ICC worldcup: நடப்பு உலகக்கோப்பை தொடரில் இன்று நெதர்லாந்து அணியை சந்திக்கும் இந்திய அணியில் விராட் கோலி, முகமது ஷமி மற்றும் ரோஹித் சர்மா மூவரும் புதிய சாதனை படைக்க தயாராக உள்ளனர்.
தீபாவளி தினமான இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்திய அணியும், நெதர்லாந்து அணியும் மோதுகின்றன.
இதுவரை நடந்த அனைத்து 8 போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், கடைசியாக லீக் போட்டியில் மிகப்பெரிய வெற்றியை பெற இந்திய அணி திட்டமிட்டுள்ளது.
அதே வேளையில் இந்திய அணிக்கு அதிர்ச்சி கொடுத்து ஆறுதல் வெற்றியுடன் நாடு திரும்ப களமிறங்குகிறது நெதர்லாந்து அணி.
இந்த போட்டி அரையிறுதியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த போவதில்லை என்றாலும், இன்றைய போட்டியில் கிடைக்கும் வெற்றியின் மூலம் இந்திய அணி குழுவாகவும், வீரர்கள் மூலமாக தனித்தனியாகவும் பல புதிய சாதனைகள் படைக்கப்பட உள்ளது.
சாதனை படைக்குமா இந்திய அணி!
அதன்படி, கடந்த 2015 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் தொடர்ச்சியாக 7 போட்டிகளில் வெற்றி பெற்றதே இந்திய அணியின் சாதனையாக உள்ளது.
இந்த சாதனையை நடப்பு உலகக்கோப்பையில் ஏற்கெனவே இந்திய அணி (8 தொடர் வெற்றி) முறியடித்துள்ள நிலையில், இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் புதிய மைல்கல்லாக அமையும்.
மேலும் இரண்டாவது முறையாக தோல்வியே சந்திக்காமல் அரையிறுதிக்கு முன்னேறிய அணி என்ற பெருமை இந்தியாவுக்கு வசமாகும்.
தனிப்பட்ட சாதனைகளைப் பொறுத்தவரை, விராட் கோலி, முகமது ஷமி மற்றும் கேப்டன் ரோஹித் ஷர்மா ஆகியோர் இன்று புதிய உச்சங்களை எட்ட முடியும்.
விராட் கோலி
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 49 சதம் அடித்த இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் விராட்கோலி சமன் செய்துள்ளார்.
இன்றைய ஆட்டத்திலும் சதமடித்தால், ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 50 சதங்கள் கண்ட முதல் வீரர் என்ற உலக சாதனை படைப்பார் கோலி.
முகமது ஷமி
நடப்பு உலகக்கோப்பை தொடரில் 4 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள முகமது ஷமி 16 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் ஏற்கெனவே அதிக விக்கெட்டுகள்(47) வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையை பெற்றுள்ளார்.
நெதர்லாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் மேலும் 3 விக்கெட்டுகளை கைப்பற்றுவதன் மூலம் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் 50 விக்கெட்டுகளை பூர்த்தி செய்த முதல் இந்தியர் என்ற பெருமையை முகமது ஷமி பெறுவார்.
1996ஆம் ஆண்டு 523 ரன்களும், 2003ஆம் ஆண்டு 673 ரன்களும் என இரண்டு உலகக்கோப்பையில் 500க்கு மேல் ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார் சச்சின்.
கேப்டன் ரோகித் சர்மா
இன்றைய போட்டியில் 58 ரன்களை கேப்டன் ரோகித் சர்மா எடுக்கும் பட்சத்தில், சச்சினுக்கு பிறகு இரண்டு உலகக் கோப்பைகளில் 500-க்கும் மேற்பட்ட ரன்களைக் கைப்பற்றிய இரண்டாவது இந்தியர் என்ற பெருமையைப் பெறுவார்.
கடந்த 2019ஆம் நடந்த உலகக்கோப்பையில் ரோஹித் சர்மா 648 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெயில் 35 ஆட்டங்களில் 49 சிக்ஸர்கள் அடித்ததே சாதனையாக உள்ளது.
இதுவரை 25 ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளில் 45 சிக்சர்களை அடித்துள்ள ரோகித் சர்மா, இன்றைய ஆட்டத்தில் மேலும் 5 சிக்ஸர்கள் அடித்தால், அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற சாதனையும் அவரது வசமாகும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
யூடியூபர்கள் கலக்கும் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’: ட்ரெய்லர் எப்படி?