நீட் மறு தேர்வு பயம் காரணமாக 19 வயது மாணவி கோவையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுததி உள்ளது.
கோவை புதூர், பார்க் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் பிரபு. கோவை மாவட்ட டாஸ்மாக் சி.ஐ.டி.யு (CITU) தொழிற்சங்க மாவட்ட செயலாளராக செயல்பட்டு வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது மூத்த மகள் அனுகீர்த்தனா (19), எட்டிமடை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து, நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தார்.
சிறு வயது முதலே மருத்துவர் கனவோடும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற லட்சியத்தோடும் இருந்த அனுகீர்த்தனா, நீட் தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்து கடந்த ஆண்டு தீவிரமாகப் படித்துத் தேர்வு எழுதியிருந்தார்.
மறுதேர்வு அறிவிப்பால் மன உளைச்சல்:
மருத்துவப் படிப்பு சேர்க்கைக்காக அவர் ஆவலோடு காத்துக் கொண்டிருந்த சூழலில், கடந்த முறை நடந்த நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு காரணமாக அனுகீர்த்தனா கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்.
“மீண்டும் தேர்வு எழுதினால் தேர்ச்சி பெற முடியுமா?” என்ற அச்சத்தில் இருந்த அனுகீர்த்தனா, இன்று அதிகாலை தனது சித்தப்பாவிற்கு வாட்ஸ்-அப்பில் ஒரு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு, வீட்டில் உடல் வலிக்காக பயன்படுத்தி வந்த தைலத்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அதிகாலையில் இந்த வாட்ஸ்-அப் தகவலைப் பார்த்துப் பதறிய அவரது சித்தப்பா, உடனடியாக வீட்டிற்கு வந்து பார்த்தபோது அனுகீர்த்தனா மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து, அவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அனுகீர்த்தனா பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் பத்மநாதன், “எங்கள் கட்சி குடும்பத்தைச் சேர்ந்த டாஸ்மாக் பணியாளர் செந்தில் பிரபுவின் மகள் அனுகீர்த்தனா நீட் தேர்விற்குத் தயாராகி வந்தார். ஏற்கனவே நீட் தேர்வு எழுதிய நிலையில், மீண்டும் மறுதேர்வு எழுத வேண்டும் என்ற அறிவிப்பால் அவர் கடும் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். நேற்று இரவு 2 மணிக்குத் தன் சித்தப்பாவிற்கு வாட்ஸ்-அப்பில் செய்தி அனுப்பிவிட்டு, தற்கொலைக்கு முயன்றுள்ளார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.
மேலும் பேசிய அவர், “நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாகத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது நாடு முழுவதும் உள்ள 21 லட்சம் மாணவர்களுக்குப் பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, இந்த நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்” என்று தெரிவித்தார்.
