நீட் பாணியில் சிபிஎஸ்இ-ல் குளறுபடி.. மக்கள் கொந்தளிப்பால் தலைவரை மாற்றியது மத்திய அரசு!

Published On:

| By Mathi

CBSE New Chairman

சிபிஎஸ்இ (CBSE) தலைவராக இருந்த ராகுல் சிங் மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக புதிய தலைவராக லோகண்டே பிரசாந்த் சீதாராம் நியமிக்கப்பட்டுள்ளார்.

நடப்பு 2026-ஆம் ஆண்டு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகளுக்குப் பிறகு, மாணவர்கள் தங்களின் விடைத்தாள் நகல்களை (Scanned Copies) ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து பார்த்தபோது, தங்களுக்குப் பதிலாக வேறொரு மாணவரின் விடைத்தாள் அப்லோடு செய்யப்பட்டிருந்த அதிர்ச்சிகரமான குளறுபடிகள் வெளிச்சத்திற்கு வந்தன.

ADVERTISEMENT

விடைத்தாள்களைப் மொபைல் போன்கள் மூலம் அவசரகதியில் ஸ்கேன் செய்து கணினியில் திருத்தியதால் (OSM முறை), மதிப்பெண்களைக் கூட்டுவதிலும், மதிப்பீடு செய்வதிலும் பல பிழைகள் ஏற்பட்டுள்ளதாக மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் சிபிஎஸ்இ-யின் இந்தத் தவறுகளைச் சரிசெய்ய, மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது ஒவ்வொரு படிநிலைக்கும் தனித்தனியாகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது:

ADVERTISEMENT
  • டிஜிட்டல் விடைத்தாள் நகல் பெற- ஒரு பாடத்திற்கு ₹100
  • மறு கூட்டல் (Re-totalling) செய்ய ஒரு விடைத்தாளுக்கு ₹100
  • மறுமதிப்பீடு (Re-evaluation) செய்ய ஒரு கேள்விக்கு ₹25
  • ஒரு மாணவர் தன் விடைத்தாளைச் சரியாகச் சரிபார்க்க வேண்டுமென்றால், சராசரியாக ₹2,000 வரை செலவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் நாடு முழுவதும் மாணவர்கள் பெரும் கொந்தளிப்புக்குள்ளாகினர்.

பாதிக்கப்பட்ட மாணவர்களை நேரில் சந்தித்துப் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசையும் சிபிஎஸ்இ அமைப்பையும் கடுமையாக விமர்சித்தார்.

ADVERTISEMENT

“இன்று பிக்பாக்கெட் திருடர்கள் சிபிஎஸ்இ-க்குள்ளேயே அமர்ந்திருக்கிறார்கள். சிபிஎஸ்இ செய்த தவறுக்கு மாணவர்களிடம் பில் (கட்டணம்) வசூலிக்கிறார்கள்” என்றும் ராகுல் காந்தி சிபிஎஸ்இ நிர்வாகத்தை சாடியிருந்தார்.

மேலும் கல்வி என்பது ஒரு சேவையாகப் பார்க்கப்படாமல், லாபம் சம்பாதிக்கும் வணிகமாக மாற்றப்பட்டுவிட்டது. சிபிஎஸ்இ செய்த நிர்வாகத் தவறுக்கான தண்டனையை மாணவர்கள் பணமாகவும், மன உளைச்சலாகவும் அனுபவிக்கிறார்கள். ஆனால், அதன் மூலம் கிடைக்கும் லாபம் அரசாங்கத்திற்குச் செல்கிறது.

சுமார் 4 லட்சம் மாணவர்கள் இது போன்ற மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கும்போது, இதன் மூலம் சிபிஎஸ்இ மற்றும் அரசு எவ்வளவு கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.

நீட் (NEET) தேர்வு முறையைப் போல, ஒட்டுமொத்தக் கல்வி முறையையும் ஒரே இடத்தில் அதீத அதிகாரக் குவிப்பு செய்வதால்தான், ஒரு இடத்தில் தவறு நடக்கும்போது அது ஒட்டுமொத்த அமைப்பின் தோல்வியாக (System Failure) மாறுகிறது. கல்வி முறை பரவலாக்கப்பட வேண்டும் (Decentralised).

சிபிஎஸ்இ விடைத்தாள்களை டிஜிட்டல் முறையில் மதிப்பீடு செய்யும் பணிகளை மேற்கொண்ட ‘கோஅம்ப்ட்’ (Coempt) என்ற நிறுவனம், முன்னதாக ‘குளோபரேனா’ (Globarena) என்ற பெயரில் இருந்தபோதே பல்வேறு குளறுபடிச் சர்ச்சைகளில் சிக்கிய நிறுவனம் என்றும் ராகுல் காந்தி குற்றம் சாட்டி இருந்தார்.

இந்த பின்னணியில் சிபிஎஸ்இ தலைவர் ராகுல் சிங் மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக புதிய தலைவராக லோகண்டே பிரசாந்த் சீதாராம் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல சிபிஎஸ்இ செயலாளர் ஹிமான்ஷூ குப்தாவும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஒருநபர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவுக்கு ராதா சவுகான் தலைமை வகிப்பார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share