மின்வெட்டு, விவசாயிகளின் பிரச்சினைகள், பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு பற்றியோ அல்லது நீங்கள் அள்ளி வீசிய வாக்குறுதிகள் பற்றியோ ஒரு 5 நிமிடமாவது பேசுங்கள் முதல்வரே என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் நேற்று பேசிய தமிழக முதல்வர் ஜோசப் விஜய் குட்டிக்கதை ஒன்றை கூறினார். அப்போது, “ஒரு ஊரில் பெரியவர் ஒருவர் வெயில் அதிகமாக இருப்பதாகத் தெரிவித்து, கண்களின் மேல் கை வைத்துக்கொண்டு தேடினார். அருகில் இருந்த சிறுவன் ஒருவன் ‘என்ன தேடுறீங்க?’ என்று கேட்க, அதற்குப் பெரியவர் ‘உங்க அப்பா இங்க இருப்பார் என்று சொன்னாங்க, அவரைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன். உங்க அப்பாவைக் காணோம்'” என்று எதிர்க்கட்சியான திமுகவை மறைமுகமாகச் சாடினார். அதேபோல், காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவடைந்த சமயத்தில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்து காட்டிய சைகையையும் முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் செய்து காட்டினார்.
முதல்வர் விஜய்யின் இந்தப் பேச்சுக்குச் சமூக வலைதளங்களில் திமுகவினர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:
“சார் நான் ஒரு ஆக்ஷன் பண்ணிக்கலாமா!?
நாளைய தீர்ப்பு தொடங்கி, இன்று மக்களின் தீர்ப்பால் முதல்வரானது வரை திரு.விஜய் அவர்களின் நடிப்பு நன்றாகவே வளர்ந்துள்ளது… வாழ்த்துகள்!! ஆனால், பஞ்ச் டயலாக் பேசுவதும், விசில் அடிப்பதும், குட்டிக்கதை சொல்வதும் எனச் சட்டமன்றத்தை Shooting Spot ஆக மாற்றுவது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல….
‘5 நிமிஷம் பேசுனதுக்கே என்னாச்சு தெரியும்ல’ என்று பஞ்ச் அடிக்கும் முதல்வர் அவர்களே, அதையேதான் நாங்களும் சொல்கிறோம். மின்வெட்டு, விவசாயிகளின் பிரச்சினைகள், பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு பற்றியோ அல்லது நீங்கள் அள்ளி வீசிய வாக்குறுதிகள் பற்றியோ ஒரு 5 நிமிஷமாவது பேசுங்க….
Reels-அ விட்டுட்டு Reality-க்கு வாங்க!!!” என தெரிவித்துள்ளார்.
