கௌதமி சொத்து மோசடி வழக்கு: சென்னை, மதுரையில் அமலாக்கத்துறை சோதனை!

Published On:

| By Pandeeswari Gurusamy

நடிகை கௌதமியின் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள சுமார் ரூ.25 கோடி மதிப்புள்ள நில சொத்துகளை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்த வழக்கில், அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் இன்று (ஜூன் 17) சென்னை மற்றும் மதுரை உள்ளிட்ட 6 இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2004-ம் ஆண்டு, நடிகை கௌதமி புற்றுநோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த சமயம், அவரது மகள் சிறுமியாக இருந்தார். அந்த மிகக் கடினமான காலகட்டத்தில் மருத்துவச் செலவுகளுக்கு காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இருந்த தனக்குச் சொந்தமான நிலத்தை விற்க முடிவு செய்த கௌதமி, தனக்கு நெருக்கமானவராக இருந்த சென்னை அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தனது சொத்துகளை நம்பி ஒப்படைத்தார்.

ADVERTISEMENT

ஆனால் அழகப்பன், அவரது மனைவி நச்சாள் மற்றும் குடும்பத்தினர் போலி ஆவணங்கள் தயாரித்துச் சொத்துகளைத் தங்கள் பெயருக்கு மாற்றியதாகவும், பெரும் தொகையை மோசடி செய்ததாகவும் கௌதமி குற்றம் சாட்டியுள்ளார். இதனால் தான் பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்ததாகவும், அசையா சொத்துகளைக் கூட பராமரிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

புகார் மற்றும் கைது:

2023-ம் ஆண்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கௌதமி புகார் அளித்ததைத் தொடர்ந்து, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. விசாரணையின் அடிப்படையில் அழகப்பன், அவரது மனைவி நச்சாள், மகன் சிவா, மருமகள் ஆர்த்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ADVERTISEMENT

அமலாக்கத்துறை தீவிரம்:

இந்த மோசடியில் பல கோடி ரூபாய் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடைபெற்றிருப்பதாகக் கண்டறியப்பட்டதால், அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியது. இதன் ஒரு பகுதியாகவே இன்று காலை முதல் சென்னையில் அண்ணா நகர், வானகரம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகள் மற்றும் மதுரையில் உள்ள அழகப்பன் தொடர்பான வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 6 இடங்களில் சோதனை தொடங்கியுள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share