தவெக தலைவர் விஜய் நேற்று ஆளுநர் அர்லேகரை சந்தித்து தமக்கு 121 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக கடிதம் கொடுத்திருந்தார். அந்த கடிதத்தில் , அமமுக எம்.எல்.ஏ. வும் தமக்கு ஆதரவு தருவதாகவும் அவரது ஆதரவு கடிதம் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதான் மிகப் பெரிய சர்ச்சையாகி தற்போது விஜய்க்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.
சட்டசபை தேர்தலில் மன்னார்குடி தொகுதியில் மட்டும் அமமுக வேட்பாளர் காமராஜ் வெற்றி பெற்றார். புதுச்சேரி ஆரோவில் அருகே அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு சொந்தமான பங்களாவில்தான் அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் தங்க வைக்கப்பட்டிருந்தார்.
காமராஜை தொடர்பு கொண்ட தவெக தரப்பு, விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பதற்காக பேரம் பேசியிருக்கிறது. அத்துடன் டிடிவி தினகரனின் பங்களாவில் இருந்து அவரை வெளியே அழைத்துவரவும் திட்டமிட்டது.
இந்த திட்டத்தின்படி, அந்த பங்களாவை விட்டு வெளியே வந்த காமராஜை நடுவழியில் சினிமா பாணியில் வேறொரு காரில் ஏற்றிக் கொண்டது தவெக தரப்பு.
அந்த காரில் அமர்ந்த காமராஜிடம் கட்டு கட்டாக பல கோடி ரூபாய் பணம் காட்டப்பட்டதாம். இந்த பணத்தைப் பெற்றுக் கொண்டு விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் கடிதத்தில் கையெழுத்து போட்டுத் தருமாறும் தவெக டீம் சொன்னது.
மேலும் ”விசிகவும் முஸ்லிம் லீக் கட்சியும் விஜய்க்கு ஆதரவு தந்துவிட்டது.. அதனால் நீங்களும் கையெழுத்து போட்டுவிடுங்க” எனவும் சொல்லி இருக்கிறது.
இதனால் காமராஜ் எம்.எல்.ஏ.வும் ஒரு கடிதத்தில் கையெழுத்திட்டார். இதை தவெக டீம் வீடியோவும் எடுத்து வைத்துக் கொண்டது.
ஆனால் தாம் போடும் கையெழுத்தை வைத்துதான், விஜய் ஆட்சியே அமைக்க போகிறார் என்பது தெரியாமலேயே காமராஜ் கையெழுத்திட்டுவிட்டார்.
காமராஜ் கையெழுத்திட்டதாக சொல்லப்படும் அந்தக் கடிதத்தை ஸ்கேன் செய்து வாட்ஸ் ஆப்பில் சென்னைக்கு தவெக டீம் அனுப்பி வைத்துள்ளது. இந்த பிரிண்ட் அவுட்டைதான் அமமுகவும் ஆதரவு தருகிறது என ஆளுநரிடம் விஜய் நேற்று கொடுத்திருக்கிறார்.

இதனையடுத்து விஜய்க்கு அமமுக ஆதரவு என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதனால் டிடிவி தினகரன் பதறியடித்துக் கொண்டு நேற்று இரவு ஆளுநர் மாளிகைக்கு சென்றார். அங்கு ஆளுநர் அர்லேகரை சந்தித்து,
தமது கட்சியின் எம்.எல்.ஏ. காமராஜ், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைக்கவே ஆதரவு கடிதம் கொடுத்தார்; உங்களிடம் விஜய்க்கு ஆதரவு என கொடுத்த கடிதம் போலியானது என புகார் தெரிவித்தார்.
இதனையடுத்து அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் தொடர்பாக ஆளுநர் அர்லேகர் விசாரணைக்கு உத்தரவிட்டார்.
மேலும் தவெக தரப்பை தொடர்பு கொண்ட ஆளுநர் மாளிகை, “விஜய்க்கு ஆதரவு தருவதாக சொல்லி இருக்கும் அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் கடத்தப்பட்டுவிட்டதாக டிடிவி தினகரன் புகார் கொடுத்துள்ளார்; அதனால் காமராஜ் எம்.எல்.ஏ.வை உடனடியாக ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்க வேண்டும்; இல்லை எனில் இதனுடைய விளைவுகள் மிக மோசமானதாக இருக்கும்” எனவும் எச்சரிக்கப்பட்டது.
அதேபோல போலீசாரும் காமராஜ் இருக்கும் இடத்துக்கு நேரில் சென்று, “ஆளுநர் மாளிகையில் இருந்து அழைத்துள்ளனர்; அதனால் உடனே புறப்பட்டு வர வேண்டும்” என அவரை அழைத்துள்ளனர்.
இதன் பின்னரே நேற்று நள்ளிரவில் ஆளுநர் அர்லேகரை காமராஜ் எம்.எல்.ஏ. சந்தித்தார். இந்த தகவல் கிடைத்த உடன் நள்ளிரவில் மீண்டும் ஆளுநர் அர்லேகரை சந்தித்தார் டிடிவி தினகரன். அப்போது ஆளுநர் அர்லேகரிடம் காமராஜ் எம்.எல்.ஏ. ஒரு கடிதம் கொடுத்தார்.
அதில், தாம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைக்க மட்டுமே ஆதரவு தந்துள்ளேன்; தவெகவுக்கு ஆதரவு தருவதாக என் பெயரில் வாட்ஸ் ஆப்பில் ஒரு கடிதம் எனக்கு தெரியாமலேயே பரப்பிவிட்டு வருகின்றனர். எடப்பாடி பழனிசாமிக்குதான் ஆதரவு என்கிற கடிதத்தை மட்டுமே ஏற்க வேண்டும் என கூறியுள்ளார்.
இந்த சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய காமராஜ் எம்.எல்.ஏ, டிடிவி தினகரன் இருவருமே, ஆளுநர் அர்லேகரிடம் விஜய் கொடுத்தது போலியான ஆதரவு கடிதம் என குற்றம் சாட்டினர். அதேபோல, “தாம் தவெக ஆட்சி அமைக்க எந்த ஆதரவும் தரவே இல்லை” எனவும் காமராஜ் எம்.எல்.ஏ. திட்டவட்டமாகவும் கூறினார்.
அத்துடன் சென்னை கிண்டி காவல்நிலையத்தில் போலி ஆதரவு கடிதம் தயாரித்ததாக தவெகவினர் மீது டிடிவி தினகரன், காமராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் புகார் கொடுத்தனர்.
இதனிடையே தவெக தரப்பில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. அதில் சுய நினைவுடன் காமராஜ் எம்.எல்.ஏ. கையெழுத்திடுவதாக கூறப்பட்டிருந்தது. அதாவது தவெக டீம் வசம்தான் காமராஜ் எம்.எல்.ஏ. இருந்தார் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அந்த வீடியோ வெளியாகி இருந்தது.
போலி ஆதரவு கடிதம்- என்ன தண்டனை?
- ஆளுநரை ஏமாற்றி போலி ஆதரவு கடிதம் கொடுக்கப்பட்டது உறுதியானால் BNS பிரிவுகள் 336, 340 ன் கீழ் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
- BNS பிரிவு 318-ன் கீழ் ஒரு பொது அதிகாரியை (ஆளுநர்) ஏமாற்றி, ஒரு பதவியைப் பெறுவது கிரிமினல் மோசடியாகும். இதற்கு 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.
- BNS 61-ன் கீழ் இத்தகைய செயலில் பல நபர்கள் இணைந்து ஈடுபட்டால், அது சதித் திட்டத்தின் கீழ் வரும். இதற்கும் மிகக் கடுமையான தண்டனைகள் உண்டு என்கின்றனர் சட்ட வல்லுநர்கள்.
