்த ஆலோசனைகள், பேச்சுவார்த்தைகளை வைத்துதான் திருமாவளவன் முதல்வராகவும் வாய்ப்பிருக்கிறது என விசிக எம்.எல்.ஏ. வன்னி அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
