தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து, தமிழகத்திற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் ஆந்திராவிற்குச் சென்றுவிட்டதாகத் திமுக உள்ளிட்ட பல தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா நேற்று முன்தினம் (ஜூன் 22) சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர் சந்திப்பில் ஒரு பட்டியலை வெளியிட்டிருந்தார். அதில், “முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் 25 பெரிய தொழில் முதலீடுகள் பிற மாநிலங்களுக்குச் சென்றன. குறிப்பாக, 3.3 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள் ஆந்திரா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்குச் சென்றுள்ளன” என்று குறிப்பிட்டிருந்தார்.
அமைச்சர் கீர்த்தனாவின் இந்தப் பேச்சுக்கு நேற்று கடும் எதிர்ப்பு தெரிவித்து, திமுகவின் முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நேற்று (ஜூன் 23) விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், “என்னால் இவர்கள் சொல்லும் எல்லாப் பொய்களுக்கும் புள்ளிவிவரங்களோடு பதிலளிக்க முடியும். தவெகவினர் அரசியல் விவாதத்தில் வெற்றி பெறுவதற்காகப் பல முதலீட்டாளர்களின் பெயர்களைச் சேற்றில் இழுத்துவிடாமல் இருப்பார்கள் என்று நம்புகிறேன். நேற்று முதல் பல தொழில்துறையினர் எனக்குத் தொலைபேசி மூலமாகப் பேசி, இந்த புதிய அரசின் பிரதிநிதிகள் விமர்சனங்களைக் கையாளும் விதமும், பொதுவெளியில் சேறுவாரி இறைக்கும் விதமும் குறித்து வருத்தம் தெரிவித்தனர். இதனால், உலகளாவிய முதலீட்டாளர்கள் முன்னிலையில் தமிழ்நாடு அவமானப்படுத்தப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. 2016-21 அதிமுக ஆட்சியை விட 5 மடங்கு அதிகமான முதலீடுகளை திமுக அரசு ஈர்த்த நிலையில், அந்தளவில் கூட அல்ல, உங்கள் ஆட்சிக்காலத்தில் எங்களைவிட இரண்டு மடங்கு அளவிலாவது முதலீட்டை ஈர்க்க முடிகிறதா என்கிற வேலையை உருப்படியாகப் பாருங்கள். அர்த்தமற்ற அரைவேக்காட்டு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு குறை பேசுவதை விட்டு, கொஞ்சமாவது செயல்படட்டும் தவெக அரசு” எனக் காட்டமான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.
இப்படியான சூழலில், ஆந்திர தொழில்துறை அமைச்சர் நாரா லோகேஷின் பதிவு ஒன்று அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் நாரா லோகேஷ் வீடியோ ஒன்றை பகிர்ந்து கூறியிருப்பதாவது:
“அரசியல் என்பது எவ்வளவு இரக்கமற்றதாக இருக்கக்கூடும் என்பதைப் பற்றி நான் பேசினேன். தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதில் முந்தைய திமுக அரசுடன் நாங்கள் மிகக் கடுமையாகப் போட்டியிட்டோம். சிலவற்றில் வென்றோம், சிலவற்றை இழந்தோம்.
ஆனால், முதலீட்டாளர்கள் யாரும் அரசாங்கத்தால் தங்களிடம் பணம் கேட்கப்பட்டதாக (லஞ்சம் கேட்கப்பட்டதாக)க் குற்றம் சாட்டி நான் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை. பாராட்ட வேண்டிய விஷயங்களைப் பாராட்டித்தான் ஆக வேண்டும். திமுக அரசு முதலீட்டுச் செயல்முறைகளை மிகவும் சுத்தமாகவும், தொழில்முறையாகவும் நடத்தியது, அது நிச்சயமாகப் பாராட்டப்பட வேண்டிய ஒன்று” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
தவெக – திமுக இடையே முதலீடுகள் குறித்து காரசாரமாக விவாதித்துக் கொண்டிருக்கும் வேளையில், அண்டை மாநில அமைச்சரின் இந்தப் பதிவு தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
